28 January 2010

சென்னைச் சங்கடம்

நல்லா வெச்சாங்க சென்னை சங்கமம்! 'சென்னை சங்கடம்'னு பேரு வெச்சுருக்கலாம்! பின்ன என்னங்க? ஊர்ல அவனவன் படுத்துருக்குற பார்க்கையெல்லாம் தூசி தட்டி, அங்கங்க விழா நடத்தினாங்க! ஆனா, சர்வ வல்லமை படைத்த கொசுவை இவங்களால துரத்த முடிஞ்சதா?

சங்கடத்துல ஒரு சாம்பிள்: நல்லா தூக்க கலக்கத்துல ஆடற பெருசுங்க 4 வேட்டிய மேல போர்த்திகிட்டு, மெதுவா ரவுன்டு கட்டி ஆடினாங்க. எதோ ஆதிவாசிகள் நடனமாம். பார்த்த நமக்கே தூக்கம் வந்தது! அப்புறம் கொஞ்சம் மோகன்லால் மாதிரி இருந்த பரமசிவனும், பொம்பள வேஷம் கட்டின ஆம்பளை காளியும் சும்மா சுத்தி சுத்தி மிரட்டுனாங்க! மகிஷாசுர மச்சினி ஸாரி, மர்த்தினி ஆட்டமாம். அதைப் பார்த்த பையன் வீட்ல வந்து, நாக்கைத் துறுத்திகிட்டு, தங்கச்சிங்களைப் பார்த்து, 'வே' ன்னு கத்திகிட்டே வெரட்டுறான்! என்னடான்னா, 'நான் காளி' அப்படீங்கிறான்! ஆஃப்டர் எபஃக்டு!

சாம்பிள் 2: மேல்ஸ்தாயி போன பாடகி அவசரமா சறுக்கி கீழ்ஸ்தாயில டர்றானது, திருவாளர் இலவச ஊசியாரால் தான்! ஆமாம், இலவச டி.வி. இலவச பீவி, மன்னிக்கணும் அடுப்பு, இலவச பட்டா, கம்மி விலைல சல்பேட்டா (டாஸ்மாக்) ன்னு கொடுக்கறதோட சீசன் ஸ்பெஷலா இந்த இலவச ஊசியாளர் உற்பத்தியும் தமிழ் நாட்டுல ஓஹோன்னு இருக்கு!

சரி, கொசுதான் நம்மளை சும்மா விட்டதா? அங்க ஆட்டம் சூடேற சூடேற, இங்க கொசுக்களின் ரத்த ஆட்டம் அதிகமாகி, சில கொசுக்கள் குடிச்சு, குடிச்சு நகர முடியாமல், வெளியேறும்

கூட்டத்துல நசுங்கி செத்ததா கேள்வி!

நான் போனது கடைசி நாளா போயிருச்சு! அதான் வினை! ஆட்டம் முடியறதுக்குள்ள, ஸைன் போர்டு கான்டிராக்ட் ஆளுங்க, பட்டி தட்டியெல்லாம் பிரிக்க ஆரம்பிச்சாங்க! அங்கங்க போர்டு கழட்டின இடத்துல, பேனர் குத்தின பின்னுங்களையும், ஆணிங்களையும் போட்டது போட்டபடி போயிட்டானுங்க! வெளில பைக்கை பார்க்கிங் செஞ்ச இடத்துலயும் ஆணி இருந்திருக்கு! என் கெட்ட நேரம், பைக் டயரு அதுல ஏறி, முன் டயர் பங்சர்! முன்னாடி உட்கார்ந்திருக்கிற சின்ன பெண்ணோ, "என்னப்பா, போர் அடிக்குது, ஏறி ஓட்டுப்பா, என்னப்பா உருட்டிகிட்டு வர?" என்று நுணத்த, பசியோடு, பக்கத்துல இருக்கும் பஞ்சர் கடை தேடி பொண்ணு, பொண்ணு உட்கார்ந்த வண்டி, ரெண்டையும் தள்ளிகிட்டு போறதுக்குள்ள, நமக்கு நாக்கு நுரை தள்ளிடிச்சு!

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தள்ளுனதுல, அடி வயிரு வலியும், பசியும் ஆளை அடிச்சு போட்டுருச்சு!

கொசுக் கடியை நாம் மறந்தாலும், அது நம்மளை மறக்காது போலிருக்கு!

ர்ர்ர்ரொம்ப ஆராய்ந்து கண்டுபிடிச்ச ‘கொசுறு செய்திகள் இதோ:

சின்னதா ஓமக்குச்சி ரேஞ்சுக்கு இருக்கும் ஒரு ஸைலண்ட் கில்லர் கொசு, சாம்பல் கலர்ல இருக்கும். இந்த கொசுவும் ரத்தம் குடிக்குமாங்கிற

கேஸ்! கடிச்சப்புறம்தான் தெரியும், கடிச்ச எடத்துல் ஒரு குட்டி மலை உருவானது!. எரிச்சல் ரெண்டு மூணு நாளுக்கு இருக்கும். மதுரை ஏரியால இதுதான் கிங்.

இன்னொண்ணு உடம்புல வரி வரியா வீபூதி பூசி விடிகாலைல வெளிச்சத்துல அலையும். அத நம்பவே நம்பாதீங்க. எங்க மார்கழி மாசத்துல் உடம்பெல்லாம் விபூதி பூசி திருவெம்பாவையோ இல்ல நாமம் பூசி திருப்பாவையோ சொல்லக் கிளம்புதுன்னு!

அதுக்கு நான் வெச்ச பேர் ‘ஜீப்ரா கொசு. கடிக்கிறது fast food மாதிரி fast attack. யோசிக்காது, அப்படியே attack and suck! அப்புறம்தான் கொசு பத்தி விபரம் தெரிஞ்சவங்க, இந்த டைப் கொசுதான் சிக்குன்குனியா பரவக் காரணம்னு இப்ப கண்டு பிடிச்சிருக்காங்க!

சிக்னு கடிச்சுட்டு குனியாம போய்கிட்டே இருக்கும், சிக்குன்குனியா கொசு. வேஷத்த வெச்சு நம்பாம கைதட்டி அடிக்க வேண்டிய மிக கொடிய வில்லக் கொசு இது. முக்கியமா, காலைல வாசல்ல உட்கார்ந்து பேப்பர் படிக்கிற பெரிசுங்க, கோலம் போடுற பொண்ணுங்க (அதெல்லாம் யாரு இப்ப போடுறாங்கங்கறீங்களா, கிராமத்தில, சில கிராமத்துல பார்க்கறேனே!!) காலைல இந்த கொசுதான் அதகளம் பண்ணும். உஷார் பேப்பராலேயோ, கோல டப்பாவாலேயொ சம்ஹாரம் பண்றதுதான் ஒரே வழி!

புதுசா இப்ப வந்திருக்கிறது ராஷஸ கொசு. இது சிட்டிலதான் வளரும் போல! வளமா, மெடொனால்டு, கெண்டகின்னு சென்னை மாநகரத்துல சாப்பிட்டு வளர்ந்து, அசுர சைஸ்ல வளர்ந்து இருக்கு, வெயில் காலத்துல அதிகம் பார்க்கலாம். Heat resistant கொசு போல! இது ரத்தம் அதிகம் குடிச்சு, ஹெலிகாப்டர் சைஸுக்கு பறந்து வந்து ஈசியா கைக்குள்ள மாட்டிக்கும். உடம்பு அப்படி! சப்! பசக்! அவ்வளவுதான் பரலோகப்ராப்தி ரஸ்து! நல்லதுக்கு நாலு தப்பு பண்ணா பரவாயில்ல! (நாயகன் டயலாக்) வீட்ல நாலு பேர சிக்குன்குனியா, மலேரியால சிக்காம காப்பாத்த நாலு கொலை பண்றது தப்பில்ல. ப்ளூ க்ராஸ் ஆளுங்க அதை (கொசு வதை) தடுக்க கொடி தூக்காம இருக்கணும்!

இன்ன பிற ஆராய்ச்சி முடிவுகள்

கருப்பு, கருநீலம், கரும்பச்சை, காட்பரீஸ் ப்ரவுன் போன்ற அடர்த்தியான நிறங்கள் போட்டுக்கிட்டா, அது கொசுவுக்கு வெத்தல வைக்கிராப்ல. கட்டாயம் கடிக்கும். படுக்கை விரிப்புகள், தலையணை விரிப்புகளில் கூட கருப்புக்கு தடா.

அதேபோல், வெளியே மாலை வெளிச்சம் அதிகமா இருக்கும், வீட்டுக்குள்ளே இருட்டு சூழும் நேரத்துல, படுக்கை, மேசை, நாற்காலிகளை தட்டிவிட்டால், உட்கார்ந்திருக்கும் கொசுக்கள் அவசரமா, வெளிச்சத்தை நோக்கி போகும். உடனே. கதவுகள், ஜன்னல்கள் அடைத்து அப்புறமாய் வீட்டு விளக்குகள் எரியவிட்டால், கொசுக்கள் தொல்லையிலிருந்து மீளலாம். திறந்த ஜன்னலும், ஒளிரும் விளக்கும் இரவு நேரங்களில் கொசுவுக்கு நாம் போடும் ரத்தினக் கம்பளம்.

சரி, இருட்டப் போறது. கணினிய அணைச்சுட்டு, ஜன்னல் மூடிட்டு, வர்றேன். சங்கமம் சங்கடமானதுல வந்த ஞானோதயத்துல பண்ண கொசு ஆராய்ச்சி. இதற்காக காதுகிட்ட பாடும் கொசு, புரண்டுகிட்டே டிஸ்கோ ஆடும் கொசுக்களைப் பத்தியெல்லாம் ஜுவாலஜி ஆராய்ச்சியாளன்கிட்ட கேக்கறமாதிரி கேள்வியெல்லாம் கேட்டு பின்னுட்டம் போடக் கூடாது!

சரி, சங்கடத்துக்கு ஸாரி, சங்கமத்துக்கு போறதுக்கான முன்னெச்சரிக்கைகள்:

அடுத்த சங்கமத்துக்கு போகிறபோது, வெள்ளையுடுத்தி போவது, சிறிது கொசுக்களை அருகில் வருவதிலிருந்து மட்டுப்படுத்தும். கடைசிநாள் போகாதீர்கள், அப்படி போவதானால், வண்டியில் போகவேண்டாம். கால்நடையாக (! இப்ப மட்டும் மனுஷனாவா பலர் நடந்துக்கறாங்க? எருமையாட்டம் மிதிச்சுட்டு போனானே ஒரு டுபாகூர் என்று பக்கத்து வீட்டு ரத்னக்கா சத்தம் போடறது கேக்குது!) நடந்து போங்கள். பசங்களுக்கு கையில் காப்பு அல்லது மந்திரிச்ச தாயத்து கட்டி கூட்டிபோவதுநலம். கிராமிய இசைங்கிற பேர்ல வெளிறின மூஞ்சி, ரத்த சிவப்புநாக்கும் ரவுண்டுக் கண்ணுன்னு பலர் பயங்காட்டறது மத்தவங்க எப்படி ரசிக்கிறாங்களோ, சின்னப்பசங்க கட்டாயம டரியல் ஆகிடுவாங்க! அதுக்கு முன்னெச்சரிக்கையாகத்தான்!

27 August 2007

அமிர்தத்தை நம்பி அல்வாவை விட்ட கதை...


25.8.2007 சனிக்கிழமை, போகாத போகாதன்னு பாழும் மனசு சொன்னாலும், கேட்டேனா? அதான் அவஸ்தைப்பட்டேன்! எங்க போனதப் பத்தி இந்த புலம்பல்? ஐயா, பெரிய மனுசன் வீட்டுக் கல்யாணம், அதுவும் அரசியல் வாதி வீட்டு கல்யாண வரவேற்புக்குப் போனா, கரை வேட்டிங்க, நம்மள கரை கட்டிடுவாங்கன்னு நண்பர் சொன்னாரு. ஏதோ அப்பப்ப எழுதறயே, எனிஇந்தியன்.காம் ப்ரசன்னா ஒரு புத்தக வெளியீட்டு விழா நடத்துறாரு, வாய்யான்னு கூப்டாரு. நட்பு அங்கே தல தூக்க, அறிவா, மனசான்னு ஒரு போராட்டமே நடத்த, மனசோட பேச்ச கேட்டு, ஒண்ணுக்கு ரெண்டா ரெண்டு வரவேற்புக்கு போனேன்.ஒண்ணு சைவ வைணவ ஐக்கியம். இதுக்கு மேல வெவரமா சொல்ல முடியாது. நம்மளயும் 'மதம்' பிடிச்சவன்னு கட்டம் கட்டிடுவாங்க! உலக வங்கில வேல பார்க்கிற நண்பி, நண்பர் கல்யாணம். நண்பி, வரலாறு.காம் துவக்குனதுல ஒருத்தங்க. நாட்டிய தெரிஞ்சவங்க. வரலாற்றுப் பிரியை. அந்த சகவாசத்துல ஒரு எட்டு போய் எட்டிப் பார்த்தேன். அளவான கூட்டம், அமைதியான பேச்சு, உபசரித்தல். சாப்பாடக்கூட (ஆ, அது நல்லா இருந்திச்சுன்னு பின்ன தெரிஞ்சு என்ன ப்ரயோஜனம்? ஹ¤ம்! இதைத்தான் தலைப்புல அல்வான்னு சொன்னேன்) கை வெக்காம, நேரா ஜிம்னாஸ்டிக்ஸ், அக்ரோபாடிக்ஸ்லாம் செஞ்சு, வளச்சு நெளிச்சு, கொஞ்சம் மெதுவா போனா, கூட்டம் குறையும்னு கணக்கு பண்ணி பைக்கை வெரட்டி, ஒரு வழியா சாந்தோம், எம்.ஆர்.சி மண்டபத்துக்கு (மாளிகை??) (ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோவிலுக்கு முன்ன வரும்) போய் சேர்ந்தேன்.


ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் ராட்டை போட்டு மூவர்ணக் கொடி நட்டிருந்தாங்க. காருங்க வர்றதும் போறதும், போலீஸ் கூட்டம்னு, "சும்மா அதிறுதுல்ல" ன்னு சொல்ற மாதிரி கூட்டம்!அவனவன் வெள்ளையும் சொள்ளையுமாத் திரிஞ்சான் (ஸாரி, திரிஞ்சார்ர்ர்ர் - எங்க மரியாதை குறையுதுன்னு வீடு தேடி வந்து 'டின்' கட்டிடுவாங்களேன்னு ஒரு மருவாதைதான், ஹி, ஹி!). வயச மறைக்க தலைல சாயம், முகத்துல பவுடர். ஒரே கப்பு! ஒரு வழியா, மக்கள் வெள்ளத்துல நீந்தி, மேடை பக்கம் போனா, பெரிய க்யூ! இருக்காதா பின்ன? ராட்டை போட்ட மூவர்ணக் கொடி உள்ள கட்சி, தலைவரு, மத்தில அமைச்சரு, தஞ்சாவூர் பக்கம் பேரச் சொன்னா எதுற்ல வர்றவன் தோள் துண்ட கீழ எடுக்கற பெரிய குடும்பம், அவுங்க தங்கச்சிங்க கல்யாணம்னா சும்மாவா? க்யூல பக்கமா போயி நம்ம தலைய காட்டறதுக்குள்ள புதுசா கட்சி ஆரம்பிட்ட காப்டன் நடிகர், மூக்காலயே முருங்கக்கா ஜோக் பேசி டைரக்ஷனும் செஞ்ச கண்ணாடி நடிகர் மற்றும் அவர் மாஜி நடிகை மற்றும் தொழிலதிபி [தொழிலதிபருக்கு எதிர் பதம் ;) ] இவங்க வருகைக்காக நம்ம க்யூ அப்படியே ப்ரேக் அடிச்சுடுச்சு!
மீண்டும் ஊர்வலம் தொடங்கி (மெதுவா ஊர்ந்து போறதாலேயோ இந்த பேரு? சும்மா க்யூல நின்னா இப்படித்தான் , எதாச்சும் கன்னா பின்னான்னு மனசுல ஓடும்.)


மணமக்கள் பக்கம் போயாச்சு. வழக்கமா நான் அன்பளிப்புன்னா புத்தகங்கள் தர்றது வழக்கம். கொடுத்தேன். பொண்ணு ஞாபகமா, புதுமாப்பிள்ளைக்கு அறிமுகம் பண்ணி வெச்சாங்க. கை குலுக்கினேன். அடுத்த ஜோடிய வாழ்த்தறதுக்குள்ள (அக்கா, தங்கச்சிங்க ஒரே நாள் வரவேற்பு அதான்.) வேற ஒரு பெரிய மனுஷன் வந்ததால, அப்படியே நான் மேடைலேர்ந்து ஜகா வாங்க வேண்டியதாச்சு.ஒரே பேச்சுச் சத்தம். கீழே வேற உன்னி கிருஷ்ணன் தன் பக்க வாத்திய சகாக்களோட பாடிகிட்டு இருக்காரு. நாகரீகம் தெரிஞ்ச (?) பல அரசியல் ப்ரமுகர்கள் மேடை அருகேயே நின்னுகிட்டு பெரிய தொண்டைல பேசிகிட்டு இருந்தாங்க. பாடறவனும் சரி, அதை கேட்க முயற்சிக்கிறவனும் சரி, ரெண்டும் இந்த இடத்துல கேனப் பயலுங்க! இங்க பாடவும் வரக்கூடாது, அவரு பாடறாரேன்னு கேட்கவும் வரக்கூடாது. பாடகர் கதி என்னவோ? அரசியல் நிர்பந்தமோ இல்ல விடமின் 'M' பண்ண வேலையோ யாருக்குத்தெரியும்? இதுக்கும் கர்நாடக சங்கீதத்தை மதிக்கிற.திருவையாறு உற்சவத்தை வருஷா வருஷம் ஆதரிக்கிற குடும்பத்துக் கல்யாணம், இது!சரி, வந்த வேலையப் பார்ப்போம்னு, சாப்பாடு கூடத்துக்கு போனேன். சுமார் 15 நிமிஷம் அமைதி காத்தா இடம் கிடச்சாச்சு! உட்கார்ந்தாச்சு! சுத்தி பல கரை வேட்டிங்க (விருந்தோம்பலுக்குங்க, அதான தமிழர் பண்பாடு?) சுத்தி நின்னு மேற்பார்வை பார்த்துகிட்டிருந்தாங்க. புது மாப்ளை கோவில் கல்யாணத்துல எப்படி முழிச்சுகிட்டு நிப்பானோ, அப்படி, புதுசா வெள்ள டிரஸ் போட்டு பரிமாருற பசங்க முழியே சரியில்ல. மெதுவா சட்டையப் பார்த்தேன்.


நெஞ்சுல, என்னவோ எழுத்து போட்டு, கீழே,"நாகை" அப்படீன்னு எழுதியிருந்தது! சரிதான், புதுசா பட்டணம் பார்க்கறவங்கன்னு புரிஞ்சு போச்சு.
சரி, நம்ம புலம்பல் கதை.. சோத்துப் பட்டியலுக்கு வருவோமா? (இதைத்தான் அமிர்தம்னு நெனச்சு தலைப்புல போட்டேன்!)பாட்டில்ல தண்ணி வெச்சாங்க. அப்புறம், வெங்காய சட்னி, அடுத்து இஞ்சி சட்னி... ஸ்டாப், ஸ்டாப்... "என்னய்யா இது முதல்ல பாயாசம்ல வெப்பாங்க? கல்யாண வீட்ல எவனாச்சும் காரச் சட்னில பந்தி ஆரம்பிப்பாங்களா'' ன்னு கேட்டா, என் பதில்--> "ஓ!ஆரம்பிப்பாங்களே (அதான் இங்க பார்க்குறேனே! அட,பெரிய மனுசன் வீட்டு கல்யாணாம்பா, அப்படித்தான் வித்தியாசமா எதாவது செய்வாங்க, பொறு, பொறு..)அடுத்து குழிப்பணியாரத்த ஒருத்தன் இலைல வீசிட்டுப் போனான், அதுக்குள்ள இன்னும் ரெண்டு வெல்லப் பணியாரம், அடுத்து, செகப்பு கலர்ல வெந்தும் வேகாததுமா ஒரு சப்பாத்தி, ஒரு வட்டம் இடியாப்பம், அடுத்து ஒரு இட்லி, ஒரு தோசை, ஒரு ஜிலேபி, ஒரு பூரி, சாம்பார் சாதம், ஒரு கரண்டி குறுமா, ஒரு ஸ்பூன் ஊறுகா, ரெண்டு பெங்காலி ஸ்வீட், அப்புறம் ஒரு கரண்டி காய்கறி பிரியாணி, வேகமா வேகமா இலைல வந்து விழுந்தது. கொஞ்சம் தனித் தனியா இருந்தா ரசிச்சு சாப்பிடலாமே? சாப்பிடலாம்தான்; எவன் கேட்டான்? (அட, பெரிய மனுசன் வீட்டுக் கல்யானம்யா, உன்னய உள்ள உட்கார வெச்சதே பெரிசு). எல்லாம் குண்டு பொழிஞ்சாப்ல, மொத்தமா தள்ளிட்டு போயிட்டானுங்க!வரிசைப்படி, அப்படியே சொல்லீருக்கேன். சரி, சாப்பிடலாம் வாங்க.
முதல்ல பார்க்க சுமாரா இருந்த ஜிலேபி. வாயில வெச்சதுமே, பழைய கடை சரக்குன்னு தெரிஞ்சு போச்சு! சரி, ஆலா பறக்குற வாய்க்கு பெங்காலி ஸ்வீட்ட போடலாம்னா, அது கையோட ஜவ்வு மாதிரி ஒட்டுது! சரி, காலாவதியானது அப்படீன்னு விட்டுட்டேன். சைலண்டா சாம்பார் சாதத்த சாப்பிட்டு ஒரு மாதிரி செட்டிலாவோம்னா, அது வாய் கிட்ட கொண்டு போறச்சயே, வாந்தி நாத்தம் வந்துச்சு! கைய உதறிட்டு, பிரியாணிய எடுத்தேன். அதுவும் உறஞ்சு போயிருந்துச்சு! அந்த பணியாரங்களையாவது சாப்பிடலாம்னா, அதுங்கள வாய் கிட்டகொண்டு போனாலே, கெரசின் நாத்தம் அடிச்சுது! சரி, பசி. வேற வழியில்லாம அந்த இஞ்சி சட்னியும், வெங்காய சட்னியையும் வெச்சு, பிரியாணிய உள்ள தள்ளினேன். வயத்துக்குள்ள எரிய ஆரம்பிச்சுச்சு! தயிர் சாதத்தை போட்டு, வயத்த ஆத்தலாம்னு, அத உள்ள போட்டேன். தயிர் இருந்தாத்தான? அது கஞ்சிச் சோறு மாதிரி இருந்துச்சு. நோ எபெ·ட்! சரி, இலைல எதத் திங்கிறதுன்னு தேடறச்சயே, அடுத்த இலக்காரரு மெதுவா, " சார், விஜயகாந்த் வந்தாரா?" ன்னு கேட்டார். "ஆமாம்", னேன்! உடனே, "ஆ, தலைவா" ன்னு அப்படியே எந்திரிச்சு ஓடிட்டாரு! அவர் இலையப் பார்த்தேன். ஹ! நம்மள மாதிரிதான், எதத் திங்கிறதுன்னு யோசிச்சுட்டு, வழி தெரியாம, தலைவா, கிலைவான்னு செளண்டு கொடுத்துட்டு எந்திரிச்சு ஓடிட்டாரு!


சரி, இந்தப் பக்கம் பார்த்தேன். இன்னொருத்தன் என்னடான்னா, "இடியாப்பத்துக்கு, தேங்காய் பால் வெக்கலையா," ன்னு கேட்கப்போய், அதை கவனிச்ச ஒரு வெள்ள வேட்டி, 'இடி அமீன்' லுக் விட்டுட்டு போனான். கேட்டவன் கட்சி தொண்டன் போல! அப்படியே, கமுக்கமா, இடியாப்பத்த வாயில திணிச்சுகிட்டே அடங்கிட்டான்!அந்தாளு நாம பார்க்குறதுக்கு காத்திருந்த மாதிரி, "சார். எதோ "அறுசுவை" நடராசன்தான் இவங்க குடும்பத்துல பரம்பரை சமையல்னாங்க, இல்ல போல இருக்கே," ன்னார். நான், "அது, தஞ்சாவூர்ல நடந்த கல்யாணத்துல இருந்துச்சு போல; இங்க இல்ல," ன்னு அவருக்கு சொல்ற மாதிரி எனக்கும் சமாதானம் சொல்லிகிட்டேன்! அந்தப் பக்கம் உட்கார்ந்த அவர் சம்சாரம், "சார், தண்ணி கேட்டுகிட்டே இருக்கேன், தரமாட்டேங்கறாங்க," ன்னாங்க.


"தண்ணி காட்றாங்களா," ன்னு நான் நேரம் காலம் தெரியாம ஜோக் அடிச்சேன், அந்தம்மா, மொறச்சுகிட்டே, 'டக்'னு எழுந்து, என் கிட்ட இருந்த தண்ணி பட்டில தெறந்து, "மடக், மடக்"னு குடிச்சு, என்ன ஒரு மொற மொறச்சாங்க!அந்தப் பக்கமா வந்த பறிமார்றவர் கிட்ட," ஏங்க, பாயசம் உண்டா, மறந்துட்டீங்க போலருக்கே," ன்னு கேட்டேன். ஒரு 'பாய்ஸன் பார்வை' விட்டுட்டு போயிட்டார்! அடுத்த வந்த பந்தி விசாரிக்கிற கரை வேட்டி கிட்ட கொஞ்சம் சத்தமாவே கேட்டேன். அவர் 'லுக்' இன்னும் காரமா இருந்துச்சு! கொஞ்சம் இடை வெளி விட்டு, ஒரு வயசான பந்தி விசாரிக்கிற ஆளப் பார்த்து, "ஐயா, பாயசம்...". (இவரும் கரை வேட்டிதான்!) அவர் அதிசயமா, "இருங்க உள்ள விசாரிக்கிறேன்னு போனார். கண் முன்னாடியே, ஓரமா நின்ன ஒரு தாட்டியான இன்னொரு கரை வேட்டியப் பார்த்து எதோ விசாரிச்சார். அவர், நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு, 'பெரிச' அப்படியே, அங்கயே நிக்க வெச்சுகிட்டார். சரி, நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவுதான்னு, ஒரு வழியா கை கழுவ எந்திரிச்சாச்சு. போறதுக்குள்ள வயத்தெறிச்சல் (அட, சாப்பிடலயேங்கிற எரிச்சல் இல்லய்யா, உள்ள போன குடைச்சல் ரைஸ் பிரியாணி அண்டு சட்னி பண்ற வேலை!) அதிகமாக, அவசர அவசரமா, கையக் கழுவி, பால்கனிக்குப் போனேன். அங்க சக்கரத்துல சுத்தி என்னவோ வித்த காட்டி, ஐஸ்க்ரீம தந்துகிட்டிருந்தான். நமக்கு ஜலதோஷம்ங்கிறதுனால அதையும் விட்டுட்டு, வயத்த சரி பண்ண பீடா கிடைக்குமான்னு பார்த்தேன். கிடைக்கல. வாசலுக்கு வந்து தாம்புலப் பைய வாங்கிகிட்டு அவசரமா வெளியேறினேன். (பை நல்லா இருந்துச்சு - ஒரு பக்கம் ஒரு மணமக்கள் பேரு; இன்னொரு பக்கம் இன்னொரு மணமக்கள் பேரு). வாசல்ல பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஐயாவப் பார்த்தேன். மேக்கப் போட்டு, தலைக்கு சாயம் பூசி பெரிய மனுசங்களைப் பார்த்து,பார்த்து அலுத்த கண்களால, அதிசயமா, ஒரு பந்தாவும் இல்லாம, நெத்தில விபூதி பூசி, வண்டியேறிப் போற ஒரு முதலமைச்சர, அரசியல்வாதிய இப்பதான் பார்க்கறேன். அவ்வளவு எளிமையா இருந்தாரு. சரி, போக வர வண்டிக்கு ஆன பெட்ரோல் காசு வசூல்! ஒரு நல்ல மனுசன பார்த்தேன்னு மனச தேத்திகிட்டு, வீட்டுக்கு கிளம்பினேன்.ஒண்ணு முக்கியா சொல்லணும். மணப்பெண்கள்ல பெரிய பெண், நமக்கு தோழி. அமைதியான பெண். பெரிய வீட்டு பந்தா கொஞ்சம் கூட இல்லாதவங்க. நல்ல இலக்கிய, சரித்திர, கணிணி துறைல தேர்ச்சி பெற்றவங்க. அவங்க பேரைப் போலவே, மனசும் வெள்ளை, அவருக்கு அமைஞ்ச மாப்பிள்ளை பேரு நல்ல பொருத்தம். வாழ்க்கை ஒளின்னு அர்த்தம் வர்ற மாதிரி வடமொழி சொல்! அவங்க தனிப்பட்ட கடிதம் அனுப்பினாங்கங்கற காரணத்துனாலதான் இந்த வரவேற்புக்கு போனேன். சோத்துக்காக இல்ல; இருந்தாலும் நான் பத்திரிகைக்காரன் தானே? நல்லதோ,கெட்டதோ, எழுத்தா பதியலைன்னா, நமக்கெல்லாம் தூக்கமே வராதே? அதான் இந்த பதிவு. எதுக்குடான்னு கேக்குறீங்களா?சில பாடத்துக்குத்தான்:


1. நட்பை பாராட்டு. அதுக்காக, இடம் பொருள் தெரியாம போய அதைக் கொண்டாடாதே!


2. கல்யாண சாப்பாடு எப்படி இருக்கும்னு யாரும் யூகிக்க முடியாது; அதனால வீட்ல சொல்லி வை; ஒரு வாய் மோர் சோறாவது எடுத்து வெக்கச் சொல்லி!


3. நாம கல்யாணம் செய்யறப்ப, பல அயிட்டங்கள் போடணும்னு கணக்கில்ல. உருப்படியா ருசியா நாலு அயிட்டங்க போட்டாலும் போதும்!
என்ன, சரிதானே?சரிதானா? "எவண்டா எங்க தலைவர் வீட்டு சாப்பாடப்பத்தி தாறுமாறா எழுதினவன்?" ன்னு கேட்டு ஒரு கும்பல் என்ன கைமா பண்ண அலையலாம்! ஆனா ஒண்ணு நிச்சயம். அந்த சாப்பாட்டை சாப்பிட்டிருந்தாங்கன்னா, அவனவன், நான் அடுத்த நாள் நான் செஞ்ச மாதிரி, வேப்பல கட்டி, இல்ல ஈனோ, இல்ல இஞ்சிச் சாறு ..இப்படி எதையாச்சும் உள்ள தள்ளீட்டுதான், என்னய "போட்டுத் தள்ள" வரவேண்டி இருக்கும்! இல்லன்னா அம்பேல்தான்!(வந்த பெரும்பாலான தலைவர்கள் சாப்பிடாம, போனது எதுக்கு? ...அவங்க எல்லாந் தெரிஞ்சவங்க! அதான் அரசியல்ல இருக்காங்க! என்ன, சரிதானே நான் சொல்றது?)

25 December 2006

பெரியார் 'சிலை' யானார்!'

"எலேய் வெங்காயம், சூரமணி, எந்திரிடா"குர்..ர்....ர்ர்...குறட்டை விட்டுத் தூங்கறான்யா,எலேய், எந்திரி..."உஹ¥ம், கையிலிருந்த கைத்தடியால் ஓங்கி ஒரு போடு!"ஹ, யாரு?""ராமசாமி''சூரமணி கண் விழிக்கிறான். நெஜமாகவே பேந்தப் பேந்த விழிக்கிறான்!கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறான்!"யாரு? ஸாரி, நேத்து கனிமொழியோட மீட்டிங் பேசப் போயிட்டேன்ல? அதான். சரி, யாரு நீங்க? ராமசாமியா? ஓ, ஈ.வே.ராமசாமியா.. அயோ, பெரியாருங்களா!? தமாசு பண்ணாதீங்கண்ணா, சத்தியராஜுன்னு சொல்லுங்க! பரவாயில்லையே/ பெரியாரைத்தான் பார்க்க முடியல,அட்லீஸ்ட் சத்தியராஜ பெரியார் கெட்டப்ல பார்த்துட்டேன். இருங்க, கையும் ஓடல, காலும் ஓடல! படார்னு ஓடிப்போய் என் மச்சினன் கிட்ட போய் காமெரா மொபைல் வாங்கியாறேன். ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்குவோம். அப்புறம் என் ரேஞ்சே வேற!"
மீண்டும் தடியால் ஒரு போடு போடுகிறார்!
"உருப்படாத பயலே, யார்றா அது சத்தியராஜ், ஓ அந்த நடிகரா, எல்லாஞ் சரிதான் ஆனா அவரு என்னவிட ரொம்ப உசரம்; அத வெச்சு கூடவா நான் யாருன்னு கண்டு பிடிக்க முடியல?""தாடி வெச்சவனெல்லாம் பெரியாரா, குறும்பு!" படீரென தாடியை இழுத்துப் பார்க்கிறான்.மீண்டும் அடி! "அந்த சத்தியராஜ் சத்தியமா சோல்றேன், நான் பெரியாரேதான்!"நம்ப முடியாமல் பார்க்கிறான்."தலிவா; அதான் செல வெச்சுட்டோம்ல - அப்புறம் எதுக்கு எந்திரிச்சு வார?""நீங்க பண்ற குளறுபடி தாங்கலடா, அதான் வந்துட்டேன்!"
அதுக்குள் குப்பம் முழுதும் கூட்டம் கூடிவிட்டது!
எல்லாரும்'பெரியாரை'ப் பார்த்து, கட்டாயம் சத்தியராஜ் தான் என்று முடிவு செய்து,முண்டியடித்து, தொடவும், பேசவும் முயல்கிறார்கள்! பலர் பேச முற்படுகிறார்கள்!"தலைவா, என்னம்மா கண்ணு சவுக்கியமா?" அதற்கு அடுத்தவன், "பாத்தியா உங்கிட்டயே சவுக்கியத்த கேக்குறான்,டேய் தலைவர் கைல இருக்குற குச்சியால நிஜமாலுமே ஒரு குத்தாட்டம் ஆடினார்னா, நீ பீஸ் ஆயிடுவே! போடா அந்தாண்ட...! இன்னொருத்தன்," சத்தியராஜ் அண்ணே, நீங்க நெஜம்மாலுமெ பெரியாள்ணே! அந்த பக்கம் நமீதாவ நெம்பி, தொப்புள் க்ளோஸ் அப் பார்க்குறீங்க, இந்த பக்கம் வந்து பெரியாரா ஆக்ட் குடுக்கறீங்க, எப்படி தலைவா முடியுது!"
பெரியாருக்கு 'மண்டை காய'த் தொடங்குமுன், செய்திகேட்டு, நக்கல் கீரன் பத்திரிகை நிருபர் வந்து சேர்ந்துவிட்டார்!"ஹலோ, ஐ ஆம் 'சண்ட்ர ஷேகர்' ரிபோர்ட்டர் ஆ·ப் நக்கல் கீரன், உங்கல் வேட்டி எடுக்கணும், ஸாரி பேட்டி எடுக்கணும்,""ஹ¥ம்? உங்கல் வேட்டி எடுக்கணும், பேட்டி எடுக்கணும்னு, என்னப்பா தமிழ் கொலையா இருக்கு? அதுக்கு உன்னய வெட்டி எடுத்துறலாம்!" அவருக்கேயான பாணியில் சிரிக்கிறார்.பெரியார்," அது சரி, பேரென்ன சொன்ன, சன் ஷேடா? அப்படீன்னா ஜன்னல் நிழற்தட்டின்னுல்ல அர்த்தம்? வந்துட்டாய்ங்க! ஓ, சந்திரசேகரா? அப்ப, தமிழ்ல அழகா 'பிரைசூடன்'ன்னு சொல்லலாமே!""அது சாமி பேராச்சே, தலைவர் அதெல்லாம் சொல்லமாட்டார்" - கோபத்துடன் சூரமணி!"வெங்காயம்; ஒண்ணு சமஸ்க்ருதம், வடமொழி. இன்னொண்ணு தமிழ். எதுல சொன்னாலும், சாமி பேரு வருதே! நம்பிக்கை இருக்கோ இல்லையோ, தமிழக் கொல செய்யாம இருந்தாச் சரி!"சந்திரசேகர்: அப்ப மிஸ்டர்.பெரியார், உங்களுக்கு சாமி மேல வெருப்பெல்லாமில்லையா?""எவண்டா இவன் திருப்பி திருப்பி? சோம்பேறிப்பயலுவ, புளியோதரையும், பொங்கலும் ஓசில சாப்டு, அப்படியே ஓரத்துல சாஞ்சுக்கறான். விழிப்பு வந்தா, கைய நீட்டி பிச்ச கூட எடுக்கறான்! சரி, இப்படி சவுரியமா போச்சு, உக்கார்ந்த மாதிரியே கைல காசு, வாயில தோச கிடைக்குதுன்னு, அப்படியே கோவில்லயே உக்கார்ந்துர்றான்; அந்த மாதிரி பொருப்பத்த தமிழ் பயலுகள சுறுசுறுப்பாக்கணும்னு, கோவில் பக்கம் போகாதன்னு சொன்னேன்; மத்ததெல்லாம் விட்டுட்டான், ஆனா கோவில் எதிர்ப்பு மட்டும் செஞ்சுகிட்டிருக்கான்!"சரி, கோவிக்காதீங்க! வேற ...இடையில் ஒரு பொதுசனம் குறுக்கிட்டு,"அய்யா, நீங்கதான் பெரியாருன்னா, இந்த முல்லை பெரியாரு மேட்டரை வந்த கையோட சரி பண்ணுங்களேன்! ஒரே ரவுசா இருக்கு! அது உங்க இடம்தானா? பட்டா கிட்டா ஏதும் கொண்டாந்தீங்களா?இப்ப உங்க பேரு ரிப்பேரு பண்ற மாதிரி யாருக்கும் நடக்கக் கூடது பாருங்க, அதுக்குத்தான் சொல்றேன்!'
"அடபாவிகளா, எந்த ரெண்டையும் முடிச்சு போடுறதுன்னு விவஸ்தையே இல்லையா? அது தனி விஷயம். பெரிய ஆறுங்கறது, 'பெரியாறு' ன்னு மருவி, அந்த பேரு வந்துச்சு!
"சரி, எவன் என் சிலைய அந்த ஸ்ரீரெங்கம் கோபுரத்துக்கு எதிரே வைக்கச்சொன்னாங்க?"சூரமணி, "அய்யா, அப்ப நீங்க நெஜமாலுமே பெரியாரா? காலில் விழுகிறான்."உங்களுக்கு சேவை செஞ்சே வாழ்ந்திருக்கேன்; இப்ப எதொ தலைவன்னு என்னை சொல்றாங்க. உங்கள் கொள்கைங்க, இந்த சாமி கும்புட போறவங்க மனசுல படணும்னுதானே, நம்ம பயலுக எவனோ சிலை வெச்சான்? கவலை படாதீஇங்க தலைவரே, அவனுங்க கல்லுல வெச்சா உடச்சாங்கல்ல, நான் வெங்கலத்துலயே புது செலை செஞ்சு வெச்சுட்டேன்; இனி எவன் என்ன செய்றான்னு பார்க்கறேன். இதுமட்டுமில்ல, இன்னும்128 கோவில் வாசல்ல வெங்கல சிலை வெக்க ஏற்பாடுங்க நடக்குது!"
பெரியார் கோபமாக,"டேய், சாமி, உருவ வழிபாடு ரெண்டையுமே நான் தீவிரமா எதிர்த்தேன். இப்ப என்னடான்னா, போதாக்குறைக்கு ரொம்ப கனமா, என்னால எழுந்திருக்கவே முடியாதபடி, வெங்கலத்துல செஞ்சு, சாமி இல்லைன்னு சொன்ன எனக்கே,தினமும் அந்த பெருமாள் மூஞ்சீல முழிக்கிற மாதிரி பண்ணிட்டீங்களேடா! பாவி பயலுகளா! சிலை வேணம்னு சொன்னேன், இப்ப கண்ட காக்கா, குருவி எச்சத்த தலைலவாங்கிகிட்டு, நான் வெயில்லயும், மழைலயும் நிக்கணுமாக்கும்? தொண்டருங்கங்கற பேர்ல, கொள்கைக்குப்புறம்பா, எனக்கே சிலை, உருவ வழிபாடு! பாழா போச்சு போ! போதாக்குறைக்கு, மாலை, கற்பூரம், ஊதுபத்தி வேற!"
சூரமணி, "இல்ல தலைவரே, நமக்குன்னு எதாவது ஒரு வேல வேணாமா, அத்தன் அப்பப்ப..."
"அப்பப்ப, ஒத்து ஊதறயாக்கும்? முதல்ல அம்மாவோட கூட்டு, கொஞ்சம் கலெக்ஷன், அப்புறம் ஐயாவோட கூட்டு, சே, ஒரு தனித்தன்Mஆஇ இல்லாமலே போச்சு!"
"இல்லயே, நேத்துகூட, கனிமொழி, பொன்முடி கலந்துகிட்ட விழால, பெண்கள் உரிமை பத்தி பேசுனேனே?""வெங்காயம் உரிமை. நான் கேட்டது, சமுதாயத்துல சம உரிமை. நீ என்னடான்னா, வெவரம் இல்லாம, கோவில் அர்ச்சகர்களாக, மத்த சாதிசெனத்தோட பெண்களுக்கும் பங்கு தரணும்னு அந்த பொண்ணு கனிமொழி சொல்றச்ச, அதுக்கு ஆமோதிச்சு, "ஆமாம், ஆமாம், பொண்ணுங்களும் பூசாரி ஆகணும்,"னு ஓங்கி ஜால்ரா அடிச்சிருக்கே! மடையா, சாமியே இல்லேன்னேன், அப்புறம் பூசாரி எங்கயிருந்து வந்துச்சு? அது பொம்பளயா இருந்தா என்ன, ஆம்பளையா இருந்தென்ன? எதுக்குத் தான் மண்டையாட்டறேன்னு விவஸ்தை இல்லாம போச்சு! உனக்கு, நமக்குன்னு ஒரி கொள்கை வேணும்டா. ஆளுங்கட்சி,திடீர்னு கோவில்ல மணி அடிச்சா, நீ வெளக்கு பிடிப்ப போலருக்கே?"
உடன் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தொண்டன், அவசரமாக, "அதெல்லாம் இல்ல தலைவரே, எங்களுக்கு நீதான் சாமி. உனக்குதான் சிலை வெப்போம். ஏன் வேணும்னா, கோவில் கூடகட்டுவோம், சொல்லு தலைவா, நெஞ்சக் கீறி, "எங்க கடவுள் பெரியார்,"னு சொல்லி நெத்தில பொட்டு வெக்கவா,சொல்லு," என்று உணர்ச்சிவசப்பட்டான்!
"இவனுங்களை திருத்த முடியாது." என்று மீண்டும் பெரியார், வேறு வழியில்லாமல், 'சிலை'யானார்!

(இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள், கற்பவையே! பெயர் ஒற்றுமை, கருத்து ஒற்றுமைக்கு நானும் பெரியாரும் பொறுப்பல்ல!)

08 December 2006

தேன்கூடு போட்டிக்கு- குறும்பு பெற்ற அன்பு!

"சித்த சிவனேன்னு கிடக்கிறேளா? ஊர் வம்பை விலைக்கு வாங்கிண்டு?"
சங்கரன், சும்மா இருப்பாரா?
"சித்த சிவனேன்னா, இல்ல சித்தம் சிவனேன்னா? டீ, மங்களம் நீ தத்துவம்லாம் பேச ஆரம்பிச்சுட்டடீ!"- மாமா மாமியைக் கலாய்த்தார்!
உங்க குறும்பை என்கிட்ட காட்டாதேள். அப்புறம் ராத்திரி சாப்பாடு கூப்பாடுதான்!
மாமா கப்சிப்!
இப்படித்தான். இந்த ஊருக்குள் சங்கரய்யர் வந்ததிலிருந்து, தினம் நாம் கேட்கும் உரையாடல்தான் இது ! அப்படி என்னதான் செய்கிறார் சங்கரன்?
சாய்ந்த ஓடு அடுக்கப்பட்ட வாசல் திண்ணை. அதில் உட்கார்ந்து 'குடும்பப் ஒரு கதம்பம்' விசு போலவே, வருவோர் போவோரை 'ஓட்றது'தான் அவர் செய்யும் முக்கிய வேலை!
அம்மணி மாமி, ஏன் தலைய திருப்பிண்டு போறேள்?
தெரியாதா சங்கரா, நீ ஒத்த ப்ராம்மணன்; கண்ல பட்டுட்டே; நான் பேத்தி ஜாதகத்தை குடுக்க தஞ்சாவூர் வரைக்கும் போயிண்டிருக்கேன்."
அட, நாம்பாட்டுக்கு தேமேன்னு எங்காத்து திண்ணைல உட்கார்ந்துண்டிருக்கேன். நீங்களா பார்த்துட்டு, நான் கண்ல பட்டேன்னு சொல்றேளே? அத விடுங்கோ! நான் ப்ராம்மணன்னு உங்களுக்கு யார் சொன்னது? நான் ஆர்மிலே இருக்கறச்சே......." இப்படி மாமி வாயைக் கிண்டுவார்!
''டேய் கிச்சா, திருட்டு தம் எதுக்குடா? முடிஞ்சா மூஞ்சிக்கு நேரா அடி, இல்ல விடு, அதவிட்டுட்டு.."
"மாமா, என்ன சொல்ல வரேள்? நான் தம் அடிக்கிறேன், விடறேன், உங்களுக்கு என்ன?" என்பான் முகத்திலடித்தார்போல்!
மாமா, முகத்தை வெகுளியாக வைத்துக்கொண்டு, எனக்கென்னப்பா, உன் 'ஆளு' கலா கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பஸ் ஸ்டாண்டுக்கு போயிண்டிருந்தா, அதான் உஷார் பண்ணலாமேன்னு.." என்று கிச்சாவை கலவரப் படுத்துவார்!
போன மார்கழி மாசம். பெருமாள் கோவிலில் விடிகாலையில் அதிசயமாக, குளித்து விபூதிப் பட்டை அடித்துப்போய் நின்றார்! அருகிலிருந்தவர்களுக்கு 'என்னடா இது இப்படி?' என்று சங்கடம்!
அங்கு வந்த சேஷாத்ரி நேராகவே கேட்டுவிட்டார்! "யோவ், சங்கரன், சோழியன் குடுமி சும்மா ஆடாதே? நீர் காலங்கார்த்தால இங்கென்னய்யா பண்றீர்? அதுவும் இப்படி பட்டைய அடிச்சுண்டு?""வாரும் (இரு பொருள்பட) சேஷாத்ரி! சும்மா, திருப்பாவை கேக்கலாம்னு வந்தேன். ஏன் நான் என்ன 'அந்த' பட்டையா அடிச்சுட்டு வந்தேன்? விபூதி பட்டைதானே? கோடை குறுக்கப் போட்டா என்ன? நெடுக்கப் போட்டா என்ன? பக்தியோட போடணும். அவ்வளவுதான். முதல்ல உம்ம நாமத்திலயே ரெண்டு கோஷ்டி! ரவுண்டு கட்டி போட்டா, தென்கலை; சதுரமா போட்டா, வடகலை. அதுலயும் இந்த வாத்திமா, பாத்திமான்னு சப் டிவிஷன் வேறே! என்னகலையா இருந்தாலும் எச்சக்கலையா இருக்கப்படாது! அவ்வளவுதான். ராத்திரி, சிடி க்ளப்புக்குப் போய் 'ரம்'மி (இதுவும் இரு பொருள் பட) ஆடறச்ச ஆசாரம் எங்க போறது? பெருமாளே சுந்தரேஸ்வரரை தம் தங்கைக்கு கல்யாணம் பண்ணி வெச்சார், நீங்க என்னடான்னா, இந்துக்களுக்குள்ளயே பிரிவினை பண்றேளே!'' என்று போட்ட போடில் யாரும் வாயைதிறக்கவில்லை!
அதே சூட்டோடு சூடாக, "யோவ், பட்டரே, குழந்தைகளுக்கெல்லாம் பிரசாதம் குடுத்து அனுப்புய்யா .சாமி சொல்லிச்சா? பூசையப் போட்டு அப்புறமா பிரசாதம் தான்னு? சின்னக் குழந்தைகளெல்லாத்தையும் ஏங்க வெச்சுட்டு என்ன பூசை வேண்டியிருக்கு? " என்று ஒரு பிரச்னையைக் கிளப்ப, மாமாவுக்கு சப்போர்ட்டாய் குழந்தைகளின் தாயார்களும், இளைஞர்களுமாய், மற்ற சைடில் கோவில் பட்டர், சேஷத்ரியும், மற்ற பழம்பெருச்சாளிகளும் சேர, ஒரே அல்லோல கல்லோலமாய் போனது மார்கழி ஆரம்பம். இந்த முறை மாமாவுக்கு, மாமி, பெருமாள் கோவிலுக்கு போக 'தடா' விதித்துவிட்டாள்! மாமியின் பேச்சுக்கு மட்டும் கொஞ்சம் அடங்கும் மாமாவை, ஒரு நாள் கிச்சா கேட்டே விட்டான்!
"என்ன மாமா, எங்கள இந்த ஓட்டு ஓட்றேங்களே, மாமி சொன்னா மட்டும் அப்படியே 'பம்மு'றேங்களே? என்ன விஷயம் என்றதற்கு, மாமா ,
" கொஞ்சம் கிட்ட வாடா, என்று காதில், மெதுவாக, " அது லவ் அட் பர்ஸ்ட் சைட்! அந்த காலத்துலயே நான் பூனா கன்டோன்மென்டுல வேலைக்கு சேர்ந்தப்பவே, தமிழான்னு தெரிஞ்சு, அதுவும் எங்களவாளான்னு தெரிஞ்சு சைட் அடிச்சேன்! அப்ப அவங்க வீட்ல ஒரே எதிர்ப்பு. இவதான் ஒத்தக் கால்ல நின்னு லவ் மாரேஜை அரேஞ்சுடு ஆக்கினா; அதான், காதலுக்கு மரியாதை!" என்றார் கண் சிமிட்டியபடி! அந்தப்பக்கம் வந்த மாமி, "என்ன, காதுல குசுகுசுன்னு? என் கல்யாணத்தைப் பத்திதானே சொல்வார்? அன்னிக்கே இவர் இப்படி குசும்பர்னு தெரிஞ்சிருந்தா, இந்தாளை நான் கல்யாணம் பண்ணிண்டிருக்கவே மாட்டேன்!" என்றாள்!

மாமாவின் எதார்த்தப் பேச்சுகளால், மாலை வேளைகளில் இவர் திண்ணையில் இளசுகளின் பட்டாளம் நாளடைவில் கூடுவது வழக்கமாகிவிட்டது! அதனாலேயே, நிறைய பெரியவர்களின் 'ஆசிர்வாதத்தை' இவர் சம்பாதித்துக் கொண்டார்!

திண்ணையில் உட்கார்ந்தவாறே, ஆங்கில, தமிழ் பேப்பர் அத்தனையும் ஒரு ரவுண்டு முடித்துவிடுவார்! எல்லாருக்கும் தினவேளைகளில் அது லைப்ரரியாய் இருக்கும். ஓசிப் பேப்பருக்காக, மாமாவின் நக்கல்களை எல்லாரும் தாங்கிக் கொள்வார்கள்.
காதலிலிருந்து, கல்லூரி ஜோக் வரை, சங்கராச்சாரியார் அரெஸ்டிலிருந்து, குமுதத்தில் ஏன் நமீதா அட்டை இந்த வாரம் போடவில்லை என்பது வரையிலான எல்லா உலக செய்திகளும் இங்கே அலசப்படும். இதில் மாமிக்குத்தான் வேலை! எல்லாருக்கும் ஏதேனும் திங்கக் குடுக்குமாறு மாமா நிர்பந்திப்பார்! மாமியும் சளைக்காமல், சமாளிப்பார்!
ஆனால், இவர் குறும்புகள் சமயங்களில் சண்டையாகவும் மாறியிருக்கிறது! பாவம், அப்படித்தான், ஒரு முறை இவரது கேலிக்கு அளவில்லாமல் போய் மாமிகளெல்லாரும் வாசலில் சண்டைக்கு வந்து நின்றனர்! என்ன விஷயம்?
கமலம், கலகத்துக்கான காரணத்தை சொன்னாள்: "உங்க மாமாக்கு ரொம்ப கொழுப்பு! நேத்து பிள்ளையார் சதுர்த்தியோன்னோ? என் பொண்ணு ரமா, சும்மா கேட்டிருக்கா. ஏன் மாமா, அஷ்ட விநாயகரை இன்னிக்கு தரிசிச்சா புண்ணியமாமே? கோவில்லயும், மத்த சந்துகள்லயும் வெச்சுருக்கறத பார்க்க வரலியா"ன்னு!
வேணாம்னா போகவேண்டாம்.

அதுக்கு பதிலா, "இல்ல ரமா, ஆத்து வாசல்லயே அஷ்ட விநாயகரை தரிசனம் பாண்ணியாச்சுன்னு சொன்னாராம்!"
"எப்படி?" ன்னு கேட்டதுக்கு, "காலைல கோவிலுக்கு போன கமலம் மாமி, ரம்யா மாமி, சுகுணா மாமி, ரம்பா மாமி, ராவ், கடைக்கு போயிகிட்டிருந்த செட்டியார், பஸ்ஸை பிடிக்க ஓடிண்டு இருந்த சேஷாத்ரி, அவர் சம்சாரம் லெஷ்மி, அப்புறம் அவர் பையன் கோண்டு இப்படி ரெட்ட நாடீ சரீரமா நிறைய பேர் எதிர்லயே வரப்ப, நான் எதுக்கு பிள்ளையாரத் தேடிண்டு கோவிலுக்கு போகணும்?"னு சொன்னாராம்! இவர் நக்கலுக்கு அளவே இல்லையா? நாங்க என்ன உங்காத்துலயா சாப்பிடறோம்?.." என்று பொரிந்து தள்ளிக்கொண்டிருந்த போது, கேட்டுக் கொண்டே அங்கு வந்த சங்கரன், "ரமா மாமி, எதுக்கு உணர்ச்சி வசப்படறேள்? எனக்கு கொழுப்புங்கறேளே, உங்களுக்கெல்லாம் அது அதிகம் ஆனதாலதானே, தூக்க முடியாம இப்படி இங்க வந்து சண்டை போடறேள்? அதைக் குறைக்கிற வழியப் பாரும். அப்புறம், நானும், ரம்பா, திலோத்தமைக்கு அடுத்து நம்ம கமலம்தான்'னு ஊருக்கே தண்டோரா போட்டு சொல்றேன் போதுமா?" என்றார்!

நொடித்துக் கொண்டே போன மாமி கோஷ்டி, ஒரேயடியாக சங்கரன் வீட்டோடு பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டது!
மிலிடெரி பென்ஷன் பெற ஒரு முறை போஸ்ட் ஆபிசில் நீண்ட நேரம் க்யூவில் நின்று கடுப்பாகிப்போன சங்கரன், திடுப்பென உள்ளே நுழைந்து போஸ்ட் மாஸ்டரிடம், "என்ன சார் இது இவ்வளவு நாழி ஆறது? முதல்ல மேலே எழுதிப் போட்டு, கொஞ்சம் ஆம்பளை ஸ்டாfபா போடச்சொல்லுங்க," என்றார்!
"ஏன் என்னாச்சு?" என்றதற்கு, "ஆமாம், பாதி மாசம், மீதி மோசம். எப்படி வேல நடக்கும்?," என்றார்! கடுப்பான போஸ்ட் மாஸ்டரே, இவரது ரைமிங் அண்ட் டைமிங்கை நினைத்து சிரித்துவிட்டார்!
ஒரு கல்யாணத்தின் போது, மாமா, பையனிடம் மெதுவாகப் போய், "அம்பி, உன் கல்யாண போட்டோல நீ போட்டிருக்கிறது, 'ஜாக்கி' ஜட்டிதான்னு எல்லாருக்கும் பெர்மனன்டா காட்டப் போறயா?" என்றார். பையன் அவசரமாக, "என்னாச்சு மாமா?' என்றான்.
இதப்பாரு, முகூர்த்த வேட்டின்னு, லேசா ஒரு 8 முழம் பஞ்சகச்சத்தை உன்ன கட்டிக்க விட்டுட்டா. அது மெலிசா இருக்கறதால உள்ளாடை நன்னா தெரியறது! வயசான மாமான்னா பரவாயில்லை. நீ கல்யாணப்பையன்......xxxx...அமெரிக்கா கேசு, இதுக்கு முன்னால வேட்டி கட்டிருக்க மாட்ட.
அதென்ன பாலச்சந்தர் சினிமா கதாநாயகி மாதிரி இடுப்புத் துண்டை மேலே குறுக்கக் கட்டிண்டு? அத அவுத்து வேட்டிக்கு மேலே இடுப்பைச்சுத்திக் கட்டு, அப்படியே பின்பாகத்தையும் உன் உள் அலங்காரத்தையும் மறைக்கிறாப்பல!," என்றாரே பார்க்கலாம்! கீழெ குனிந்து பார்த்துக் கொண்ட பையன், அவசரமாய் துண்டை கீழே கட்டிக் கொண்டான்!
அடுத்து,மாமா, வீடியோ மற்றும் போட்டோகிராபரையே விரட்டிக்கொண்டிருந்தார். அவனும், எரிச்சலைடைந்து போய், பாதியிலேயே அம்போ என்று போய்விட்டான். அதற்கு அவர்," பின்னே, கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இருக்கா அவனுக்கு? கரெக்டா பொண்ணு மாப்பிள்ளைக்கு முன்னால நின்னுண்டு ரைட் ஆங்கிள் பாக்கறேன்னுட்டு, இவன் பிருஷ்டத்தை சபைல உட்கார்ந்து இருக்கிறவாளுக்கு காமிச்சுண்டு, போட்டோ எடுக்கறானாம் போட்டோ! பெரியவாள்லாம் தாலி கட்டறச்சே போட்ட அட்சதை, பூவெல்லாம், இவன் பின்னாலதான் போய் விழுந்தது!.." என்றதும் ஆமோதிப்பதுபோல், முன் வரிசை பெரியவர்களெல்லாம், தலையாட்டினர்!
அதற்குள் பையனின் அம்மா முன்னால் வந்து,"என்ன வோய் சங்கரய்யர், நீர் மனசுல என்ன நெனச்சுண்டிருக்கீர்? பிள்ளாண்டான் அமெரிக்காலேர்ந்து வரச்சயே,'என்னம்மா, மரபூர்ல கல்யாணமா? சுத்த கிராமமாச்சே, ஒரு நல்ல வீடியோ, போட்டோ கிராபர்கூடகிடைப்பாங்களோ இல்லையோ?''ன்னான். வந்தவனையும் விரட்டிட்டேளே?" என்றார் சத்தமாக.
மாமா, சடாரென பையிலிருந்து ஒரு டிஜிடல் காமிராவை உருவினார்.
"ரிடையராகி வரச்ச, இதுவரைக்கும் உருப்படியா ஆர்மி காண்டீன்ல ஒண்ணும் வாங்கினதில்லன்னு, வாங்கினது! இன்னிக்கிதான் உபயோகப்படறது!
பணம் கொடுத்தா, அவன் இதுவரைக்கும் எடுத்த போட்டோவெல்லாம் கொடுத்திடுவான். நம்மாத்து கல்யாண போட்டோவை வெச்சுண்டு அவன் நாக்கையா வழிக்க முடியும்? பாக்கி fஅன்க்ஷனை நான் போட்டோ எடுக்கறேன்!," என்றார்,கோதாவிலிறங்கி!
பையனின் அம்மாவிடம் போய், அவர் காதில் மட்டும் படும்படியாக, "மாமி, இது மரபூர்லயும் கிடைக்கும்! சரி, அவனை விரட்டின இன்னொரு காரணம் தெரியுமா?இந்தப்பக்கமா நின்னுண்டு, பொம்மனாட்டிகள் குனிஞ்சு ஆரத்தி எடுக்கற கண்ராவிய அவன் போக்கஸ் பண்ணான்; அதெல்லாம் ஆல்பத்துல வந்தா? அதான், மணமக்கள் சைடுல போய் எடுடான்னா, கேக்கலை. அவன் நெகடிவ்ல எல்லாம் வெச்சிருப்பான், அவனும் நெகடிவ் ஆளுதான்! போடான்னு விரட்டியடிச்சேன்; இப்ப நான் எடுக்கறேன் பாருங்கோ, இதுல உங்களை 25 வயசு பொண்ணாட்டம் காட்டப்போறேன்," என்றதும், யதார்த்தம் புரிந்து மாமி, மவுனமானாள்!
ஒருநாள் திடீரென மாமாவைக் காணவில்லை! வீடும் பூட்டியிருந்தது! வெயில் ஏறத்தொடங்கியதும் மெதுவாக செய்தி பரவி, எல்லாரும் திண்ணையில் கூடி விட்டனர்! எங்கு, எதற்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை! திண்ணை காலியாயிருந்ததை விட மாமாவின் பேச்சில்லாமல், ஊரே துக்கப்பட ஆரம்பித்தது!
ஒரு வாரம் முடிந்து, கோவிலில் கூடாரைவல்லி தினம். கோயிலில் "கூடாரைவெல்லும் சீர்கோவிந்தா! உன்னை பாடிப்பறைகொண்டு யாம் பெரும் சம்மானம்..."என பட்டர் ஓங்கிய குரலில் பூசை ஆரம்பிக்கவும், எதிரே திடுதிப்பென வண்டியில் வந்திறங்கிய சங்கரனைப் பார்த்து ஊரே ஆடிப்போய்விட்டது! மாமா கழுத்தைச் சுற்றி பெரிய பாண்டேஜ்! மாமியும் சோர்ந்து போய் தெரிந்தாள்! வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே அவர்கள் நுழையும் முன், நீ நான் என்று ஊரே உள்ளே புகுந்து விட்டது!
அமளி குறைந்ததும். மாமி மெல்லிய குரலில்," எல்லார்க்கும் சிரமம் தந்ததுக்கு மன்னிச்சுக்குங்கோ! அன்னிக்கி ராத்திரி இவர் திண்ணைல தூக்கம் வரலைன்னு உட்கார்ந்திண்டிருந்தப்ப, யாரோ கைல கோணிப்பையும் குத்தீட்டியுமா கோவில் பக்கமா போயிருக்கா! யாருன்னு இவர் சத்தம் போட்டதும், அவா ஓடப்பார்த்திருக்கா! இவர்தான் மிலிடரி ஆச்சே!வீரத்தக் காட்டி அவாள வழிமறிச்சு மல்லுக்கு நின்னுருக்கார்! கலகலப்புல ஒருத்தன் இவர் கழுத்துல ஓங்கி கத்தியால குத்திட்டான்! நல்லா தொண்டக் குழில இறங்கிடுத்து! அப்படியே கைத்துண்டை அதுல பொத்திண்டு மயங்கி விழுந்துட்டார். அதுக்குள்ள விடிஞ்சுபோச்சு! ஏது வம்புன்னு அவா ஓடிப்போய்ட்டா! இவர் யாருக்கும் தொந்தரவு தரவேண்டாம்னு, அப்படியே தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு காலங்கார்த்தாலே அழைச்சுண்டு போகச் சொன்னார். மூச்ச கைல பிடிச்சுண்டு, அங்க சேர்ந்து, உசிர் நின்னதே பெரிசு! இருங்க வரேன்!" என்று போய் உள்ளேயிருந்து ஒரு சாக்குப் பையை இழுத்துக் கொண்டு வந்தாள்!
அதை வாங்கிக் கீழே கொட்டினால், பஞ்சலோக விக்ரஹங்கள்! ராம லெஷ்மண சீதையும், அனுமாரும்!
பூசை முடித்து அப்போதுதான் அங்கு வந்த பட்டர், தயங்கியபடி, "என்ன ஷமிக்கணும். அடியேன் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன். அன்னிக்கி கோவிலுக்குள்ள இருந்த பஞ்சலோகங்கள் காணலைன்ன உடனே, எனக்கு 12 வருஷமா, கவர்மண்ட் தர வேண்டிய அந்த சம்பள பாக்கியும், என் குடும்பமும்தான் கண் முன்னால வந்தது! அதனாலதான், பேசாத மஞ்சளாலயும், சந்தனத்தாலயும் முகங்கள் செஞ்சு, பூவலங்காரதால விவரமா மூடி, விக்ரகங்கள் நிக்கறாப்லயே செஞ்சு வெச்சேன். பாவி, அதுக்கு ஆண்டவன் எனக்குன்னா தண்டனை தரணும்? இந்த சங்கரன் என்ன செஞ்சார்? போன மார்கழி மாசம் தேவையில்லாம அவரைச் சண்டை போட்டு விரட்டியடிச்சோம், அதான் பகவானே அவர் கைக்குப் போயிட்டார்! உசிரப் பணயம் வெச்சு அவர் நம்ம கோவில் திருட்டத் தடுத்திருக்கார்!," என்றபடி, பவ்யமாக கீழ் குனிந்து சிவாமி சிலைகளை வாங்கிக் கொண்டார்!
மாமா, கையால் ஜாடை செய்தார்; மாமி குரல் தழுதழுக்க, பையிலிருந்து ஒரு சிலேட்டுப் பலகையும், குச்சியையும் எடுத்துக் கொடுத்தாள்! மாமா, அதில் எதோ எழுதி ஊருக்கு காட்டினார்.
கிச்சாதான் சத்தமாக படித்தான், "நல்ல வேளை இனி நான் யாரையும் நக்கல் கேலி குறும்பு பண்ணமுடியாது, தொண்டைல இருந்து காத்துதான் வரும். வேணும்னா,ஒரு புல்லாங்குழலை சொறுகி வையுங்கோ! டிசம்பர் சீசனாச்சே? கொஞ்சம் பாட்டாவது வரட்டும்!"
அந்த நிலையிலும் தன்னையே குறும்பு செய்துகொள்ளும் சங்கரனைப் பார்த்து சிரிப்பதா, அல்லது அழுவதா என்று யாருக்கும் தெரியவில்லை! "ஐயோ மாமா" என்று எங்கும் கூக்குரல்கள் அழுகைகள் பிறந்தது!
அதற்கும் அவர் அசராமல், "நல்லா அழறேள், ரிகல்சர் கேட்ட மாதிரியிருக்கு! நான் மண்டையப் போட்டப்புறம் நல்லாவே அழுவேள், நம்பறேன்," என எழுதிக் காட்டினார்!
கிச்சா, ரோஷமாய், "மாமா, போதும் மாமா, வாயத் திறந்து கொஞ்சம் பேசுங்கோ மாமா," என்றி வீரிட, ஏக சமயத்தில் பலர், "மாமா, நீங்க கேலி பேசினாலும் பரவாயில்லை, பேசுங்கோ மாமா, .."
கமலம் மாமி, "நான் குண்டுதான், ஒத்துக்கறேன், பேசாம இருந்தது தப்புதான், நீங்க பாவம் பெருமாள காப்பாத்த போயி தொண்டை அடஞ்சு போயிட்டேளே, பாருங்கோ, இனி உங்க கேலிப் பேச்சக் கேக்கறதுக்கே குண்டாவே இருக்கேன், பேசுங்கோ மாமா," என அழத் தொடங்க, ...
பெற்ற ஒரே மகனை பார்டரில் பறி கொடுத்து, தானும் அதே மிலிடரியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்று, அங்கிருக்கப் பிடிக்காமல்,பூனாவிலிருந்து கண்தெரியாத இந்த மரபூருக்கு வந்த அந்த தம்பதியினர், ஊரின் ஏகோபித்த அன்பை உள்வாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்!

17 November 2006

வாஷிங் மெஷினும், மனுஷனும்!!

வீட்டில் தாய்குலத்துக்கு உதவி செய்ற, செய்யச்சொல்ற முற்போக்குவாதிகளே, வணக்கம்!

ஒரு தடவை, ஒரே ஒரு தடவை இந்த வாஷிங் மெஷின் வாஷிங் மெஷின்னு ஒரு புயலையொத்த கருவி இருக்கே, அத நல்ல படியா ஓட்டிக் காட்டிருங்க, என் வாழ்நாள் பூராவும், பெண் விடுதலை சம உரிமைன்னு பேசி, பெரும்பணி செய்ய சபதமெடுக்கறேன்!!
வேல செஞ்சவங்களுக்கு, இதப் படிச்சா ஆறுதல், 'சரி, நம்மள மாதிரி அப்பிராணி இன்னொருத்தனும் இருக்கான்'ன்னு; இனி செய்யப் போறவங்களுக்கு தங்களை தாங்களே காப்பாதிக்க 'டிப்ஸ்' :-

முதல்ல மெஷினோட ஆதி அந்தம் புரிஞ்சுக்கிறது நல்லது! முதல்ல அது தண்ணிய எப்படி உள் வாங்கும், எப்படி வெளியே துப்பும்னு தெரிஞ்சு வெச்சுக்கங்க!! அப்புறம் என்ன லோடிங், என்னன்ன துணிகள் எதோடு சேர்த்து போடணும், போடக்கூடாது, இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். எந்த சுவிச்சத் தொட்டா உள்ளே என்ன நடக்கும்னு தெரிஞ்சு வெச்சுக்கணும்.

சரி, ஒரு நாள் நாமதான் லீவுல நாளாச்சே, கொஞ்சம் பொண்டாட்டிக்கு உதவி செய்யலாம்னு போனேன். முதல்ல என் துணிங்க; பேண்ட் எல்லாம் எடுத்து, இடுப்புப் பட்டி, பாக்கெட், அப்புறம் சட்டை காலர்,க·ப் - எங்கெங்கெல்லாம் அழுக்குப் படியுமோ, அங்கெல்லாம் 'க·ப் அண்ட் காலர்' னு ஒரு திரவம்; அத தடவி நல்லா தேய்ச்சா, அழுக்கு போயிரும்னு சொன்னாஅருமை மனைவி; தேய்ச்சேன்; கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்னு தோணிச்சு! ஒரேடியா, துணி திரிஞ்சு பிஞ்ச மாதிரி இருந்தது! எதுக்கு வேணாம்னு, அடுத்த கட்ட நடவடிக்கைல இறங்கிட்டேன். அடுத்து சார்ட்டிங் (Sorting) - நம்ம நல்ல உருப்படின்னு எதெல்லாம் எடுத்து வெக்கிறோமோ, அதெல்லாம் நம்ம வீட்டம்மாவுக்கு, செகண்ட் சாய்ஸா தெரியுது!!

வெள்ளை அயிட்டமெல்லாம் தனியா, கலர் தனியா, பெண்டாட்டி சேலைகள் தனியா, உள்ளாடைகள், உரைகள், விரிப்புங்க தனியான்னு, ஒரு எக்ஸ்பர்ட் வண்ணான் தோத்த மாதிரி தனிப்படுத்தி வெச்சேன்!

அங்கிருந்து வந்தது எதிர்ப்பு - ''ஏங்க? உங்க பேண்ட் சட்டையோட என் சேலைங்களப் போட்டுறாதீங்க! கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தமே, அந்த பட்டுப்புடவையை 'ஸா·ப்ட் மோட்' ல போடணும்; வெள்ளைங்கள தனியா 'பவர் வாஷ்ல, ப்ளீச்சோட' போடணும்; அப்புறம் மீதி உங்க செளரியம்'' ன்னா!

மீதி? உரைங்க, விரிப்பு, என் துணிங்க! அதெல்லாம் ஒரு ரவுண்டு! இது எப்படியிருக்கு?

அம்மா- ''குழந்தைங்க துணி, எந்துணிங்களத் தொடாத; அத பூப்போல, அலசிப் போடணும்; கொஞ்சம் டெட்டால் துளி விட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான சுடுதண்ணில அலசி, அப்புறம் தொவச்சா, குழந்தைங்களுக்கு இதமா இருக்கும், இன்·பெக்ஷன் வராது''
பையன் - ''அப்பா, என் ராம்பொ ரெமோ விக்ரம் பேண்ட அம்மாவக் கேட்டுதொடுங்கப்பா, அவங்களுக்குத் தான் அதப் பத்தித் தெரியும்; உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் பத்தாதுப்பா'
வேற யாரும் பாக்கியான்னு சுற்றிப் பார்த்தேன்;

நல்ல வேளை- குட்டிப்பொண்ணுக்கு 5 மாசம்தான் ஆகுது; அது கூட என்னப் பார்த்து-'ஆங்' னு ஒரு சவுண்டு விடுது!! எல்லாம் நேரம்! சரின்னு, ஒரு வழியா எல்லாத்தையும் தரம் பிரிச்சு, போட்டாச்சு;

மெஷின் ஓட ஆரம்பிச்ச 10 நிமிஷத்துக்குள், 'கர்'னு சத்தம்; ஓடிப்போய் பார்த்தா, மெஷின் சுத்தி ஒரே தண்ணி!! மனைவி பின்னேயே வந்து - 'சொல்ல மறந்துட்டேன்; பைப் சரியா ட்யூபோட சேர்றது இல்ல. கொஞ்சம், தண்ணி ப்ரெஷர் அதிகமானா, லீக் ஆயிரும்!'' அப்படீன்னா! சரின்னு போயி உட்கார்ந்தா, அம்மா வந்து - `ஏண்டா, வயசானவங்களோ, பிள்ளைங்களோ தடுக்கி விழுந்தா என்னடா பண்றது? போயி அந்த தண்ணியெல்லாம் தொடச்சுடு' ன்னாங்க; சரின்னு போனேன்! குனிஞ்சு, தென்ன வெளக்குமாத்தால தள்ளிவிடுறச்ச, திடீர்னு, முதுகுல ஒரு 'லோடு'. பையன்! "ஹை! அப்பா, உப்பு மூட்ட தூக்குங்கப்பா" "இருடா, தண்ணிய தொடச்சிட்டு வரேன்.'' பையன் காது கொடுத்துக் கேட்டதா தெரியல! மீண்டும் வந்து குதிச்சான்; கடுப்புல, நிமிர்ந்தேன்; பட்டுனு கீழ விழுந்துட்டான். எந்திரிக்கப் போனவன் ஈரம் வழுக்கி விழுந்துறப் போறானேன்னு, தாவிப் பிடிக்கலாம்னு பாய்ஞ்சேன்; பிடிக்கப்போனப்ப, தண்ணி ஹோசைப் பிடிச்சு இழுத்துட்டேன் போல!! பிய்ச்சுகிட்டு வந்திரிச்சு! சர்னு தண்ணி பாய்ஞ்சு, கிச்சனெல்லாம் தண்ணி! அடிச்சதுல நேரா என் மூஞ்சில அடிச்சு, மீதி? தரையெல்லாம் தடாகம்!

ஒரு வழியா முகத்தத் தொடச்சு, எந்திரிக்கலாம்னா, முன்ன இருந்ததை விட அதிகமா தண்ணி தேங்கிருச்சு! பையனையும் தூக்கிகிட்டு அதுல மெதுவா அன்ன நடை நடந்து வெளிய வந்தா, பொண்டாட்டி எதிர்ல நிக்கிறா! ' ஒரு வேல ஒழுங்கா செய்யத் தெரியாதே' ங்கிற மாதிரி ஒரு லுக் விட்டா! சரி, மீண்டும் துடப்பக் கட்டை, துடைத்தல் படலம் ஆச்சு! முடிஞ்சுதா? ஒரு வழியா முடிச்சு மீண்டுறலாம்னு பார்த்தா, திடீர்னு வாஷிங் மெஷின் 'சாமி' ஆடிச்சு! மீண்டும் பொண்டாட்டி முகத்தப் பார்த்தேன்! போங்கப்பா- 'ஆடு திருடின..' ங்கிற பழமொழியெல்லாம் ஞாபகப்படுத்தாதீங்கப்பா! ''கீழ ரோலர் இருக்கு பார்த்தீங்களா? அதோட ஸ்டாப்பரை எடுத்துவிட்டுட்டா, மெஷின் ஆடாது, நிக்கும் ; இதுதெரியலையே'' ன்னு சொல்லிட்டு, அத சரிசெஞ்சா;

மெஷின் ஒரு ஆட்டம் போட்டு முடிஞ்சுது!

பொண்டாட்டி துணிங்க முதல் ரவுண்ட் முடிஞ்சு, அம்மா, குழந்தைகளோடது ஆரம்பிச்சது. கம்பவுண்டர் தோத்தான் போங்க! அப்படி கரெக்டா டெட்டால் அளவெடுத்து, சேர்த்து, துணிங்களை வெந்நீரில் வளாவி, மீண்டும் மெஷினுக்குள்ள போட்டேன். அடுத்த ரவுண்ட் ஓவர்.

''என்ன பாவா, சவுக்கியமா'' ன்னு கேட்டுகிட்டே என் மச்சான் எதிரில் வந்தான்? மனசுல திகில் பரவறதுக்கு முன்னமே, அவனே, '' பாவா, சாயங்காலம் கோவில்ல கச்சேரி கேக்கணும்; போயிடுவேன்! சரி,லீவாச்சே அக்காவையும், உங்களையும் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்!'' ங்கிறான்.

மனைவியோ, ''ஏங்க, அதான் கிச்சாவும் வந்துருக்கான். இந்த தண்ணி பைப் ரிப்பேரை ரெண்டு பேருமா பார்த்து முடிச்சுடுங்களேன்'' ன்னா. மச்சினனும், ஆர்வமாய் குழாயும் ஹோசுமாய் இணையும் இடத்தில் ஒரு பார்வை வீசிவிட்டு, '' சிம்பிள் பாவா. ஜஸ்ட் ப்·யூ மினிட் ஜாப். ஒரு பிலிப்ஸ் ஹெட் ஸ்க்ரூ டிரைவர், கொஞ்சம் எம் சீல், துடைக்கத் துணி இதெல்லாம் எடுங்க!'' ன்னான். என்ன கடையா வெச்சிருக்கேன்? சட்டைய மாட்டிகிட்டு கடைக்குப் போயிட்டு வந்ததுல, அவுட் ஒரு 50 ரூபாய்! மச்சான், கைய வெச்சான்!

" பாவா, தண்ணிய மூடுங்க. இப்ப, மெதுவா, தண்ணியே இல்லாதபடி துடைச்சுடுங்க; அப்புறம் எம் சீல் ஒட்டாது, சொல்லிட்டேன். ஓகே, இப்ப அந்த ஸ்க்ரூ டிரைவரால 4 ஸ்டார் ஸ்க்ரூ இருக்கு பாருங்க, அதுல ஒண்ணொண்ணா டைட் பண்ணுங்க- ஆங், அப்படித்தான், இப்ப லெப்·ட், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்,..." இப்படி, இடுப்புல கைய வெச்சுகிட்டு, சும்மா ரன்னிங் கமண்ட்டெரி கொடுத்துகிட்டே, அவன் வேல வாங்கறானே ஒழிய, ஒரு துரும்பக் கூட அசைக்கல. இதுல நடுவுல அம்மா, பேக்ரவுண்டு மியூசிக் " ரமா தம்பி ரொம்ப சுட்டி!! சரி, மச மசன்னு செய்யாதே, சீக்கிரம். இன்னும் ரெண்டு ரவுண்டு துணிங்க கிடக்கு!" என் காதுல இதெல்லாம் விழலே! கருமமே கண்ணாயினார், வில்லெடுத்த விஜயன் இப்படி என்ன அடைமொழி சொல்லி என்னைக் கூப்பிடலாம்! அத்தனை மும்மூரமா, அந்த 4 ஸ்க்ரூங்களை திருப்பிகிட்டேயிருக்கேன்; அது என்னவோ, டைட் ஆன மாதிரி தெரியல! வட்டமா இருந்த குழாய் வாயிதான், 4 ஸ்க்ரூ நடுல மாட்டிகிட்டு, ஒரு மாதிரி நெளிஞ்சு, 'ஓ' போடுது! கொஞ்சம் ஆர்வக்கோளாறிலே, அதிகமா அழுத்திட்டேன் போல! ஒரு ஸ்க்ரூ டப்னு ஒடிஞ்சு, பாதி மரையோட உள்ளயே உட்கார்ந்திருச்சு! அவ்வளவுதான், வீட்டுக்காரி கண்டு பிடிச்சுட்டா! "ஏன்ங்க, வேல தெரியலன்னா அதான் தம்பிகிட்ட கொடுக்கச்சொன்னேன்ல, ஏன் இப்படி தண்டம் வெக்கிறீங்களோ? அந்த பைப் ஹோஸ் ஜன்க்ஷன் 50 ரூபாய்". தம்பிகிட்டே திரும்பி, " என்னடா பண்றது" ன்னா. அவனும் பெரிய எக்ஸ்பர்ட் அனாலிசிஸ் பண்ற மாதிரி, சற்றே நெருங்கி உற்றுப்பார்த்துட்டு, (பைப்பத்தான், என்னை இல்ல), மேனேஜ் பண்ணீறலாம்கா; மேலயே, அப்படியே எம் சீல பூசச்சொல்லுங்க". " பாவா, மெஷின்ல வேல பார்க்குறச்சே என் கைல கொஞ்சம் அடி பட்டு இன்னும் புண் ஆறல. (ஆமாம், பெரிய ராக்கெட் லான்சர் செஞ்சான்! ஒரு சின்ன லேத் பட்டரைய சொந்தமா ஆரம்பிச்சு, அப்பப்ப என் கிட்டதான், ரா மெடீரியல் வாங்கணும், டூல்ஸ் வாங்கணும்னு சொல்லி என் ஆபீசுக்கே வந்து பணம் வாங்கிகிட்டு போற கொடுமைய எங்க சொல்ல?) நீங்களே கொஞ்சமா, ரெண்டுலயும் 50:50 கலந்து, ஒரே சிமென்ட் கலர் வர வரைக்கும் நல்லா உருட்டி, அந்த இடத்தச் சுத்தி போடுங்க!" ன்னான். சரி, நானும் சின்சியரா சப்பாத்திக்கு எப்படி மாவு பிசைவாங்களோ அந்த மாதிரி அழகா எம் சீல உருட்டி, ஜாயிண்டச் சுத்தி பத்து போடற மாதிரி போட்டுகிட்டிருந்தேன்; பின்னாலயே ரன்னிங் கமெண்டரி திரும்ப ஆரம்பம்! யாரு, திருவாளத்தான் மச்சான் மணிகண்டன் தான்!

"பாவா, கையில துணிய வெச்சு லேசா அழுத்திவிட்டு, பின்ன இன்னொரு ரவுண்டு போடுங்க, அப்பதான் நல்லா பதியும்"னான். துணி கையில, மரு கையில எம் சீல், வேல பண்றச்சயே, திடீர்னு தண்ணி பீச்சி முகரைல அடிச்சது!! நெத்தில ஆக்கர் வெச்ச மாதிரி, அந்த எம் சீல் விளம்பரத்துல வருவானே, போமன் இரானி? (முன்னாபாய் M.B.B.S ல பெரிய டாக்டரா நடிப்பாரே ஞாபகமிருக்கா?) ; [எம் சீல் போடாம, துணியால ஒழுகல மூட ட்ரை பண்ணுவான், முடியாது, உடனே பக்கத்துல இருக்குற துணிய சுத்துவான்; அப்புறம் கர்சீப், அப்புறம் கழுத்து டை; பின்ன கையில கிடைச்ச துணிய எடுத்து சுத்துவான், அது கடைசியில பக்கத்துல தரைய துடைக்கிற வேலக்காரம்மாவின் முந்தானைத் துணின்னு தெரிஞ்ச உடனே, பதறிப்போயி விலகப் போனால், அதற்குள்ளாக பொண்டாட்டி பார்த்துடுவாள், பய நொந்து நூலாயிடுவான்!] - இதே விளம்பரம் போலத்தான் நம்ம கதையும் ஆயிருச்சு!

என்னடா பிச்சுகிடுச்சுன்னு பார்த்தால், நம்ம பையலோட திருவிளையாடல்!! நானும் அப்பா போலத் திருகுறேன்னு ஸ்க்ரூ டிரைவரை எடுத்து 'நல்லா' ஒரே பக்கமா திருப்புனதுல, ஓ போட்ட பைப், ஓட்ட போட்ட பைப் ஆயிருச்சு!! மீண்டும் துடைப்பம், பக்கெட், துடைத்தல் படலம்! வேற யாரு? நான்தான்!

மச்சான், மெதுவா கழண்டுகிட்டான்.. ஒரு வழியா எல்லாத்தையும் சரி பண்ணி கடைசி பாக்கியான என் ரவுண்டு! போட்டு நிமிர்றேன், கரண்ட் போச்சு!! தனியா எடுத்து வெச்ச வெள்ளை (ஆபிசுக்கு போட்டு போற பனியன், சட்டைங்க) சொள்ளை (வீட்டுல உபயோகப்படுத்துற வேட்டி, துண்டு) எல்லாம் வெயிட்டிங்குல நிக்குது! இந்த ஆபிஸ் வெள்ளைக்கும் ஒரு கதையுண்டு!! பாடகர் கே.ஜே. யேசுதாஸ் சொன்னது! அவர் கஷ்டப் பட்ட காலத்துல, ஸ்டுதியோக்களுக்கு படை எடுக்கறப்போ, தினம் போட ஒரு சட்டைக்கு பிரச்னையா இருந்ததாம்; அப்ப நண்பர் சொன்ன யோசனைப்படி, வெள்ளைக்கு மாறிட்டாராம்!! ஒரே சட்டையை ராவோடராவா துவைச்சுப் போட்டாலும், பார்க்கறாதுக்கு, எதோ வெள்ளச் சட்ட போட்ட மதிரியும் தெரியும், பெரிய மனுஷன்னும் நெனைக்க சான்ஸ் இருக்கு! அவர் முன்னாலயே,'' பார்றா, எப்படி இருந்தவன், வெள்ளையும் சொள்ளையுமாப் போறான்'' அப்படீன்னாங்களாம்! அரசியல்வாதிங்க, பெரிய பெரிய மனுஷங்க பார்த்தீங்கன்னா, வைட் அண்ட் வைட்ஸ் தான்! அடியேனும் அப்படியே; பெரிய மனுஷன் மாதிரியும் தெரியும், யேசுதாஸ் மாதிரி நிலமைல இருந்தும் காப்பாத்தும்!! எப்படி? கரண்ட் வந்து, என் துணிங்கள ஒரு வழியா சொர்க்க வாயில் பார்க்க ...ஸாரி, மெஷின் வாயில் திணித்தேன். ரவுண்டு முடிஞ்சு துணிங்கள வெளிய எடுத்த எனக்கு ஷாக்!! எல்லாத் துணிங்களும் 16 வயசினிலே ஜானகியம்மா பாடினாப்ல "மஞ்சக்குளிச்சி அள்ளிமுடிச்சு,.. " வெளியே எட்டிப்பார்த்தன!! எனக்குத்தான் ஒரேடியா தண்ணில நனஞ்சு, காமாலை வந்துருச்சோன்னு, கண்ணக்கசக்கிப் பார்க்கிறேன்! இல்ல சத்தியமா, மஞ்சள் தான்!! எல்லா வெள்ளத்துணியும் மஞ்சளா மாறின 'மாயமென்ன, மாயமென்ன பொன்மானே'. மெதுவா, என் மாமியார் எட்டிப் பார்க்குறாங்க! "நீங்க எப்ப வந்தீங்க? இங்க என்ன எட்டிப்பார்க்கிறீங்க?"
"அதுவா மாப்ளை, பொண்ணையும் குழந்தைங்களையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சா, நான் மணிகண்டனோடையே வந்துட்டேன்; நீங்க பிஸியா இருந்தீங்களா, அதான் தொந்தரவு பண்ணல!"

"பின்ன இங்க இப்ப எதுக்கு வந்தீங்க?" "அதுவா, என் சேலை ஒண்ணு மெஷின் ஓடுதே,போடலாம்னு போட்டேன்!''

"சேலையா..~~~ எப்ப போட்டீங்க??"' பல்ஸ் இறங்கிப் போய் கேட்டேன்!
"உங்க வேல முடிஞ்சுதான்னு பார்க்க வந்தேன், அப்ப பாழாப்போன கரண்ட் வேற போச்சு. மெதுவா தட்டித் தடவி எப்படியோ போட்டேன். ஏன் ஏதும் ப்ராப்ளமா?''

என்னத்தச் சொல்ல, ''அடியே, நீதாண்டி ப்ராப்ளம்; துணியப் போடறேன்னு, ஒரு பொக்ரான் குண்டையே போட்டியேடி பாவி, உன் ரெங்கநாதன் தெருவோர சேலைக்கு என் வெள்ளைங்கதானா பலி???" என்று .... மனசுக்குள் பேசிகிட்டேன்.
( பொண்டாட்டி வந்து பார்த்தாள். நிலமை புரிஞ்சுகிட்டா அழகான ராக்ஷஸி!! அப்படியும் அவங்க அம்மாவை விட்டுக்குடுக்காமல், "ஏம்மா, உனக்கு ஏதும் வேணும்ன என்கிட்ட கேக்கக் கூடாதா? எதுக்கு அவர் கிட்ட பேச்சு?" ன்னு சொல்லி மாமியாரை க்ராஸ் ப·யரிலிருந்து மீட்டு, கூட்டிகிட்டு போயிட்டாள்! )

மெதுவாக அந்த மஞ்சக்குளிச்ச துணிங்களை வெளியில் மீட்டு, காயப்போட்டு, பக்கத்திலிருக்கிற டிரைக்ளீனரிடம் கேட்டால், "இது போகாதுசார்; ஆமா சார், சூப்பரா கலர் ஒரே மாதிரி இறங்கிருக்கே? என்ன சார் போட்டீங்க? நிறைய கஸ்டமருங்க கலர் டை பண்ணக் கேக்குறாங்க!" அப்படீன்னான்! "அதுவா, நான் புதுசா ஒரு மெஷின் வாங்கி, தொழில் தொடங்கிருக்கேன், அனுப்பி வை, கமிஷன் தரேன்!" ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்!! வேற என்ன செய்ய?

வீட்டுலயோ, பொண்டாட்டி, அப்படியே ப்ளேட்டைத் திருப்பிப் போட்டா! "யாரும் ஏதும் உள்ள போட்டாங்களான்னு ஒரு தடவ பார்த்துட்டு, வெள்ளைங்களை போடக்கூடாதா? ஒரு வேலைய எடுத்துகிட்டா சரியா செய்ய துப்பில்ல!!"

நானோ, மறுநாள் ஆபீசுக்கு எதைப்போட்டுகிட்டுப் போறதுன்னு மண்டையை உடச்சுகிட்டு, ஹைதர் காலத்துல கல்யாணத்துல கொடுத்த கலர் சட்டை, யார்யாரோ வெச்சுக் கொடுத்தது, விட்டுப் போனதுன்னு, எலி கணக்கா பெட்டியெல்லாம் குடைஞ்சு, வெளிய எடுத்தேன்!! பட்ஜட்டில் துண்டு விழுந்ததால், இந்த நிலை! அடுத்த மாசம் சம்பளம் வந்தாதான், ஒரு வெள்ளச் சட்டை வாங்க முடியும், அப்புறம் ஒண்ணு, இப்படி இந்தப் பொங்கல் போயி அடுத்த பொங்கல் வரைக்கும் அய்யாவோட வெள்ளை வாங்கும் படலம் இழுத்தால்தான், அதுக்கு அடுத்த வருஷமாவது, மீண்டும் வெள்ளையும் சொள்ளையுமாய் போகமுடியும்!!

சரி, சனியன் ஒரு ஞாயிற்றுக்கிழமையோட முடிஞ்சுதா? அதான் இல்லை! மறுநாள் ஆபிசுல அவனவன் புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறான்! ப்யூன் வேதாசலம் "சார், ஷோக்கா கீரிங்க சார்! இன்னா சார், புதுசா ஏதும் கனெக்ட் பண்றயா" ன்னு என்னப் பார்த்து கண்ணடிக்கிறான் பாவி!

வீட்டுக்கு திரும்பும் சந்து முனையில் உள்ள ஆட்டோ டிரைவர், வருஷா வருஷம் சபரிமலைக்கு போறவன்" சாமி, புது சொக்கால்லாம் போடறேங்க, நாங்க மலைக்கு போறம்னா மட்டும் எதும் டொனேஷன் கேட்டா தரமாட்டீங்கறியே" அப்படீன்னான்.

"எது கொடுத்தாலும் வாங்கிப்பியா?" "ஏன் சாமி, தா சாமி!" நேரா வீட்டுக்குள் போனேன், நேற்று மலர்ந்த (நொந்த) மஞ்சள் சட்டைங்களை, வேட்டிங்களை அவன் கிட்ட கொடுத்து, "இல்லாத சாமிமாருக்கு கொடுத்துடுப்பா" !

"சரி சாமி!" - வாங்கிக்கொண்டான்!!

சனியன் தொலைந்த சந்தோஷத்தில் "சாமியே சரணம் ஐயப்பா!" என்று கூவினதைக் கேட்டு, என்னமோ ஏதோன்னு பயந்து வாசலுக்கு ஓடி வந்தார்கள் என் மாமியாரும், அருமை மனைவி, மக்களும்!!

இம்மொபைல் ஆக்கும் மொபைல்!

மனுஷனுக்கு எது இன்றியமையாததோ தெரியாது, இப்ப 'மொபைல் இல்லாதார் வாழ்க்கை, இருந்தும் இல்லாதான் வாழ்க்கை' போலத்தான்!எங்கும் சிவமயம் போயி இப்ப எங்கும் 'செல்'மயம்!கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு. இப்ப 'செல்'லிருக்கும் இடமெல்லாம் 'செல்வாக்கு' இருக்குது!அப்பவே ஜோசியன் சொன்னான்.'செல்' லு போக பாக்கியிருப்பு - ன்னு!
இப்பதான் பிள்ளைங்களுக்கு செல்லு வாங்கிக் கொடுத்த அப்பனுக்கெல்லாம் புரியுது, பில் கட்றப்ப 'செல்' போக பாக்கிதான் (கைல) இருப்புன்னு!

மொபைல் உபத்திரவங்கள்:

சட்டை பையில வெக்கலாம்னா, ஹார்ட் அட்டாக் வரும்கிறானுங்க! சரி, பாண்ட் பாக்கெட்ல வெக்கலாம்னா, ஆண்மை குறைஞ்சுடும்னு பயமுறுத்துறாங்க! பின்னர் சொன்ன செய்தி மட்டும் நெஜம்னா, குடும்ப கட்டுப்பாட்டுத் துறை எல்லா லாரி டிரைவருக்கும் இலவச மொபைல் வழங்கலாம்! எயிட்ஸ்ஸாவது குறையும்!

மொபைல் வெச்சிருக்கிற பொண்ணுங்க பாடு, அதைவிட மோசம். சேல கட்றவங்க இடுப்புல சொருக முடியாது! சல்வார் கமீஸ் போடறவங்க நிலைமை கேக்கவே வேணாம்!
பார்த்தா, கழுத்துல தாலிய விட ஜெகத்ஜோதியா ஒரு நாடால கட்டி தொங்கப் போட்டு போவங்க, இல்ல சின்ன சைஸ் பைக்குள்ள மொபை(ய)ல உக்காரவெச்சு, மெடல் மாதிரி தொங்க விடுவாங்க!
தொங்க விடறதுன்னதும் வேற ஒரு மேட்டர் ஞாபகம் வருது! இந்த கம்ப்யூடர், ஸா·ப்ட்வேர், அக்குவேர், ஆணிவேர் கம்பெனியெல்லாம் இப்ப, ID Card ங்குற பேர்ல, நம்பர் ப்ளேட் மாதிரி எல்லார் கழுத்துலயும் மாட்டீடறாங்க! வேல பண்றவங்களாவது, வேல முடிஞ்சு வெளிய வரப்ப, இந்த கழுத்து பட்டயை கழட்டி வெச்சுறலாம்ல? அவங்கள பார்க்கறப்ப எதோ நம்பர் போட்ட கைதிகளாவோ, இல்ல வேற கழுத்துப் பட்டை போடற நாலு கால் ஜந்துக்களையோ நினைக்கத் தோணுது!
சரி, திரும்ப மொபைலுக்கே வருவோம்....
சில சுவாரஸ்யமான செல்லுபுராணம் பாப்போமா?
1. இப்பதான் திடீர்னு சிவபெருமானுக்கு ஜலதோஷம் sorry ப்ரதோஷம்கிற சாக்குல திடீர்னு ஒரு அலை அடிச்சிருக்கே! அதனால கோயில் வாசல்ல நல்ல கூட்டம். பூக்கடைல பூ வாங்க கையை நீட்டுனவன், நீட்டிகிட்டேயிருக்கேன். மறுபக்கம் பூக்காரம்மா 'செல்'லுல சும்மா 'பூந்து வெளாடராங்க! யாருக்கோ பிசினெஸ் (Nack) நெளிவு சுளிவெல்லாம் சொல்லிகொடுத்துகிட்டு இருக்காங்க. பலர் கை நீட்டிகிட்டிருந்தாலும், அவங்க அட்வைஸ் தொடருது! நடுல மறு கையை 'போ, போ' ங்கிற மாதிரி வீசுறாங்க! ஆனா பேச்சு மட்டும் மொபைல்ல தொடருது! சுத்தி நிக்கிற கஸ்டமருக்கெல்லாம் ரொம்ப அவமானமாப் போச்சு! ' என்னடா பூ வாங்க வந்தா, விரட்டுறாங்களேன்னு! பேச்சு முடிஞ்சதும், பூக்காரம்மா போட்டாங்களே ஒரு போடு! 'ஏன்யா, மாடு சைடுல தலைய விட்டு பூவ திங்குது; நீ பாட்டுக்கும் நிக்குறயே? மாட விரட்டக் கூடாது? நாந்தான், முக்கிய மேட்டர் பேசிகிட்டிருக்கேன்ல' - இது எப்படியிருக்கு!!
2. ரெகுலரா பார்க்ல வாக்கிங் வர நண்பர் ரெண்டு நாளா மிஸ்ஸிங்! மறுநாள், அவர மார்கெட்ல பார்த்தேன்! எதையோ பறி கொடுத்த மாதிரி அவர் முகம்! 'என்ன மணிகண்டா, ரெண்டு நாளா காணலை? ஏன் டல்லாயிருக்கே?' மணிகண்டன் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, 'சார், நீங்க நல்ல ப்ரெண்டுங்கிறதால சொல்றேன், வெளிய சொல்லீறமாட்டீங்களே?' என்ற பீடிகை போட்டுச் சொன்னதைக் கேட்டு, சிரிப்பதா, அவருக்காக வருத்தப்படுவதா தெரியவில்லை!!சார் நான் பா·ரின் கம்பெனியின் இந்திய மார்கெட்டிங் ரெப் என்று உங்களுக்குத் தெரியும்; நிறைய டார்கெட்! ப்ரெஷர்! மொபைல் தான் சார் என் மூச்சுக் குழாயே! இப்ப அதுதான் எனக்கு எமனா வந்து நிக்குது!
நான் - என்னப்பாயிது,மார்கெட்டிங் ஆளுக்கு மொபைல் இல்லாம ஆகுமா?மணி- "அட அதுதான் சார் ப்ராப்ளமே! ஒரு ப்ரேசில் பார்ட்டிக்கு பொருள் இந்தியாவிலிருந்து சப்ளை செய்ய என் கம்பெனி விலையெல்லாம் பேசி முடிச்சிடுச்சி. பா·க்டரி விசிட்டுக்கு ஒரு ஆளை ப்ரேசில் பார்ட்டி அனுப்பியிருந்தாங்க. அவர் ப்ரொடக்ஷன் எல்லாம் பார்த்துட்டு, ஒரே ஒரு புது மெஷினும் சேர்த்தா வேலை வேகமா ஆகும்னு ரிப்போர்ட் எழுதி வெச்சுட்டாரு! அதுக்கு நேர கெடுவும் வெச்சிட்டாரு! 2 நாள்! உடனே என் கம்பெனில பேசி, மெஷின் சப்ளையர்கிட்ட பேசி, பேரம் முடிச்சு, எல்லாம் மொபைல்லயே கோஆர்டினேட் பண்ணேன் சார். மெஷின் சப்ளையர், ப்ரேசில் பார்ட்டி, நான் எல்லாரும் ஒரு ஹோட்டல் லாபில பேப்பர்ஸ் ஸைன் பண்ண வைட் பண்றோம்; பை·னல் ஓகே மட்டும் என் கம்பெனி ப்ரெசிடெண்ட் பண்றதுதான் பாக்கி.
அப்ப பார்த்து பாழாப் போன எனக்கு 'நம்பர் ஒன்' வந்திருச்சு! பாத் ரூம்ல ஒரு கைல 'மொபைல் - செல் மணி'; இன்னொரு கைல 'ஒன்' மணி! ரொம்ப வெவரமா, ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ரிங்கிங் டோன் வெச்சிருந்து என்ன ப்ரயோஜனம்? பாஸ் கூப்ட நேரம் பார்த்து, வலது கை செல்லை காதுக்கு தூக்கி பதில் சொல்றதுக்கு பதிலா, (இடது கைப் பழக்கம் உள்ளவர்) இடது கையைத் தூக்கிட்டேன்! மூஞ்சியெல்லாம் 'மூச்சா!' பெல் அடிச்சுகிட்டேயிருக்கு! கண்ணெல்லாம் தண்ணி! மறுகைல இருக்கிற செல்ல உயர்த்தறப்போ, பதட்டத்துல, மொபைலை டாய்லெட்ல தவற விட்டுட்டேன்! ப்ளூ டூத் - ரொம்ப Hi-Fi மொபைல் வேறே! தண்ணுக்குள்ளேயிருந்தும் மணி அடுச்சிகிட்டேயிருந்துச்சு! கைய விடலாம்னு பார்த்தா, அது கரெக்டா, சக்ஷன் U பெண்ட்ல மாட்டிகிருச்சி! வெளிய வரல! கைய அசிங்கப்படுத்தினதுதான் மிச்சம்!! பாழாப் போன் செல் பழக்கம் ; எல்லா அட்ரஸ், போன் நம்பர், அதுலதான் ஸ்டோர் பண்ணி வெச்சேன்! வெளிய வந்து, பப்ளிக் பூத்லயிருந்து USக்கு போன் போட்டா, கனெக்ட் ஆகமாட்டேன்னுது! அவசரமா, லேப்டாப் திறந்து, நெட் கனெக்ட் பண்ணி, யாஹ¥ Chat ல தலைவரோட பேசிட்டேன். ப்ரேசில் வேல முடிஞ்சாலும், அங்க US ல தலைவர் என்ன நெனச்சாரோ தெரியல!
வார்னிங் மெயில் ஒண்ணு அனுப்பி, சம்பளத்துலயும் 10% வரும் மாசத்துலயிருந்து பிடிச்சு, அதோட போன் செலவுக்குன்னு தர தொகையையும் கட் பண்ணி, பட்டயம் எழுதிட்டாரு! எரியற அடுப்புல எண்ணைய விட்ட மாதிரி, எல்லா கஸ்டமர் நம்பர், சப்ளையர் நம்பர் எல்லாம், பாத் ரூம் ப்ளஷ் தண்ணியோட போயிருச்சு! அதெல்லாம் எப்படி திரும்ப சேக்கறதுன்னே தெரியல!" பின்னர் மெதுவாக - 'சார், மொபைல 'மூச்சா' போற இடத்துல விட்டேன்னு தெரிஞ்சா, எல்லாம் சிரிப்பாங்க! என் பொண்டாட்டிகிட்ட கூட, எவனோ பிக்பாக்கெட் அடிச்சுட்டான்னு சொல்லிட்டேன்! அவளுக்கு நிஜம் தெரிஞ்சா, கேலி பண்ணியே கொன்னுடுவா!" என்றார், பரிதாபமாக! என்னத்தச் சொல்ல!
3. க்ளினிக்ல பார்த்தது - ஒரு ஆளு, ஒரு பக்கமா தலைய சாய்ச்சுகிட்டே வந்தாரு.ரிஷப்ஷன் பெண்மணி : பேரு?சா.ம (ஹி,ஹி.. சாய்ந்த மனிதர்!) : ர்ர்ர்ரவிரிஷ: என்ன?சா.ம: ர்ர்ர்ரவி. (மேற்கொண்டு பேச முடியவில்லை! வாயில் ஜொள் வடிகிறது!) உடன் வந்த பெண் சொன்னார்: மொபைல்ல பேசி, பேசியே, இந்தாளு இப்படி ஆயிட்டாரு சார்!நான்: என்னது மொபைல்னாலயா? (முக்கை நுழைப்பது தப்புதான். என்ன செய்ய? ஆர்வக் கோளாறு!)
பெண்: 'ஆமா, சார், இந்த ஷேர் மார்கெட், மூசுவல் ப·ண்ட், அது இதுன்னு திரிவாரு! எந்நேரமும் போன், இல்லைன்னா, இண்டெர்நெட்! கொஞ்சம் காசு பார்த்துட்டாரு! பிடிச்சுருச்சு சனியன்! வெளில எங்கயானும் கூப்டா, 'இல்ல வரல' ம்பாரு; நல்லது கெட்டது எதுனாலும் நாந்தான் போகணும். இவரு எந்நேரமும், காத சாய்ச்சுப் பேசிகிட்டேயிருப்பாரு! ஒரு நாள் என்னிக்கி இல்லாத அதிசயமா என்னையும் வெளில கூப்டாரு! சரின்னு வண்டில பின்னால உட்கார்ந்தேன்! கொஞ்ச தூரம் தான். ஒரு போ·ன் வந்திச்சு! போச்சு! அப்படியே, வண்டிய ஓரம் கட்டி, நின்னு பேசுனாரு, பேசுனாரு, பேசிகிட்டேயிருந்தாரு! கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்! பின்ன மெதுவா நினைவுக்கு வந்து, ' என்ன ராஜி, லேட் ஆயிருச்சான்னாரு! ஹி, ஹி'ன்னரு! 'எனக்கெப்படிங்க தெரியும், எங்க கூட்டிகிட்டு போறேன்னு?' லேட்டா, சீக்கிரமான்னு, நீங்கதான் சொல்லணும்' னேன்.கடிகாரத்தப் பார்த்தார் - 'சரி,லேட் ஆயிருச்சு, வீட்டுக்கே போகலாம்' கிறார்! ஏன்? 'ஷேர் மார்கெட், க்லோஸிங் டைம்! அப்படியே நெட்ல உட்கார்ந்தா கொஞ்சம் காசு பாத்துறலாம்'."அன்னிக்கி முடிவு பண்ணேன்; இவரோட வெளியவே போக்கூடாதுன்னு! இது முத்திப்போயி, இப்படி நிக்கிறாரு! முதல்ல, கொஞ்சம் கழுத்து வலி, எதாச்சும் தேய்ச்சுவிடேன்' ன்னாரு; அப்புறம், கொஞ்சம் 'Stiff neck' அதுவே சரி ஆயிரும்னாரு. அப்புறம், வாய் இழுத்துகிச்சு!இப்ப, இப்படி, எல்லாரையும் கோணலாவே பார்க்கிற மாதிரி ஆக்கிட்டான் ஆண்டவன்!"மெல்ல விசும்பி, அதுவே பெரிய அழுகையாய் வெடித்தது!
கேட்கவே பரிதாபமாக இருந்தது! அதைவிடப் பரிதாபம், அந்த ஆள் நிக்கிற போஸ்! சந்தேகமா ஏட்டைய்யா பார்க்கிற மாதிரி! ஒரு டிக்ரியா சாஞ்சு பார்த்துகிட்டிருக்கார்!
4. சமீபத்தில் மறைந்த அப்பாவின் மாதாந்திர திதி- புரோகிதருக்காக காலைல ஆபீஸில் 1 ஹவர் பர்மிஷன் போட்டு, ' தேவுடு' காத்திக்கொண்டிருந்தோம்! மணி பதினொண்ணு ஆகியும் வரலை! இங்கே அண்ணனுக்கும், அவரைப் பார்த்து எனக்கும் டென்ஷன்! விடாத மழை வேற! 11.30 க்கு அய்யர் மெதுவாக வர்றார்! நாங்கள் வாயைத் திறப்பதற்குள், '' அது வந்துண்ணா, மழைல மொபைல் நனஞ்சுடுத்து! சார்ஜும் ஆக மாட்டேங்கறது! உங்க நம்பர் மட்டும் இல்ல, எல்லார் நம்பரும் இதுலதான் இருந்தது! எல்லாம் போச்சு!" என்கிறார்!போன ஆத்மாவின் வேல நல்லா நடக்கணும்னு, பொறுத்துகிட்டோம்; இதே ஆபீஸா இருந்தா, இப்படி சாக்கு சொல்ல முடியுமா?
5. பையன் அப்பாகிட்ட: "யப்பா, பிறந்த நாளுக்கு இந்த சின்ன சின்ன கி·ப்ட் எல்லாம் வாங்கித் தந்து என்னை இன்சல்ட் செய்யாதீங்கப்பா! அட்லீஸ்ட் ஒரு நோக்கீயா 1100 மாடலாச்சும் வாங்கிக் குடுப்பா, அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!"
பையன்? காலேஜ்னு நெனச்சா, அது உங்க தப்பு. இப்பதான், ப்ரி-நர்சரியிலிருந்து, ஒண்ணாங்கிளாஸ் போறான்!இப்படியே போச்சுன்னா, வருங்காலத்துல, வயிற்றுக்குள் குழந்தையை ஸ்கான் பண்ணிப் பார்க்கறப்ப, முதுகெலும்பும்போடு கழுத்தெழும்பு திரும்பும் இடம், ஒரு திரும்பு திரும்பி, ஒரு 20 டிக்ரி கோணலா உருவாயிருக்கும்! பரிணாம வளர்ச்சி!!
6. மற்றொரு கேஸ் அதைவிட ஆபத்தானது! புது மாப்பிள்ளை! கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூப்பிடறான்னு, ஒரு கைல பைக் ஓட்டிகிட்டே, மறுகையால மொபைல் பேசியிருக்கார்! இருட்டில் கவனிக்காம, பின் லைட் ஆன் செய்யாம நின்ன லாரிமேல் மோதி, 'V'பத்து!இப்ப V ஷேப்ல பாண்டேஜ், தலைல காய்ச்சல் குறைய பத்து - ரெண்டும் போட்டு, அய்யா கல்யாணம் தள்ளிப் போயிருச்சு!
நல்ல வேளை அடி, ஆஸ்பத்திரியோட போச்சு! இத மாதிரி மொபைல் பேசிகிட்டே, ரெயில்வே லைன் க்ராஸ் பண்ண ரெண்டு இள வயது பொண்ணுங்க மேல போயி சேர்ந்த கதை பேப்பரில் படிச்ச அன்னிக்கி, வயத்துல சோறே இறங்கல!
சில மொபைல் பைத்தியங்கள்..
ரொம்ப முத்தின கேசுலேர்ந்து ஆ..ரம்பிப்போம்!
7) அட்வான்ஸ்டா, காதுல கடுக்கண் சைசுல, ஒரு பட்டனைச் சொருகிகிட்டு, தானா பேசிகிட்டே போவானுங்க! கேட்டால், 'Hands free' ம்பானுங்க! பாதி விபத்துக்கள், இந்த 'Hands free' கேசுங்களாலதான்!!
8) சில வசதியானவங்க, அதுலயே, பாட்டு, கேமரா, மெயில், எல்லாம் இருக்கிறமாதிரி வாங்குறாங்க! எனக்குப் புரியல! பாட்டு கேட்க, சிம்பிளா, சைனாக்காரன் விக்கிற 50/- ரூ FM ரேடியோ போதுமே? கேமரால என்ன, பெரிய கலை ஓவியமா எடுக்கப் போறானுங்க? எல்லாம் கலைஞ்ச ஓவியம்தான்! அதான், ஒரு டெல்லி ஸ்கூல் பையனும்,பொண்ணும் மாட்டிகிட்டாங்களே! ஸ்கூல் பேரே நாறிடிச்சு! மற்ற வகையராக்களை சொல்லவே வேண்டாம்; செல்போன்ல மெயில் படிக்க நெஜமாலுமே வசதிப்படுமா? சந்தேகம்தான்! திருடு போனாலும், ரொம்ப விலையுள்ளதாலே, வயித்தெரிச்சல்தான், மிச்சம்!
9) சில இளவட்டங்கள், மெதுவா,எதோ பேசிகிட்டேயிருப்பாங்க. நடு நடுவே, நினைவு வந்து, நம்ம சொல்ற வேலையெல்லாஞ் செய்வாங்க! செல் பேசுற காலேஜ் பொண்ணுகிட்ட எதேனும் வேல சொல்லிப்பாருங்க? தமாஷ¤!
பக்கத்து வீட்ல கொஞ்சம் சரியா கண் தெரியாத பெரியவர் - சாப்பிட உக்கார்ந்துட்டு பேத்திகிட்ட தெரியாத்தனமா மோர் ஊத்தச் சொன்னாரு. அவளும் பேச்சு சுவாரஸ்யத்துல, ஊத்துறா, ஊத்துறா ஊத்திகிட்டே இருக்கா! தட்டு நெறம்பி,மோர் கீழ ஓடிக்கிட்டிருக்கு! தாத்தாவுக்கோ கண் தெரியாதா, அவரும் தட்டுல கைய அளைஞ்சு, அளைஞ்சு, ரொம்பிப்போன மோருக்குள்ள சோத்துப் பருக்கைய தேடுறாரு! சந்தேகம் வந்து, 'அம்மா, அம்மா, பவானி, ரொம்ப மோர் ஊத்திட்ட போல; போதும்மா" ங்கறார். ஊஹ¤ம், பவானி கேட்டாதானே? No more, more ன்னு தாத்தா சொல்லச் சொல்ல இங்கே மோர் ப்ரவாகமெடுத்து ஓடுது!!
10) கொஞ்சம் எகானமி ரேஞ்ச் கேசுங்களும் இருக்கு. பார்த்தீங்கன்னா, ரத்தக் கண்ணீர் எம்.ஆர். ராதா மாதிரி ஆகிப்போன கைகள், குனிந்த நன்நடைன்னு நடப்பாங்க! நாமதான் பார்த்து போகணும். இல்லன்னா நேரா நெட்டுக்குத்தா ('Head-on Collision') மோத வாய்ப்பிருக்கு! காரணம், வேறொண்ணுமில்லை! SMS ன்னு ஒண்ண இந்த மொபைல்காரங்க கண்டுபிடிச்சான் பாருங்க, பெரிய வேதனை! எப்பப் பாரு, அதக் குத்திகிட்டே இருப்பாங்க; பதில் வந்ததும், 'குணா' கமலஹாசன் ரேஞ்சுக்கு பரவசமாகி, உடன் பதில் போடுவாங்க! சிலர் இதுல ரொம்ப 'கை' தேர்ந்த பார்ட்டிங்க!
கீயக் குத்துற வேகம் பார்த்தீங்கன்னா சும்மா டைப்ரைட்டிங் ஹையர் தோத்துப்போற மாதிரி ஸ்பீடா அடிப்பாங்க! 'கீ'க்கு வாய் இருந்தா, 'கீ', 'கீ' ன்னு கத்தும்! மொபைல் கம்பெனிக்காரங்க பல இளவட்டங்கள மடக்கிப்போடுறதே, இந்த இலவச SMS கொடுத்துதான்!
11) வயசான அம்மா தனியா வெளிய போயிருந்தாங்கன்னா, எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க, ஒரு மொபைல வாங்கிக் கொடுத்தோம். அட்லீஸ்ட் ஒரு பட்டனை அமுக்கி பதில் சொல்லறதுக்கு; என்ன ஆச்சுன்னா, ஆர்வக் கோளாறுல, அம்மா,சும்மா 'பூந்து' விளையாடிட்டாங்க! அப்பப்ப, பெரிய பதவியில் உள்ள மாமா, டார்கெட், பாலன்ஸ் ஷீட், அது, இதுன்னு மண்டை உடைச்சுக்கிற அக்கா, ஷேர் மார்கெட் எக்ஸ்சேஞ்சின் ப்ரெஸிடென்ட் மாப்பிள்ளை, எக்ஸ்போர்ட் டெட்லைன் தினம் தினம் கண்காணிக்க வேண்டிய அடியேன் போன்றோருக்கு, ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு அரை டஜன் வெத்து SMSகளும், Missed Calls ம் வந்து டார்ச்சர் செய்ததன் பலன் - அதிரடியான 'சூடான' பில்லும், அம்மா ஞான உபதேசம் செஞ்சதும் தான்! "போடா, இத்தன நாள் வெளிய போகலையா, வரலையா? நாங்கள்லாம், வெறும் டெலிபோனே பார்க்காமலே இத்தன நாள் ஓட்டலையாக்கும் " என்று சொல்லி, மொபைலை புறம் ஒதுக்கிட்டாங்க!
சரி, இத்தன சொல்றானே, இவன் மொபைல் வெச்சிருக்கானான்னு கேக்குறீங்களா? என்ன பண்றது, என்னால முடிஞ்சவரை, 'ஊரோட ஒத்து வாழறேன்!' ஆனா, அதுல கம்பெனி வேல நிமித்தம், ஒரு சில SMS மற்றும் போன் போடமுடியாம, நம்ம கஸ்டமரோட, இல்ல சப்ளையரோட தலை கிட்ட பேச வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தான், இந்த பாழாப் போன மொபைல் போ·ன கையில் எடுக்கறேன்! என்ன சரிதானே? ஸாரி, நம்ம பார்ட்ஸ் சப்ளையர் ஒருத்தர்கிட்டயிருந்து 'செல்'லுல கால் வருது! நம்ம அப்புறம் பேசலாம். பின்னூட்டம் தானே, எங்க போயிறப்போகுது? கட்!

24 March 2006

"நாகரிகக்கோமாளிகள்'' -பெரிய தலைங்க ரவுசு!

பெரிய தலைங்க ரவுசு!
அய்யா, எதோ நல்ல நேரம், கூட்டுக் குடும்பமா இருக்குற புண்ணியம், ஊருக்குள்ள நடு சென்டர்ல ( இந்த சொலவடை எப்படி வந்தது? நடு - சென்டர் :- ரெண்டும் ஒண்ணுதானே?) இருக்குறமாதிரி ஒரு ஜாதகம் எனக்கு.ஒரு பக்கம் பிரசாந்த் வீடு, மறுபக்கம் கவுண்டன் வீடு, ஏவிஎம் லேர்ந்து ஆர்.வேலு மந்திரி அய்யா வீடுன்னு வீட்டச் சுத்தி ஒரே பெருசுங்க ஆக்கிரமிப்பு தான் போங்க! சரி, நாமளும் வெரப்பா தல நிமிந்து நடக்கலாம்னு பார்த்தா, அதுதான் இல்ல!
விடி காலைல 5 மணிக்கு எங்க அய்யா,(அப்பா) பக்கத்துல இருக்குற பூத்ல பால் வாங்கப் போயி, ஒரே டென்ஷனா திரும்பி வந்தாரு! என்னன்னு கேட்டேன்; அவரு சாது அப்பிராணி மனுஷன்ல, "ஒண்ணும் இல்லடா" ன்னு சொல்லிட்டு, போயிட்டாரு. இந்த ஊருக்கு வந்து கொஞ்ச நாள்லயே அவர் திடீர்னு மேலோக டிக்கெட் எடுப்பாருன்னு யாரும் நெனக்கல. அவரு செஞ்ச வேலய நாம செய்வோம்னு நான் பால் பையத் தூக்கிகிட்டு கிளம்பினேன். எதிர்ல ஒரு ரெண்டு "அக்கா"மாருங்க (அம்மான்னு சொன்னாலோ, அத்தைன்னு சொன்னாலோ கோவிச்சுக்குவாங்க!) வழிமறிச்சு நின்னாங்க! "என்னா, நீதான் அந்த பெரியவருக்கு பதிலா பால் வாங்கப் போறியா?"
"ஆமா"
" நீ பெரிய வூட்டு ஆளு. நாங்க எதோ பொழக்கிறத ஏன் கெடுக்கற?"
"அக்கா, நான் எங்க.."
"நீ நேரா பால் வாங்கி வந்தேயின்னா, வீடு வீடா பால் போடற எங்க பொழப்பு என்னாறது?"
"இல்லக்கா, நான் என் வீட்டுக்கு தானே வாங்கிப் போறேன்"
"இதப் பார்றா, பின்ன தம்பி எல்லா வீட்டுக்கும் போடுதுன்னா நான் சொன்னேன்?"
பால் காரர் நிலமைய கட்டுக்கு கொண்டுவந்து, "அக்கா, விடுக்கா,ஒரு வீட்டு பால்லயா உனக்கு பொழப்பு கெடுது? விடுக்கா!!" ன்னார்.
அக்கா சமாதானமாகலைன்னு அவங்க விட்ட "லுக்"லயே தெரிஞ்சது!
சரி, களுத விட்டுத் தள்ளுன்னு நான் பால் வாங்கிகிட்டுதான் போனேன். இன்னி வரைக்கும் அய்யா செஞ்ச பால் வாங்கற வேலய நான் செஞ்சுவரேன். அன்னிக்கி அய்யா டென்ஷனா திரும்பி வந்ததுக்கு காரணம், எனக்கு அப்ப தான் புரிஞ்சது! வீட்லயே, ஒரு கடுஞ் சொல் அவரு தாங்க மாட்டாரு. வெளியாளு ஓங்கிப் பேசுனா கேப்பாறா?

முதல்முறையா, எனக்கு அந்த இடம் பிடிக்காம போச்சு.

அம்மாவுக்கு சக்கரைன்னு, நெதமும் நடக்கணும்னு டாக்டர் சொன்னதால, சரி, காலைல வாக்கிங் போகலாம்னு அண்ணன் கூட்டிகிட்டு போவாரு. ஒரு நாள் அவரு வேலயா இருக்க, என்னைப் போகச் சொன்னாரு. போனேன். அதுதான் நான் கடைசியா வாக்கிங் போனது!
காரணம்? கண்ல பட்ட காட்சிங்க!
-----
வயசான அய்யாவும், ஆச்சியும் ஹலோ சொன்னாங்க. அம்மாதான்," டேய், அவருக்கு காரைக்குடி பக்கம்தான்; வாக்கிங் ·பிரண்டு" - அறிமுகப் படுத்தி வெச்சாங்க.
வணக்கம் சொல்லிட்டு நகர்ந்தேன். பத்தடி தூரம் போனதும், அம்மா மெதுவான குரலில், "பாவம்டா அவங்க" ன்னாங்க.
"ஏம்மா?"
"ஒரே பையன், செல்லமா, நல்லா படிக்க வெச்சாங்க. சார், ஊருல இருக்குறதல்லாம் வித்து, பெண்டாட்டி, பையன் மனசு நோகாம, இங்க பெரிய வீடா கட்டி, இங்க செட்டில் ஆனாரு. பையன் பெரியவனானதும், வேற பொண்ண காதலிச்சு, கல்யாணம் பண்ணான். இவுங்களும்,பெரிய மனசு பண்ணி ஒத்துகிட்டாங்க. ஆனா,புது மருமக, இவங்கள திருப்ப ஊருக்கு துரத்துறதுலயே குறியா இருக்கா! தெனம், தண்டச் சோறு பட்டம்! அவரு இன்னும் வேலக்கிப் போறாரு. இன்னும் 2 மாசத்துல ரிடயர்டு ஆறாரு. அதுக்குள்ள ஊர்ல சின்ன இடத்த வாங்கி போயிரலாமான்னு யோசிக்கிறாரு! பாவம் அந்தம்மா, புருஷனையும் விட்டுக்கொடுக்காம, பையனையும் விட்டுக் கொடுக்காம, தவிக்கிறா"
---
கொஞ்ச தூரம் போனோம். வழில ஒரு பெரியவரு தானா பேசிகிட்டு வந்தாரு. கண்ல தண்ணி. நான்,மெதுவா பக்கம் போய், "என்ன பெரியவரே? என்ன?ன்னேன்.பாவம், அழுது தள்ளிட்டார்! "எத்தன காலம் ____ (ஒரு பெரிய மனுஷன் பேரச் சொல்லி) அங்க வேல பார்த்தேன். இன்னிக்கி அடிச்சு துரத்திட்டாங்க; எங்க போறதுன்னு தெரியல."
"ஏன், என்னாச்சு?"
"வீட்ல இருக்குற அத்தன பேரும் என் கிட்ட மரியாதையாதான் இருந்தாங்க. வந்த மருமக வடக்கத்தி. அவுங்க தண்ணி போடுறத நான் பாத்துட்டேன். சரி, ஏதோ, ஒரு நாள், பெரிய மனுஷங்க விருந்து சாப்பிடறாங்கன்னு, இவுங்களும் சாப்டாங்கன்னு விட்டுட்டேன். ஆனா,தெனம் குடிக்க ஆரம்பிச்சாங்க. பெரிய அம்மா போயி ரெண்டு வருஷம் ஆச்சு. அய்யாவும், சின்னய்யாவும், பிசினஸ் பிசினஸ்னு வெளியவே கெடப்பாங்க! சமையல் உட்பட எல்லா வீட்டு வேலையும் நாந்தான் செஞ்சேன்.எதோ உரிமைல, சின்னம்மாவ குடிக்காதீங்கன்னு சொன்னேன். அவுங்க காதுலயே விழாத மாதிரி போயிட்டாங்க! திரும்ப திரும்ப நான் சொல்லவும், ஒரு நாள் கோபமா செவிட்டுல ஒரு அர விட்டாங்க! ரொம்ப கூனிக் குறுகிப்போயிட்டேன். இருந்தாலும், உப்பத்தின்ன விசுவாசம் போகுமா ராசா, அதான், அவங்களோட பேசாம, வேலய மட்டும் கவனிச்சுகிட்டு கடந்தேன்."
அம்மா," ஆரம்பிச்சிட்டாண்டா, இவன் பொதுநலச் சேவய. சரி, நான், நடந்துட்டு வீட்டுக்கு போறேன், நீ வா"ன்னு சொல்லிட்டு நடையக் கட்டிட்டாங்க.

நானும் கிழவரும் மட்டும்.
"சரி, வீட்ட விட்டு அனுப்புறமாதிரி என்ன ஆச்சு?"
"மருமக குடிச்சு, குடிச்சு, உடம்புக்கு ரொம்ப நோவாப் போச்சு. ஆனா, அய்யா யாரும் கவனிக்க நேரமில்ல. நாந்தான்,தெரிஞ்ச டாக்டரை வரவழைச்சு, பாக்கச்சொன்னேன். அந்த பாவி மனுஷன் சின்னய்யாக்கு போன் போட்டுட்டாரு.
"குடல் ரொம்ப பாதிச்சிருக்கிறதயும், இனி ரொம்ப கவனமா, குடிக்காம இருந்தா உடம்பு தேறும்னும், வீட்ல கவனிப்பு சரியில்லைன்னும்" சொல்லிட்டாரு. சின்னய்யா, பெரியய்யா எல்லாரும், அந்தம்மாவக் கேட்டா, நாந்தான் தினம் குடிக்க வாங்கிக் கொண்டாந்ததாகவும், என்னாலதான் அவங்க இப்படி ஆனமாதிரியும் பேசுனாங்க. சின்னய்யாவும் பொண்டாட்டி பேச்ச நம்பிட்டாரு.
அத விடக் கொடும.."ஹ்ம்ம்,ஹ்ம்ம்" பெரியவர் பேசமுடியாம கேவிக்கேவி அழுகுறாரு!

கொஞ்சம் சமாதானப்படுத்தி,என்னன்னு கேட்டேன். கேட்டதும், ஏண்டா கேட்டோம்னு ஆயிருச்சு! அவரு சொன்னது, " இந்தாளு என்ன பார்க்கற பார்வையே சரியில்ல, மேலும்..." ன்னு அநியாயமாகக் கிழவர்மேல் பழி சுமத்தினதுதான்!! சினிமாவில்தான் இப்படி வில்லிங்கள பார்த்துருக்கோம்னா, நிஜத்துலயுமா!! சே!

எப்பவோ, சின்ன வயசுல எங்காத்தா, என்ன ஊர்லயிருந்து இங்க விட்டுட்டுப் போனதுதான்; இன்னி வரக்கும் நாயா உழச்சதுக்கு நல்ல பலன்!"ன்னு மூக்கச் சிந்தினாரு..
"எங்க போறேங்க?"
"தெரியலயே?"
"பெரியய்யா என்ன சொன்னாரு? அவருதான் உங்கள இத்தன வருஷமா பார்க்கறாரே?"
"என் கெட்ட நேரம், அவரு வெளியூரு போயிருக்காரு."
"தாத்தா, உங்க நல்ல நேரம்னு சொல்லுங்க".
தாத்தாவுக்கு நான் என்ன சொல்றென்னு புரியல!
என் வாக்கிங் அதோட அன்னிக்கி முடிஞ்சது. தாத்தாவக் கையோட வீட்டுக்கு கூட்டிகிட்டு போனேன். சாப்பிடக் கொடுத்தேன். "பெரியய்யா போன் நம்பர் தெரியுமா?" பெரியவர் மனப்பாடமா மொபைல் நம்பர் ஒப்பிச்சாரு!நான் அந்த நம்பர்ல பேசி, நடந்த எல்லாத்தயும் சொன்னேன். மறுபக்கம், அவரும், விட்டுக் கொடுக்கல; தனது மகன்,மறுமகள் பக்கம் நியாயம் இருக்குற மாதிரி தான் பேசுனாரு! நான், அப்புறம்,பெரியவர் இத்தன வருஷம் செஞ்சதெல்லாம் வேஸ்டு; அவர ஒரு முதியோர் இல்லத்துலயாச்சும் சேக்கலாம்னு வாதாடினேன். 10 நிமிஷ போராட்டத்துக்குப் பின், அவரு கொஞ்சம் மசிஞ்சாரு. ஆனா, "எனக்கு எந்த இல்லமும் தெரியாதே" ன்னு கழண்டுக்கப் பார்த்தாரு. நானோ, விடாமல், "எனக்கு சில ஆசிரமங்கள் தெரியும்னும், அவரு பண ஏற்பாடு மட்டும் செஞ்சாப் போதும்னும், மல்லுக்கு நின்னேன். என்ன நெனச்சாரோ தெரியல, "சரி"ன்னு ஒப்புகிட்டார். இப்ப அந்த கிழவர் ஒரு முதியோர் இல்லத்துல இருக்காரு.
----------------------

என் கெட்ட நேரமா, தெரியல; வேண்டாதடெல்லாம் என் கண்லயேப் படுது!

மறுநாளும் வாக்கிங் போகவேண்டிய நிர்பந்தம். அடையார் போட் களப் சுத்தி நிறைய பேர் ஓடுறாங்க. எல்லாருக்கும், வயத்தச் சுத்தி நிறைய கொழுப்பு இருக்கு! கோபப்படாதீங்க, நிஜந்தான். ஓடுற மாதிரி, மெதுவா உருண்டுகிட்டு போற ரோட் ரோலர் மாதிரி பலரும், இனி விடுறதுக்கு மூச்சே இல்லாதமாதிரி இழுத்து இழுத்து விட்டுகிட்டு கொஞ்ச பேரும், ரகசிய சந்திப்புக்கு ஏத்தமாதிரி ரன்னிங் போற இளசுங்களும் ஓடுறாங்க. சில அம்மணிங்க, அரக்கை பனியன், மற்றும் தேவை இல்லாத சிலுப்பு காட்ற மாதிரியான உடைகள மாட்டிகிட்டு வந்து டார்சர் பண்றாங்க! ஒரு நடுத்தர வர்க்கம் வாழற ஏரியாவுல, காலைல என்ன பார்ப்போம்? அழகா,குளிச்சு, தல சீவி, பொட்டிட்டு, பொண்ணுங்க, வாசல்ல கோலம் போடுறத பார்ப்போம்; இங்கயோ, அந்த வேலய வீட்ல இருக்கற வேலக்காரம்மாதான் செய்யணும்!

"அம்மா, இந்த சோப்பு விளம்பரம் பனியன் போட்டுகிட்டு நாய இழுத்துகிட்டு ஓடுறாரே, அவரு பையன் வெளிநாட்டுல இருக்கான். பெரிய வீட்டை கட்டிக் கொடுத்து, அப்பா, அம்மாவை வெச்சுட்டு, பையன் அங்கயே செட்டிலாயிட்டான். நாய் இவங்களுக்குக் காவல்,இவன் சொத்துக்கு பெத்தவங்க காவல்; நாளைக்கு அவன் அந்த வயசுல வந்து செட்டிலாகணுல?" ன்னேன்.
அம்மா முறைச்சாங்க! அந்தாளு போட்டிருக்கற பனியன், அங்கே, ஸ்டார் ஹோட்டல்கள்ல,பெரிய 'ஷாப்பிங் மால்'ல இலவசமா கொடுக்குற பனியன். அதப்போய் அப்பனுக்கு பெரிசா கொடுத்துட்டு, நாய்க்கும், வீட்டுக்கும் காவலாளி ஆக்கிட்டானே!'' அப்படீன்னேன்!
"ஒன் எழுத்தாளன் புத்திய ஏண்டா இங்க காட்டுற? கற்பனையப் பேப்பரோட நிப்பாட்டிக்க, அடுத்தவங்கள எட போட உபயோகிக்காத! நேத்து ஒரு வம்பு, இன்னிக்கி வேறயா? வேணாம்டா" னாங்க.
எனக்குத்தான் வாயி சும்மா இருக்காதே?
"அம்மா, நான் வேணாம் அந்த அங்கிள் கிட்ட பேச்சு கொடுக்கவா?"
தகவல் தான் சொன்னேனே ஒழிய, அம்மாகிட்ட அனுமதி கேக்கல!மெதுவாக ரோடை
க்
ரா
ஸ்
பண்ணி, அவர் கூடவே, ஓட ஆரம்பிச்சேன்....

ஹை அங்கிள்!! (நாய் என்னைப்பார்த்து, ஆக்ரோஷமாகக் குரைச்சது! ஒரு வேளை அவர் பேரு அங்கிள் இல்லாம வேற பேரோ என்னமோ?)
அவரு, நாயப் பார்த்து, "உஷ். டாமி; நோ. டோண்ட் பார்க்; கீப் குவைட்" ன்னார்.
பரவாயில்ல அங்கிள் தமிழ்; அவரு வளர்க்கிற நாய் இங்லீஷ்!
"யெஸ்?"
"ஜஸ்ட் லைக் தட். நான் தினமும் உங்களப் பார்க்கறேன், யூ ரன் வெரி ரிதமிக்கலி! அண்ட் யூ ஆர் பன்ச்சுவல் டூ (நீங்க சீரா ஓடறேங்க, தினம் நேரம் தப்பாமலும் வர்றேங்க!- எப்படிப் பட்ட பொய்! நான் எங்க இவர தினமும் பார்த்தேன்?)

"ஓ, தேங்க்ஸ்!"(பெரிசு வாயவே திறக்க மாட்டேங்கறாரே!)
"உங்க வீட்ல யாரும் வரலையா? ஆண்டி, யுவர் சன்.."
"நோ, ஷீ இஸ் பிஸி இன் ஹெர் ஓன் வே.."(அவங்க அவங்க ரூட்ல பிஸி - என் வழித்தனி வழி!! ஹி,ஹி, இரண்டாவது வாக்கியம் நானா சேர்த்துகிட்டது, அவரு சொல்லலை)
"யுவர் சில்ரன்?"
"ஓ, ஹி இஸ் இன் யூ.எஸ்" (மனம் யுரேகா..! என் கும்மாளமிட்டது! என் யூகம் சரி)
"அவர் இங்க வருவாரா?""வெரி ரேர்லி. ஹிஸ் சில்ரன் டோண்ட் லைக் திஸ் அட்மாஸ்பியர்"(எப்பவாவது; அவன் பிள்ளைங்களுக்கு இந்த சூழ்நிலை பிடிக்காது)

எனது அடுத்த ஜோசியம் : " டிட் ஹி ஸ்டடீ இன் I.I.T?"
"யெஸ்!! யூ நோ ஹிம்?"(அட, உனக்கு அவனைத் தெரியுமா?)
"நோ, ஜஸ்ட் அ கஸ்" ( சும்மா ஒரு யூகம்தான்!)
"ஓகே, அப்புறம் பார்க்குறே"ன்னு சொல்லிட்டு, வழக்கம் போல என்னய அம்போன்னு விட்டுட்டு போன் அம்மாவைப் பிடிக்கணும்னு வேகமா ஓடினேன்.
"என்னடா, புது வம்பா?"
"இல்லம்மா, நான் யூகிச்சது சரி."
"சிவனேன்னு கிட; ஆபீசுக்கு நேரத்துல போற வழியப் பாரு! சும்மா அந்தாளு பின்னால அலையாத!"

சிவனேன்னு கிடக்க நம்மால் முடியுமா என்ன?
கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சதுல, மாமாவுக்கும், மாமிக்கும் ஒரே விஷயத்துல ஒத்துமை.
அது- யோகாசனப் பயிர்ச்சி!!கவியோகி சுத்தானந்த பாரதி எழுதின "எல்லோர்க்கும் யோகாசனம்", புத்தகம் கொடுக்குற சாக்குல, அந்த வயசானவங்க பத்தின என் யூகங்கள்லாம் சரின்னு தெரிங்சு, மனசே பாரமாகிபோச்சு.
என் யூகம் சரிங்கறத விட, பையன் இங்க வர்றது அவன் குடும்பத்துல ஒருத்தருக்கும் பிடிக்கலைங்கைறதும், அவர் போனப்புறம், தனக்குக் ஒரு "கோடி" போட்டு மூடீட்டு, அந்த வீடும், இடமும் கிட்டத்தட்ட ஒண்ணறை கோடி பெரும், அத வித்து பணம் பண்ணிருவான்னு சொல்லி அழுதாரு! அந்த வீட்டுக்கார அம்மாவோ, தடாலடியாக, "இந்த பாருப்பா, அப்பா அம்மாவை பக்கத்துல வெச்சு காப்பாத்த நாங்களும் புண்ணியம் செஞ்சிருக்கணும், அவனுக்கும் கொடுப்பினை இருக்கணும்! ஒனக்கு புள்ளயிருந்தான்னா, தயவு செஞ்சு ரொம்ப படிக்க வெச்சிராதே! அவனுங்க ரெக்க மொளச்சா காணாம போயிடுவாங்க!"ன்னாங்க!

Brain Drain - மூளை வரட்சி!! - அதப் பத்தி தனியாவே, முந்திய பதிவுல எழுதியிருக்கேன்.

சரி, வாக்கிங் போறப்ப வேற சில அசிங்கங்களும் நம்ம கண்ல பட்டுத் தொலையுது!அரை டவுசர் போட்ட பணக்காரர்கள்; இல்ல, NRI ங்களும், நாய் ஒண்ணை இழுத்துகிட்டே ஓடுறது. அது அந்தாள இழுத்துகிட்டு ஓடுதா, இல்ல அந்த ஆள் நாய இழுத்துகிட்டு ஓடுறானான்னு, ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்!!

பணக்காரனாக் காண்பிச்சுக்கற அடையாளச்சின்னம்தான் இந்த நாயும், அரை டவுசரும்! (NRIக்கு நான் சொல்ற விளக்கம்- NRI- "நாறி" நெல குலஞ்சு வர்றவன்- அங்க ஆயிரம் சொன்னாலும் நம்ம வேத்து மனுஷங்கதான்! உயர் பதவி எல்லாருக்கும் கிடைக்காது; அதே போல சம்பளமும். அவனளவுக்கு நமக்கு தர மாட்டான்! கலாச்சாரமும் கெடும்..!) இவங்களோட, அவங்க வீட்டுக்கார அம்மையார்! அவுங்களும் அரை டவுசர், லிப்ஸ்டிக், டை (Hair Dye) இத்யாதியோட, மெதுவா கூடவே ஓடி வருவாங்க! சரி, அவங்க ஓடுனா சரி. கூடவே, மொபைல்! அந்தக் கொடுமை பத்தி என் தனிப் பதிவு படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்! எதோ, ஊர்ல இருக்குற அத்தனை பிசினஸ¤ம் அந்த நொடிலயே பேசி முடிக்கிற மாதிரி "அஹ அஹான்னு சிரிப்பு, திடீர்னு சீரியசா முகத்த வெச்சுகிட்டு, குசுகுசுன்னு பேசுறது, அப்புறம் எதுக்கு காலைல வந்தோம்னு ஞாபகம் வந்தமாதிரி, கொஞ்சம் ஓடிட்டு, திடீர்னு சிலை மாதிரி நின்னுடுவாங்க!
என்னன்னா, கூட வந்த ஜிம்மியோ, டாமியோ, நடு ரோடுன்னு பார்க்காம், காலைத் தூக்கி...(நின்றாடும் தெய்வமேன்னு பாட்டு பாடறேன்னு நினச்சிங்களா, அதான் இல்ல!) அங்கயே மூச்சா, நம்பர் டூ, எல்லாம் செய்யும்!! என்ன நாகரீகம்? இவுங்க நாய் வளர்க்கட்டும், ஏன் ஒரு குட்டி டினோசாரே வளர்க்கட்டும்! யாரு வேணான்னாங்க? அதுக்காக இப்படியா, காலைல வெளிய கூட்டி வந்து ரோட அசிங்கம் செய்வாங்க? தோராயமா, எங்க ஏரியாவுலேயே, ஒரு 20 நாய்ங்க காலைல எஜமானருங்கள இழுத்துகிட்டு வரும்! அத்தனையும் காலைக் கடன் முடிச்ச அடையார் க்ளப் ரோட்டையோ, இல்ல செனடாப் ரோடையோ நெனச்சுப்பாருங்க! பாவம், தெருக்கூட்டும் மக்கள்! ஒரு ஏரியாவே, இப்படி கலகலத்துப் போனா, இப்படி பல பெரிய தலைங்க இருக்குற எல்லா ஏரியாவையும் நெனச்சுப் பாருங்க! ஒரு பெரிய.. ஹ¥ம், வெணாம்; நினச்சாலே, குமட்டுது. இவங்கள "நாகரிகக்கோமாளிகள்''னு ஏன் கூப்பிடக்கூடாது?

அதே ஏரியாவுல இருக்குற ஒரு பெரிய போலீஸ் அதிகாரியின் பசங்க, திடீர்னு எங்க காம்பவுண்டுக்குள் வந்து கலாய்ச்சுட்டு போயிருக்காங்க! டிரைவர்ல இருந்து, வாட்ச்மேன் வரைக்கும், வீட்டு பெண்கள் உட்பட எல்லாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணாங்க! சரின்னு ஒரு சனிக் கிழமை, அவனுங்க, யாரு, என்னன்னு விசாரிக்க நேர்லயே பிடிக்கணும்னு, ஒரு முடிவா காத்திருந்தேன். பார்த்தா, திடீர்னு, அஞ்சலி சினிமால வர்ற ரெண்டு பொடிசுங்க 'சர்"னு சைக்கிள்ல உள்ள வந்தாங்க. வீட்டுக்குள்ளயிருந்து குரல், "இவங்கதாங்க, இவங்கதாங்க!" கைலயிருந்த கிரிக்கெட் மட்டைய (சே, ஒரு எலியைப் பிடிக்க குத்தீட்டி கொண்டுபோற மாதிரி.. ) கீழ போட்டுட்டு, வெளில ஓடுனேன், சுத்தி வந்து அதுல ஒருத்தன வளைச்சு பிடிச்சேன். "யார்றா நீ?"பின்னாடியே அடுத்த பொடிசும் வந்தான்..
"ஹலோ, கைய எடு!" - பொடிசு 1.
"நாங்க யார் தெரியுமில்ல?" - பொடிசு 2.
"யாரு?""எங்க அப்பா போலீஸ் ____ . (பெரிய தலைதான்!) ; பக்கத்துல வேடிக்கை பார்த்துகிட்டிருந்த டிரைவர், "ஆமா சார்,____ ன்னாரோட மகனுங்க. ரெண்டும் ரெண்டு வாலு."
"சரி, வாங்க உங்க வீட்டுக்கு போகலாம்!".
"ஓ, அப்பா வீட்லதான் இருக்கார்!"(ரொம்பவே தைரியமான பயலுங்க!)
"வீட்லயா?"
டிரைவர் மெதுவாகக் காதில் ஓதினான் ( சார், அவரு என்க்கொயரில மாட்டிகிட்டு ஹவுஸ் அரெஸ்ட் ஆகி வீட்லயே இருக்காரு!)சரிதான்; நல்ல அப்பா, நல்ல பசங்க! லேசாகக் கண்டித்து அனுப்பி வைத்தேன்!
-------------------
அப்புறம் ரொம்ப மனசப் பாதிக்கிற விஷயம், அக்கம்பக்கத்துக் காரனுங்க கண்டுக்காம போறதுதான்! எல்லாம் பெரிய பணக்காரங்க,ஆனால் பரஸ்பரம் சிரிக்கிறது கூட இல்லை! அதிசயமாக, மேல் ·ப்ளாட்டில் வசிக்கும் ஒரு பெங்காலி, அப்பாவின் கரும காரியங்களிலும், என் மனைவி திடீரென ப்ரசவ வலியால் துடிச்சப்ப ராத்திரி கார்ல கூட்டிகிட்டு போயும் உதவி செய்தார்!
--------------
இதைத் தவிர, இஸ்திரிக்காரன்லேர்ந்து, ஆட்டோக்காரன் வரைக்கும் , நம்ம ஏரியாக்குள்ள கால் வெச்சுட்டான்னாலே, சூடு வெச்ச மீட்டர் மாதிரி அவுங்க கேக்குற ரேட்டே தனி! இந்த கொடுமையிலிருந்து வெளி ஊர்லருந்து நம்ம வீட்டுக்கு வர்றவங்களை மீட்டுகிட்டு வரதுக்காகவே, ஒரு கார் வாங்கி வெச்சுருக்கோம்னா பாருங்களேன்!
அண்ணன் கம்பெனியும், நான் வேல பார்க்குற கம்பெனியுமே வெளிநாட்டுக் கம்பெனிங்க தான். அவங்க வரப்ப வரவேற்கவே, பவிஷ¤ பண்ணவேண்டிய கட்டாயம் அண்ணனுக்கு! வீட்டுல பார்த்தா, நாங்க சாதாரணமாத்தான் இருக்கோம். சிக்கனமா, அளவோட வெளிக்காத்து,கருப்பு படாம!- அதாவது பணக்காரக் காத்து மற்றும் கருப்பு(ப்பணம்) மேலே படாம வாழறோம்! "உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று..ங்கிறீங்களா?" வைத்துப்....பேசலையே? இருக்கோம்.ஊருக்கு பவிஷ¤, வீட்டுக்குள் சிம்பிள்! வேற வழி??

21 March 2006

சூட்டுக் கோட்டு!

பல விஷயங்கள்ல இன்னும் வெள்ளக்காரன் நம்ம மனச விட்டுப்போகல! தமிழ்நாட்ல பேசற தமிழ்ல பாதி ஆங்கிலக் கலக்கல். சைக்கிள் ஓட்றான், பஸ்ஸப் பிடி, பஞ்சர் ஆயிருச்சி, சிக்னல் போட்டான், லைட் எறியுது - இதெல்லாம் தமிழ்னா, அப்ப கட்டாயம் நான் எழுதறது, செந்தமிழ்! என்ன சொல்றீங்க?
முதல்ல பள்ளிகூடத்துலேர்ந்து ஆ....ரம்பிப்போம்!ஷ¤, சாக்ஸ் போட்டு, யூனி·பார்ம் போட்டா, நல்ல ஸ்கூல், இல்லேன்னா இல்ல! வீட்டுப் பட்ஜெட்ல துண்டு விழுதோ இல்லையோ, பசங்க யூனி·பார்ம் தைக்க மட்டும் - துண்டு என்ன, வேட்டியே விழாது! கடன் வாங்கியாவது,பையனுக்கு வெள்ளையும் சொள்ளையும் மாட்டி அனுப்ப அம்மாக்கள் ஆசப்படறாங்க! கான்வென்ட்ல படிக்கிறான்னு சொன்ன கௌரவம். இல்லன்னா இல்ல.
அடுத்து, கொஞ்சம் பெரிய இடங்கள்ல பார்ப்போம்!
ஒரு பொறுப்பான வேலைல இருக்கற ஆசாமி, சூட், கோட் போட்டு, ஷ¤, சாக்ஸ் சகிதம் போனாதான் இங்க மதிப்பு!இன்டர்வ்யூன்னாலும் சரி, இல்ல பல சர்வதேச நிறுவனங்கள்ல வேல செஞ்சாலும் சரி, கோட், டை - வேணும். பல ரவுசுங்களை இங்க உதாரணம் சொல்றேன் :-
இப்பதான் சா·ப்ட்வேர் கம்பனிங்களுக்கு சுக்ர தெச அடிக்குதே! பெரிய ஏக்கர் கணக்கான இடத்தை வாங்க ஒரு வெளிநாட்டான், நம்முர் லோக்கல் பார்ட்டியோட ஒப்பந்தம் பண்ணி, இடத்தைப் பார்க்க வர்றாரு. அது கடக்கு திருவள்ளூர் அவுட்டர்ல சுத்து பத்துல மரமேயில்லாத ஏரியா! நம்மாளு சூப்பரா, கோட், டைல்லாம் மாட்டிகிட்டு, ஏ.சி. கார்ல பார்ட்டிய அழைச்சுகிட்டு போறாரு. ப்ரோக்கர் வந்து, எடத்தை பார்த்து, மேட்டர் முடியறமட்டும் எல்லாரும் வெயில்ல நிக்க வேண்டியதா போச்சு! வெள்ளக்காரப் பார்ட்டியோ, நீட்டா, அரை ட்ரவுசர், டீ-சர்ட் போட்டு வந்துட்டான்! ஜம்னு வெயில்ல காத்தாட, ஸ்... ஆட நடக்குறான். அவனுக்கு தெரிஞ்சிருக்கு. இங்க இருக்கற தட்ப வெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி, ட்ரவுசர்ல வந்துட்டான்! நம்மாளுக்கோ, வேர்த்து கொட்டிருச்சு! கையோட டையக் கழட்டமுடியல; கோட்டு கனமா இருக்கு! சா·ப்ட் வேர் கம்பெனி இடம் வாங்கிச்சோ இல்லையோ, நம்மாளுக்கு அண்டர்வேர் வரைக்கும் நனஞ்சிருச்சி! நடந்து நடந்து, வெயில் ஏற, ஏற, அய்யாக்கு, கல்ல கட்டிகிட்டு காட்ல நடந்த மாதிரி ஆயிருச்சி! எரியிற எண்ணையில அக்மார்க் நெய்ய ஊத்துனமாதிரி, ·பாரின் பார்ட்டி, அக்கரையா விசாரிக்கிறான்! மிஸ்டர் பதி (வெங்கடாசலபதியோட சுருக்கம்!) ஆர் யூ ஓ.கே? நாட் ·பீலிங் வெல்? (என்ன உடம்புக்கு? ஏதும் சரியில்லையா?) பதி வெயில்ல பாதி ஆயிட்டான்யா!
அதவிட கொடுமை, இந்த கான்பெரன்ஸ் கும்பல்கள். ஆளாளுக்கு டை கட்டிகிட்டு, குறுக்க நெடுக்க நடப்பானுங்க! மீட்டிங் ஆரம்பிச்சதும், எல்லாத்தையும் இழுத்து பிடிச்சுகிட்டு, உட்காருவானுங்க! ஏ.ஸி. இருந்தாலும், உள்ள ஊத்தும்! நம்ம நண்பர் ஒருத்தர், செமினார்ல பவர் பாயிண்ட்ல ஒரு சொற்பொழிவு செய்யவேண்டியது. அவருக்கு கனத்த சரீரம்! எங்கோ, ஒரு மூலைல அவருக்கு உட்கார இடம் கிடச்சுது. கொஞ்சம் வேர்க்கற உடம்பு. அங்க காத்து சரியா வீசல. இவரு முறை வர்ற போது, அய்யா எழுந்து போறாரு, பின்னாடி, உட்கார்ற இடத்துல, தண்ணி சேர்ந்து, ஒரே தொப்பல்! ரெண்டு ரவுண்டு பின்னாடி தெரியுது! இவரு மேடைக்கு போக, பார்க்கறவன்லாம், குசு,குசுன்னு சிரிச்சுக்கிறாங்க! கம்ப்யூட்டர் திடீர்னு வேல செய்யல. சரி, உடம்போட வெச்ச ·பைல்லேர்ந்து தயாரா வெச்சிருந்த பேப்பரை வெளிய எடுத்து ஸ்லைடு காட்டலாம்னு பார்த்தா, எல்லாத்துலயும், பசக், பசக்னு, தண்ணி சீல்! அவர் கதி அதோகதியானத சொல்லணுமா என்ன?
மேல்மட்டம், இடம் பொருள் ஏவல் அறிந்து உடை அணியமாட்டாங்கங்கிறது, இந்த மட்டுக்கும் தெரிஞ்சாச்சு.
கொஞ்சம், சரிமட்ட ஆளுகிட்ட வருவோம். இவனுங்க டார்ச்சர் அதவிட! தாங்கமுடியாது!முக்கியமா, இந்த சேல்ஸ் பாய்ஸ்!
ஊதுபத்தி விக்க, கத்தி விக்க, (கூவி இல்லேங்க, நறுக்குற கத்தி), க்ரெடிட் கார்ட் விக்க, விக்கினா வாங்கிக் குடிக்கிற தண்ணி விக்க, இப்படி எல்லாத்துக்கும் டை கட்டி (டை சுறுங்கிப் போய் இருக்கும்; சட்டைக்கும், டைக்கும் ஏழாம் பொருத்தம் இருக்கும்; டை கட்டின அம்பி கீழ ஷ¥வுக்கு பாலிஷ் காட்டி, பல மாமாங்கம் ஆயிருக்கும்! ) இப்படி எல்லாத்துக்கும், சொல்லாமலே நாகரிகம்கிற பேர்ல டை, ஷ¥!
வடக்கத்திக்காரன் ஷெர்வானி, காலர் இல்லாத கோட்டுன்னு போட்டுக்கறான். அங்க கொஞ்சம் குளிர்; அதனால ஓகே. நம்முர்ல? அரவேக்காடு பசங்கள கிளப்பிவிடுற மாதிரி, நம்ம சினிமா ஹீரோக்களும், கண்ல அறைற கலர்ல சட்டைய மாட்டிகிட்டு,அதுக்கு சம்பந்தமேயில்லாத கலர்ல, கோட், வெள்ளை ஷ¥, ஆரஞ்சு டைன்னு மாட்டிகிட்டு, சஹாரா பாலைவனத்துல டூயட் பாடுற மாதிரி சீன் நடிச்சுகிட்டு இருக்காங்க! தமிழ்நாட்டு வெயிலுக்கு நல்ல துவச்சு இஸ்திரி போட்ட கதர் சட்டை, பாண்ட்தான் சரி!
அந்த காலத்துல வெள்ளக்காரன் கம்பெனில சேர்ந்துட்டா, பண புழக்கம் குறையாது, சர்,பகதுர்னு பட்டங்களும் குறையாது! மத்தவன் நம்மள் 'துரை' மாதிரி பார்த்தாதான், நமக்கு மரியாதைன்னு கொஞ்சம் 'வெள்ளத் தோல்' மோகத்துல தப்பு பண்ணிட்டோம்! இப்ப என்னய்யா வந்துச்சு? கொஞ்சம் இருக்குற இடம் என்னன்னு தெரிஞ்சு உடை அணியக்குடாதா?
அதுவும் இங்லீஷ் பேசுறேன்னு கொலை பண்ற புண்ணியவான்களை, இங்க்லீஷ்ன்னா என்னன்னே தெரியாத சைனா ப்ரதேசத்துக்கு நாடு கடத்தணும்! நுனி நாக்குல பேசுனாதான் மதிப்பாங்கன்னு, நுனிப்புல் மேயிர ஆடு மாதிரி திரியறானுங்க! அதுவும் வெள்ளக்காரன் காலத்து மBBu! துரைங்க கிட்ட இங்லீஷ் பேச தெரிஞ்சா, மத்த மக்கள் பேசுறத மொழிபெயர்த்து சொல்ல ஆங்கில அறிவு உதவுச்சு! அதவெச்சு, துரை மனசுல இடமும்,பதவியும் பெற உதவுச்சு! இப்ப, எதுக்கு, எங்க பேசுறோம்னு தெரியாமலே, இங்க்லீஷ் பேசுறாங்க!
எங்க ஊர்ல ஒரு லண்டன்ல படிச்ச ப்ரொபசர், ஏதோ கஷ்டம்னு வந்து,லோக்கல் கல்லூரில தலைமை பேராசிரியரா சேர்ந்தாரு. அவரு, அமாவாசை ஆனா, மடியா, கஷ்டப்பட்டு, வெள்ள வேஷ்டி கட்டிகிட்டு, சைக்கிள்ல அரக்க பறக்க பிள்ளையார் கோயில் போயி, தர்ப்பணம் பண்ணிட்டு போவாரு! வழில ஒரு ப்ளாட்பாரக் காய்கறிக் கடை. அவசரமா,சைக்கிள்ல இருந்த படியே, அந்த கடைக்காரம்மாகிட்டே, "ஹை, பிச்சம்மா, ப்ளீஸ் கிவ் மீ க்ரீன் பனானா." என்று கேப்பாரு. வேட்டி விலகியிருக்கும்! அவருக்கு வேஷ்டி கட்ட வேண்டிய நிர்பந்தம், அமாவாசை அன்னிக்கி மட்டுந்தான்! கடைக்காரம்மா, தலைல அடிச்சுகிட்டு, "ஏஞ்சாமி கொல்ற! கால நேரத்துல! வாழைக்காய் சரி, தர்றேன்; முதல்ல வேட்டிய சரி செய் சாமீ! நீதான் அமாவாசை அமாவாசை காய் வாங்க வர்றயே, தெரியாதா, அதுக்கு எதுக்கு இங்க்லீஷ¤?" ந்னு போடா ஒரு போடு!
போன் கம்பெனி, டிக்கெட் வாங்குற மல்டிப்ளெக்ஸ் தியேட்டர், க்ரெடிட் கார்ட் கால் செண்டர், இப்படி எங்கேயும் இங்க்லீஷ¤! தமிழ் பேசுங்கய்யா தமிழ்! சரி, தமிழ்நாட்டத் தாண்டினா, நெலமை வேற! இங்க்லீஷ் கூட எடுபடாது! ஹிந்திதான்! தெரியல, நாம செத்தோம்! பொழப்பு தேடி, போய், பொழச்சு வந்த நண்பருங்க பல பேரு சொல்றது என்ன? " நம்மாளு எங்க படிச்சா உருபட்டுறுவானோங்கற பயத்துலதான்,திராவிடம், தமிழ்னு பேசி, பசப்பு காட்டி, வேற எங்கயும் பொழைக்க முடியாம செஞ்சுட்டாங்க; அரசியல் வாதிங்க" ன்னு சொல்றாங்க! வேணாம், இது வேற பொலிடிக்ஸ் மேட்டர்! நமக்கு சரிப்படாது. பின்னர் பார்ப்போம்!
(திரை)