27 August 2007

அமிர்தத்தை நம்பி அல்வாவை விட்ட கதை...


25.8.2007 சனிக்கிழமை, போகாத போகாதன்னு பாழும் மனசு சொன்னாலும், கேட்டேனா? அதான் அவஸ்தைப்பட்டேன்! எங்க போனதப் பத்தி இந்த புலம்பல்? ஐயா, பெரிய மனுசன் வீட்டுக் கல்யாணம், அதுவும் அரசியல் வாதி வீட்டு கல்யாண வரவேற்புக்குப் போனா, கரை வேட்டிங்க, நம்மள கரை கட்டிடுவாங்கன்னு நண்பர் சொன்னாரு. ஏதோ அப்பப்ப எழுதறயே, எனிஇந்தியன்.காம் ப்ரசன்னா ஒரு புத்தக வெளியீட்டு விழா நடத்துறாரு, வாய்யான்னு கூப்டாரு. நட்பு அங்கே தல தூக்க, அறிவா, மனசான்னு ஒரு போராட்டமே நடத்த, மனசோட பேச்ச கேட்டு, ஒண்ணுக்கு ரெண்டா ரெண்டு வரவேற்புக்கு போனேன்.



ஒண்ணு சைவ வைணவ ஐக்கியம். இதுக்கு மேல வெவரமா சொல்ல முடியாது. நம்மளயும் 'மதம்' பிடிச்சவன்னு கட்டம் கட்டிடுவாங்க! உலக வங்கில வேல பார்க்கிற நண்பி, நண்பர் கல்யாணம். நண்பி, வரலாறு.காம் துவக்குனதுல ஒருத்தங்க. நாட்டிய தெரிஞ்சவங்க. வரலாற்றுப் பிரியை. அந்த சகவாசத்துல ஒரு எட்டு போய் எட்டிப் பார்த்தேன். அளவான கூட்டம், அமைதியான பேச்சு, உபசரித்தல். சாப்பாடக்கூட (ஆ, அது நல்லா இருந்திச்சுன்னு பின்ன தெரிஞ்சு என்ன ப்ரயோஜனம்? ஹ¤ம்! இதைத்தான் தலைப்புல அல்வான்னு சொன்னேன்) கை வெக்காம, நேரா ஜிம்னாஸ்டிக்ஸ், அக்ரோபாடிக்ஸ்லாம் செஞ்சு, வளச்சு நெளிச்சு, கொஞ்சம் மெதுவா போனா, கூட்டம் குறையும்னு கணக்கு பண்ணி பைக்கை வெரட்டி, ஒரு வழியா சாந்தோம், எம்.ஆர்.சி மண்டபத்துக்கு (மாளிகை??) (ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோவிலுக்கு முன்ன வரும்) போய் சேர்ந்தேன்.


ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் ராட்டை போட்டு மூவர்ணக் கொடி நட்டிருந்தாங்க. காருங்க வர்றதும் போறதும், போலீஸ் கூட்டம்னு, "சும்மா அதிறுதுல்ல" ன்னு சொல்ற மாதிரி கூட்டம்!



அவனவன் வெள்ளையும் சொள்ளையுமாத் திரிஞ்சான் (ஸாரி, திரிஞ்சார்ர்ர்ர் - எங்க மரியாதை குறையுதுன்னு வீடு தேடி வந்து 'டின்' கட்டிடுவாங்களேன்னு ஒரு மருவாதைதான், ஹி, ஹி!). வயச மறைக்க தலைல சாயம், முகத்துல பவுடர். ஒரே கப்பு! ஒரு வழியா, மக்கள் வெள்ளத்துல நீந்தி, மேடை பக்கம் போனா, பெரிய க்யூ! இருக்காதா பின்ன? ராட்டை போட்ட மூவர்ணக் கொடி உள்ள கட்சி, தலைவரு, மத்தில அமைச்சரு, தஞ்சாவூர் பக்கம் பேரச் சொன்னா எதுற்ல வர்றவன் தோள் துண்ட கீழ எடுக்கற பெரிய குடும்பம், அவுங்க தங்கச்சிங்க கல்யாணம்னா சும்மாவா? க்யூல பக்கமா போயி நம்ம தலைய காட்டறதுக்குள்ள புதுசா கட்சி ஆரம்பிட்ட காப்டன் நடிகர், மூக்காலயே முருங்கக்கா ஜோக் பேசி டைரக்ஷனும் செஞ்ச கண்ணாடி நடிகர் மற்றும் அவர் மாஜி நடிகை மற்றும் தொழிலதிபி [தொழிலதிபருக்கு எதிர் பதம் ;) ] இவங்க வருகைக்காக நம்ம க்யூ அப்படியே ப்ரேக் அடிச்சுடுச்சு!
மீண்டும் ஊர்வலம் தொடங்கி (மெதுவா ஊர்ந்து போறதாலேயோ இந்த பேரு? சும்மா க்யூல நின்னா இப்படித்தான் , எதாச்சும் கன்னா பின்னான்னு மனசுல ஓடும்.)


மணமக்கள் பக்கம் போயாச்சு. வழக்கமா நான் அன்பளிப்புன்னா புத்தகங்கள் தர்றது வழக்கம். கொடுத்தேன். பொண்ணு ஞாபகமா, புதுமாப்பிள்ளைக்கு அறிமுகம் பண்ணி வெச்சாங்க. கை குலுக்கினேன். அடுத்த ஜோடிய வாழ்த்தறதுக்குள்ள (அக்கா, தங்கச்சிங்க ஒரே நாள் வரவேற்பு அதான்.) வேற ஒரு பெரிய மனுஷன் வந்ததால, அப்படியே நான் மேடைலேர்ந்து ஜகா வாங்க வேண்டியதாச்சு.



ஒரே பேச்சுச் சத்தம். கீழே வேற உன்னி கிருஷ்ணன் தன் பக்க வாத்திய சகாக்களோட பாடிகிட்டு இருக்காரு. நாகரீகம் தெரிஞ்ச (?) பல அரசியல் ப்ரமுகர்கள் மேடை அருகேயே நின்னுகிட்டு பெரிய தொண்டைல பேசிகிட்டு இருந்தாங்க. பாடறவனும் சரி, அதை கேட்க முயற்சிக்கிறவனும் சரி, ரெண்டும் இந்த இடத்துல கேனப் பயலுங்க! இங்க பாடவும் வரக்கூடாது, அவரு பாடறாரேன்னு கேட்கவும் வரக்கூடாது. பாடகர் கதி என்னவோ? அரசியல் நிர்பந்தமோ இல்ல விடமின் 'M' பண்ண வேலையோ யாருக்குத்தெரியும்? இதுக்கும் கர்நாடக சங்கீதத்தை மதிக்கிற.திருவையாறு உற்சவத்தை வருஷா வருஷம் ஆதரிக்கிற குடும்பத்துக் கல்யாணம், இது!



சரி, வந்த வேலையப் பார்ப்போம்னு, சாப்பாடு கூடத்துக்கு போனேன். சுமார் 15 நிமிஷம் அமைதி காத்தா இடம் கிடச்சாச்சு! உட்கார்ந்தாச்சு! சுத்தி பல கரை வேட்டிங்க (விருந்தோம்பலுக்குங்க, அதான தமிழர் பண்பாடு?) சுத்தி நின்னு மேற்பார்வை பார்த்துகிட்டிருந்தாங்க. புது மாப்ளை கோவில் கல்யாணத்துல எப்படி முழிச்சுகிட்டு நிப்பானோ, அப்படி, புதுசா வெள்ள டிரஸ் போட்டு பரிமாருற பசங்க முழியே சரியில்ல. மெதுவா சட்டையப் பார்த்தேன்.


நெஞ்சுல, என்னவோ எழுத்து போட்டு, கீழே,"நாகை" அப்படீன்னு எழுதியிருந்தது! சரிதான், புதுசா பட்டணம் பார்க்கறவங்கன்னு புரிஞ்சு போச்சு.
சரி, நம்ம புலம்பல் கதை.. சோத்துப் பட்டியலுக்கு வருவோமா? (இதைத்தான் அமிர்தம்னு நெனச்சு தலைப்புல போட்டேன்!)



பாட்டில்ல தண்ணி வெச்சாங்க. அப்புறம், வெங்காய சட்னி, அடுத்து இஞ்சி சட்னி... ஸ்டாப், ஸ்டாப்... "என்னய்யா இது முதல்ல பாயாசம்ல வெப்பாங்க? கல்யாண வீட்ல எவனாச்சும் காரச் சட்னில பந்தி ஆரம்பிப்பாங்களா'' ன்னு கேட்டா, என் பதில்--> "ஓ!ஆரம்பிப்பாங்களே (அதான் இங்க பார்க்குறேனே! அட,பெரிய மனுசன் வீட்டு கல்யாணாம்பா, அப்படித்தான் வித்தியாசமா எதாவது செய்வாங்க, பொறு, பொறு..)



அடுத்து குழிப்பணியாரத்த ஒருத்தன் இலைல வீசிட்டுப் போனான், அதுக்குள்ள இன்னும் ரெண்டு வெல்லப் பணியாரம், அடுத்து, செகப்பு கலர்ல வெந்தும் வேகாததுமா ஒரு சப்பாத்தி, ஒரு வட்டம் இடியாப்பம், அடுத்து ஒரு இட்லி, ஒரு தோசை, ஒரு ஜிலேபி, ஒரு பூரி, சாம்பார் சாதம், ஒரு கரண்டி குறுமா, ஒரு ஸ்பூன் ஊறுகா, ரெண்டு பெங்காலி ஸ்வீட், அப்புறம் ஒரு கரண்டி காய்கறி பிரியாணி, வேகமா வேகமா இலைல வந்து விழுந்தது. கொஞ்சம் தனித் தனியா இருந்தா ரசிச்சு சாப்பிடலாமே? சாப்பிடலாம்தான்; எவன் கேட்டான்? (அட, பெரிய மனுசன் வீட்டுக் கல்யானம்யா, உன்னய உள்ள உட்கார வெச்சதே பெரிசு). எல்லாம் குண்டு பொழிஞ்சாப்ல, மொத்தமா தள்ளிட்டு போயிட்டானுங்க!



வரிசைப்படி, அப்படியே சொல்லீருக்கேன். சரி, சாப்பிடலாம் வாங்க.
முதல்ல பார்க்க சுமாரா இருந்த ஜிலேபி. வாயில வெச்சதுமே, பழைய கடை சரக்குன்னு தெரிஞ்சு போச்சு! சரி, ஆலா பறக்குற வாய்க்கு பெங்காலி ஸ்வீட்ட போடலாம்னா, அது கையோட ஜவ்வு மாதிரி ஒட்டுது! சரி, காலாவதியானது அப்படீன்னு விட்டுட்டேன். சைலண்டா சாம்பார் சாதத்த சாப்பிட்டு ஒரு மாதிரி செட்டிலாவோம்னா, அது வாய் கிட்ட கொண்டு போறச்சயே, வாந்தி நாத்தம் வந்துச்சு! கைய உதறிட்டு, பிரியாணிய எடுத்தேன். அதுவும் உறஞ்சு போயிருந்துச்சு! அந்த பணியாரங்களையாவது சாப்பிடலாம்னா, அதுங்கள வாய் கிட்டகொண்டு போனாலே, கெரசின் நாத்தம் அடிச்சுது! சரி, பசி. வேற வழியில்லாம அந்த இஞ்சி சட்னியும், வெங்காய சட்னியையும் வெச்சு, பிரியாணிய உள்ள தள்ளினேன். வயத்துக்குள்ள எரிய ஆரம்பிச்சுச்சு! தயிர் சாதத்தை போட்டு, வயத்த ஆத்தலாம்னு, அத உள்ள போட்டேன். தயிர் இருந்தாத்தான? அது கஞ்சிச் சோறு மாதிரி இருந்துச்சு. நோ எபெ·ட்! சரி, இலைல எதத் திங்கிறதுன்னு தேடறச்சயே, அடுத்த இலக்காரரு மெதுவா, " சார், விஜயகாந்த் வந்தாரா?" ன்னு கேட்டார். "ஆமாம்", னேன்! உடனே, "ஆ, தலைவா" ன்னு அப்படியே எந்திரிச்சு ஓடிட்டாரு! அவர் இலையப் பார்த்தேன். ஹ! நம்மள மாதிரிதான், எதத் திங்கிறதுன்னு யோசிச்சுட்டு, வழி தெரியாம, தலைவா, கிலைவான்னு செளண்டு கொடுத்துட்டு எந்திரிச்சு ஓடிட்டாரு!


சரி, இந்தப் பக்கம் பார்த்தேன். இன்னொருத்தன் என்னடான்னா, "இடியாப்பத்துக்கு, தேங்காய் பால் வெக்கலையா," ன்னு கேட்கப்போய், அதை கவனிச்ச ஒரு வெள்ள வேட்டி, 'இடி அமீன்' லுக் விட்டுட்டு போனான். கேட்டவன் கட்சி தொண்டன் போல! அப்படியே, கமுக்கமா, இடியாப்பத்த வாயில திணிச்சுகிட்டே அடங்கிட்டான்!



அந்தாளு நாம பார்க்குறதுக்கு காத்திருந்த மாதிரி, "சார். எதோ "அறுசுவை" நடராசன்தான் இவங்க குடும்பத்துல பரம்பரை சமையல்னாங்க, இல்ல போல இருக்கே," ன்னார். நான், "அது, தஞ்சாவூர்ல நடந்த கல்யாணத்துல இருந்துச்சு போல; இங்க இல்ல," ன்னு அவருக்கு சொல்ற மாதிரி எனக்கும் சமாதானம் சொல்லிகிட்டேன்! அந்தப் பக்கம் உட்கார்ந்த அவர் சம்சாரம், "சார், தண்ணி கேட்டுகிட்டே இருக்கேன், தரமாட்டேங்கறாங்க," ன்னாங்க.


"தண்ணி காட்றாங்களா," ன்னு நான் நேரம் காலம் தெரியாம ஜோக் அடிச்சேன், அந்தம்மா, மொறச்சுகிட்டே, 'டக்'னு எழுந்து, என் கிட்ட இருந்த தண்ணி பட்டில தெறந்து, "மடக், மடக்"னு குடிச்சு, என்ன ஒரு மொற மொறச்சாங்க!



அந்தப் பக்கமா வந்த பறிமார்றவர் கிட்ட," ஏங்க, பாயசம் உண்டா, மறந்துட்டீங்க போலருக்கே," ன்னு கேட்டேன். ஒரு 'பாய்ஸன் பார்வை' விட்டுட்டு போயிட்டார்! அடுத்த வந்த பந்தி விசாரிக்கிற கரை வேட்டி கிட்ட கொஞ்சம் சத்தமாவே கேட்டேன். அவர் 'லுக்' இன்னும் காரமா இருந்துச்சு! கொஞ்சம் இடை வெளி விட்டு, ஒரு வயசான பந்தி விசாரிக்கிற ஆளப் பார்த்து, "ஐயா, பாயசம்...". (இவரும் கரை வேட்டிதான்!) அவர் அதிசயமா, "இருங்க உள்ள விசாரிக்கிறேன்னு போனார். கண் முன்னாடியே, ஓரமா நின்ன ஒரு தாட்டியான இன்னொரு கரை வேட்டியப் பார்த்து எதோ விசாரிச்சார். அவர், நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு, 'பெரிச' அப்படியே, அங்கயே நிக்க வெச்சுகிட்டார். சரி, நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவுதான்னு, ஒரு வழியா கை கழுவ எந்திரிச்சாச்சு. போறதுக்குள்ள வயத்தெறிச்சல் (அட, சாப்பிடலயேங்கிற எரிச்சல் இல்லய்யா, உள்ள போன குடைச்சல் ரைஸ் பிரியாணி அண்டு சட்னி பண்ற வேலை!) அதிகமாக, அவசர அவசரமா, கையக் கழுவி, பால்கனிக்குப் போனேன். அங்க சக்கரத்துல சுத்தி என்னவோ வித்த காட்டி, ஐஸ்க்ரீம தந்துகிட்டிருந்தான். நமக்கு ஜலதோஷம்ங்கிறதுனால அதையும் விட்டுட்டு, வயத்த சரி பண்ண பீடா கிடைக்குமான்னு பார்த்தேன். கிடைக்கல. வாசலுக்கு வந்து தாம்புலப் பைய வாங்கிகிட்டு அவசரமா வெளியேறினேன். (பை நல்லா இருந்துச்சு - ஒரு பக்கம் ஒரு மணமக்கள் பேரு; இன்னொரு பக்கம் இன்னொரு மணமக்கள் பேரு). வாசல்ல பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஐயாவப் பார்த்தேன். மேக்கப் போட்டு, தலைக்கு சாயம் பூசி பெரிய மனுசங்களைப் பார்த்து,பார்த்து அலுத்த கண்களால, அதிசயமா, ஒரு பந்தாவும் இல்லாம, நெத்தில விபூதி பூசி, வண்டியேறிப் போற ஒரு முதலமைச்சர, அரசியல்வாதிய இப்பதான் பார்க்கறேன். அவ்வளவு எளிமையா இருந்தாரு. சரி, போக வர வண்டிக்கு ஆன பெட்ரோல் காசு வசூல்! ஒரு நல்ல மனுசன பார்த்தேன்னு மனச தேத்திகிட்டு, வீட்டுக்கு கிளம்பினேன்.



ஒண்ணு முக்கியா சொல்லணும். மணப்பெண்கள்ல பெரிய பெண், நமக்கு தோழி. அமைதியான பெண். பெரிய வீட்டு பந்தா கொஞ்சம் கூட இல்லாதவங்க. நல்ல இலக்கிய, சரித்திர, கணிணி துறைல தேர்ச்சி பெற்றவங்க. அவங்க பேரைப் போலவே, மனசும் வெள்ளை, அவருக்கு அமைஞ்ச மாப்பிள்ளை பேரு நல்ல பொருத்தம். வாழ்க்கை ஒளின்னு அர்த்தம் வர்ற மாதிரி வடமொழி சொல்! அவங்க தனிப்பட்ட கடிதம் அனுப்பினாங்கங்கற காரணத்துனாலதான் இந்த வரவேற்புக்கு போனேன். சோத்துக்காக இல்ல; இருந்தாலும் நான் பத்திரிகைக்காரன் தானே? நல்லதோ,கெட்டதோ, எழுத்தா பதியலைன்னா, நமக்கெல்லாம் தூக்கமே வராதே? அதான் இந்த பதிவு. எதுக்குடான்னு கேக்குறீங்களா?



சில பாடத்துக்குத்தான்:


1. நட்பை பாராட்டு. அதுக்காக, இடம் பொருள் தெரியாம போய அதைக் கொண்டாடாதே!


2. கல்யாண சாப்பாடு எப்படி இருக்கும்னு யாரும் யூகிக்க முடியாது; அதனால வீட்ல சொல்லி வை; ஒரு வாய் மோர் சோறாவது எடுத்து வெக்கச் சொல்லி!


3. நாம கல்யாணம் செய்யறப்ப, பல அயிட்டங்கள் போடணும்னு கணக்கில்ல. உருப்படியா ருசியா நாலு அயிட்டங்க போட்டாலும் போதும்!
என்ன, சரிதானே?



சரிதானா? "எவண்டா எங்க தலைவர் வீட்டு சாப்பாடப்பத்தி தாறுமாறா எழுதினவன்?" ன்னு கேட்டு ஒரு கும்பல் என்ன கைமா பண்ண அலையலாம்! ஆனா ஒண்ணு நிச்சயம். அந்த சாப்பாட்டை சாப்பிட்டிருந்தாங்கன்னா, அவனவன், நான் அடுத்த நாள் நான் செஞ்ச மாதிரி, வேப்பல கட்டி, இல்ல ஈனோ, இல்ல இஞ்சிச் சாறு ..இப்படி எதையாச்சும் உள்ள தள்ளீட்டுதான், என்னய "போட்டுத் தள்ள" வரவேண்டி இருக்கும்! இல்லன்னா அம்பேல்தான்!(வந்த பெரும்பாலான தலைவர்கள் சாப்பிடாம, போனது எதுக்கு? ...அவங்க எல்லாந் தெரிஞ்சவங்க! அதான் அரசியல்ல இருக்காங்க! என்ன, சரிதானே நான் சொல்றது?)