28 January 2010

சென்னைச் சங்கடம்

நல்லா வெச்சாங்க சென்னை சங்கமம்! 'சென்னை சங்கடம்'னு பேரு வெச்சுருக்கலாம்! பின்ன என்னங்க? ஊர்ல அவனவன் படுத்துருக்குற பார்க்கையெல்லாம் தூசி தட்டி, அங்கங்க விழா நடத்தினாங்க! ஆனா, சர்வ வல்லமை படைத்த கொசுவை இவங்களால துரத்த முடிஞ்சதா?

சங்கடத்துல ஒரு சாம்பிள்: நல்லா தூக்க கலக்கத்துல ஆடற பெருசுங்க 4 வேட்டிய மேல போர்த்திகிட்டு, மெதுவா ரவுன்டு கட்டி ஆடினாங்க. எதோ ஆதிவாசிகள் நடனமாம். பார்த்த நமக்கே தூக்கம் வந்தது! அப்புறம் கொஞ்சம் மோகன்லால் மாதிரி இருந்த பரமசிவனும், பொம்பள வேஷம் கட்டின ஆம்பளை காளியும் சும்மா சுத்தி சுத்தி மிரட்டுனாங்க! மகிஷாசுர மச்சினி ஸாரி, மர்த்தினி ஆட்டமாம். அதைப் பார்த்த பையன் வீட்ல வந்து, நாக்கைத் துறுத்திகிட்டு, தங்கச்சிங்களைப் பார்த்து, 'வே' ன்னு கத்திகிட்டே வெரட்டுறான்! என்னடான்னா, 'நான் காளி' அப்படீங்கிறான்! ஆஃப்டர் எபஃக்டு!

சாம்பிள் 2: மேல்ஸ்தாயி போன பாடகி அவசரமா சறுக்கி கீழ்ஸ்தாயில டர்றானது, திருவாளர் இலவச ஊசியாரால் தான்! ஆமாம், இலவச டி.வி. இலவச பீவி, மன்னிக்கணும் அடுப்பு, இலவச பட்டா, கம்மி விலைல சல்பேட்டா (டாஸ்மாக்) ன்னு கொடுக்கறதோட சீசன் ஸ்பெஷலா இந்த இலவச ஊசியாளர் உற்பத்தியும் தமிழ் நாட்டுல ஓஹோன்னு இருக்கு!

சரி, கொசுதான் நம்மளை சும்மா விட்டதா? அங்க ஆட்டம் சூடேற சூடேற, இங்க கொசுக்களின் ரத்த ஆட்டம் அதிகமாகி, சில கொசுக்கள் குடிச்சு, குடிச்சு நகர முடியாமல், வெளியேறும்

கூட்டத்துல நசுங்கி செத்ததா கேள்வி!

நான் போனது கடைசி நாளா போயிருச்சு! அதான் வினை! ஆட்டம் முடியறதுக்குள்ள, ஸைன் போர்டு கான்டிராக்ட் ஆளுங்க, பட்டி தட்டியெல்லாம் பிரிக்க ஆரம்பிச்சாங்க! அங்கங்க போர்டு கழட்டின இடத்துல, பேனர் குத்தின பின்னுங்களையும், ஆணிங்களையும் போட்டது போட்டபடி போயிட்டானுங்க! வெளில பைக்கை பார்க்கிங் செஞ்ச இடத்துலயும் ஆணி இருந்திருக்கு! என் கெட்ட நேரம், பைக் டயரு அதுல ஏறி, முன் டயர் பங்சர்! முன்னாடி உட்கார்ந்திருக்கிற சின்ன பெண்ணோ, "என்னப்பா, போர் அடிக்குது, ஏறி ஓட்டுப்பா, என்னப்பா உருட்டிகிட்டு வர?" என்று நுணத்த, பசியோடு, பக்கத்துல இருக்கும் பஞ்சர் கடை தேடி பொண்ணு, பொண்ணு உட்கார்ந்த வண்டி, ரெண்டையும் தள்ளிகிட்டு போறதுக்குள்ள, நமக்கு நாக்கு நுரை தள்ளிடிச்சு!

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தள்ளுனதுல, அடி வயிரு வலியும், பசியும் ஆளை அடிச்சு போட்டுருச்சு!

கொசுக் கடியை நாம் மறந்தாலும், அது நம்மளை மறக்காது போலிருக்கு!

ர்ர்ர்ரொம்ப ஆராய்ந்து கண்டுபிடிச்ச ‘கொசுறு செய்திகள் இதோ:

சின்னதா ஓமக்குச்சி ரேஞ்சுக்கு இருக்கும் ஒரு ஸைலண்ட் கில்லர் கொசு, சாம்பல் கலர்ல இருக்கும். இந்த கொசுவும் ரத்தம் குடிக்குமாங்கிற

கேஸ்! கடிச்சப்புறம்தான் தெரியும், கடிச்ச எடத்துல் ஒரு குட்டி மலை உருவானது!. எரிச்சல் ரெண்டு மூணு நாளுக்கு இருக்கும். மதுரை ஏரியால இதுதான் கிங்.

இன்னொண்ணு உடம்புல வரி வரியா வீபூதி பூசி விடிகாலைல வெளிச்சத்துல அலையும். அத நம்பவே நம்பாதீங்க. எங்க மார்கழி மாசத்துல் உடம்பெல்லாம் விபூதி பூசி திருவெம்பாவையோ இல்ல நாமம் பூசி திருப்பாவையோ சொல்லக் கிளம்புதுன்னு!

அதுக்கு நான் வெச்ச பேர் ‘ஜீப்ரா கொசு. கடிக்கிறது fast food மாதிரி fast attack. யோசிக்காது, அப்படியே attack and suck! அப்புறம்தான் கொசு பத்தி விபரம் தெரிஞ்சவங்க, இந்த டைப் கொசுதான் சிக்குன்குனியா பரவக் காரணம்னு இப்ப கண்டு பிடிச்சிருக்காங்க!

சிக்னு கடிச்சுட்டு குனியாம போய்கிட்டே இருக்கும், சிக்குன்குனியா கொசு. வேஷத்த வெச்சு நம்பாம கைதட்டி அடிக்க வேண்டிய மிக கொடிய வில்லக் கொசு இது. முக்கியமா, காலைல வாசல்ல உட்கார்ந்து பேப்பர் படிக்கிற பெரிசுங்க, கோலம் போடுற பொண்ணுங்க (அதெல்லாம் யாரு இப்ப போடுறாங்கங்கறீங்களா, கிராமத்தில, சில கிராமத்துல பார்க்கறேனே!!) காலைல இந்த கொசுதான் அதகளம் பண்ணும். உஷார் பேப்பராலேயோ, கோல டப்பாவாலேயொ சம்ஹாரம் பண்றதுதான் ஒரே வழி!

புதுசா இப்ப வந்திருக்கிறது ராஷஸ கொசு. இது சிட்டிலதான் வளரும் போல! வளமா, மெடொனால்டு, கெண்டகின்னு சென்னை மாநகரத்துல சாப்பிட்டு வளர்ந்து, அசுர சைஸ்ல வளர்ந்து இருக்கு, வெயில் காலத்துல அதிகம் பார்க்கலாம். Heat resistant கொசு போல! இது ரத்தம் அதிகம் குடிச்சு, ஹெலிகாப்டர் சைஸுக்கு பறந்து வந்து ஈசியா கைக்குள்ள மாட்டிக்கும். உடம்பு அப்படி! சப்! பசக்! அவ்வளவுதான் பரலோகப்ராப்தி ரஸ்து! நல்லதுக்கு நாலு தப்பு பண்ணா பரவாயில்ல! (நாயகன் டயலாக்) வீட்ல நாலு பேர சிக்குன்குனியா, மலேரியால சிக்காம காப்பாத்த நாலு கொலை பண்றது தப்பில்ல. ப்ளூ க்ராஸ் ஆளுங்க அதை (கொசு வதை) தடுக்க கொடி தூக்காம இருக்கணும்!

இன்ன பிற ஆராய்ச்சி முடிவுகள்

கருப்பு, கருநீலம், கரும்பச்சை, காட்பரீஸ் ப்ரவுன் போன்ற அடர்த்தியான நிறங்கள் போட்டுக்கிட்டா, அது கொசுவுக்கு வெத்தல வைக்கிராப்ல. கட்டாயம் கடிக்கும். படுக்கை விரிப்புகள், தலையணை விரிப்புகளில் கூட கருப்புக்கு தடா.

அதேபோல், வெளியே மாலை வெளிச்சம் அதிகமா இருக்கும், வீட்டுக்குள்ளே இருட்டு சூழும் நேரத்துல, படுக்கை, மேசை, நாற்காலிகளை தட்டிவிட்டால், உட்கார்ந்திருக்கும் கொசுக்கள் அவசரமா, வெளிச்சத்தை நோக்கி போகும். உடனே. கதவுகள், ஜன்னல்கள் அடைத்து அப்புறமாய் வீட்டு விளக்குகள் எரியவிட்டால், கொசுக்கள் தொல்லையிலிருந்து மீளலாம். திறந்த ஜன்னலும், ஒளிரும் விளக்கும் இரவு நேரங்களில் கொசுவுக்கு நாம் போடும் ரத்தினக் கம்பளம்.

சரி, இருட்டப் போறது. கணினிய அணைச்சுட்டு, ஜன்னல் மூடிட்டு, வர்றேன். சங்கமம் சங்கடமானதுல வந்த ஞானோதயத்துல பண்ண கொசு ஆராய்ச்சி. இதற்காக காதுகிட்ட பாடும் கொசு, புரண்டுகிட்டே டிஸ்கோ ஆடும் கொசுக்களைப் பத்தியெல்லாம் ஜுவாலஜி ஆராய்ச்சியாளன்கிட்ட கேக்கறமாதிரி கேள்வியெல்லாம் கேட்டு பின்னுட்டம் போடக் கூடாது!

சரி, சங்கடத்துக்கு ஸாரி, சங்கமத்துக்கு போறதுக்கான முன்னெச்சரிக்கைகள்:

அடுத்த சங்கமத்துக்கு போகிறபோது, வெள்ளையுடுத்தி போவது, சிறிது கொசுக்களை அருகில் வருவதிலிருந்து மட்டுப்படுத்தும். கடைசிநாள் போகாதீர்கள், அப்படி போவதானால், வண்டியில் போகவேண்டாம். கால்நடையாக (! இப்ப மட்டும் மனுஷனாவா பலர் நடந்துக்கறாங்க? எருமையாட்டம் மிதிச்சுட்டு போனானே ஒரு டுபாகூர் என்று பக்கத்து வீட்டு ரத்னக்கா சத்தம் போடறது கேக்குது!) நடந்து போங்கள். பசங்களுக்கு கையில் காப்பு அல்லது மந்திரிச்ச தாயத்து கட்டி கூட்டிபோவதுநலம். கிராமிய இசைங்கிற பேர்ல வெளிறின மூஞ்சி, ரத்த சிவப்புநாக்கும் ரவுண்டுக் கண்ணுன்னு பலர் பயங்காட்டறது மத்தவங்க எப்படி ரசிக்கிறாங்களோ, சின்னப்பசங்க கட்டாயம டரியல் ஆகிடுவாங்க! அதுக்கு முன்னெச்சரிக்கையாகத்தான்!