17 November 2006

வாஷிங் மெஷினும், மனுஷனும்!!

வீட்டில் தாய்குலத்துக்கு உதவி செய்ற, செய்யச்சொல்ற முற்போக்குவாதிகளே, வணக்கம்!

ஒரு தடவை, ஒரே ஒரு தடவை இந்த வாஷிங் மெஷின் வாஷிங் மெஷின்னு ஒரு புயலையொத்த கருவி இருக்கே, அத நல்ல படியா ஓட்டிக் காட்டிருங்க, என் வாழ்நாள் பூராவும், பெண் விடுதலை சம உரிமைன்னு பேசி, பெரும்பணி செய்ய சபதமெடுக்கறேன்!!
வேல செஞ்சவங்களுக்கு, இதப் படிச்சா ஆறுதல், 'சரி, நம்மள மாதிரி அப்பிராணி இன்னொருத்தனும் இருக்கான்'ன்னு; இனி செய்யப் போறவங்களுக்கு தங்களை தாங்களே காப்பாதிக்க 'டிப்ஸ்' :-

முதல்ல மெஷினோட ஆதி அந்தம் புரிஞ்சுக்கிறது நல்லது! முதல்ல அது தண்ணிய எப்படி உள் வாங்கும், எப்படி வெளியே துப்பும்னு தெரிஞ்சு வெச்சுக்கங்க!! அப்புறம் என்ன லோடிங், என்னன்ன துணிகள் எதோடு சேர்த்து போடணும், போடக்கூடாது, இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். எந்த சுவிச்சத் தொட்டா உள்ளே என்ன நடக்கும்னு தெரிஞ்சு வெச்சுக்கணும்.

சரி, ஒரு நாள் நாமதான் லீவுல நாளாச்சே, கொஞ்சம் பொண்டாட்டிக்கு உதவி செய்யலாம்னு போனேன். முதல்ல என் துணிங்க; பேண்ட் எல்லாம் எடுத்து, இடுப்புப் பட்டி, பாக்கெட், அப்புறம் சட்டை காலர்,க·ப் - எங்கெங்கெல்லாம் அழுக்குப் படியுமோ, அங்கெல்லாம் 'க·ப் அண்ட் காலர்' னு ஒரு திரவம்; அத தடவி நல்லா தேய்ச்சா, அழுக்கு போயிரும்னு சொன்னாஅருமை மனைவி; தேய்ச்சேன்; கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்னு தோணிச்சு! ஒரேடியா, துணி திரிஞ்சு பிஞ்ச மாதிரி இருந்தது! எதுக்கு வேணாம்னு, அடுத்த கட்ட நடவடிக்கைல இறங்கிட்டேன். அடுத்து சார்ட்டிங் (Sorting) - நம்ம நல்ல உருப்படின்னு எதெல்லாம் எடுத்து வெக்கிறோமோ, அதெல்லாம் நம்ம வீட்டம்மாவுக்கு, செகண்ட் சாய்ஸா தெரியுது!!

வெள்ளை அயிட்டமெல்லாம் தனியா, கலர் தனியா, பெண்டாட்டி சேலைகள் தனியா, உள்ளாடைகள், உரைகள், விரிப்புங்க தனியான்னு, ஒரு எக்ஸ்பர்ட் வண்ணான் தோத்த மாதிரி தனிப்படுத்தி வெச்சேன்!

அங்கிருந்து வந்தது எதிர்ப்பு - ''ஏங்க? உங்க பேண்ட் சட்டையோட என் சேலைங்களப் போட்டுறாதீங்க! கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தமே, அந்த பட்டுப்புடவையை 'ஸா·ப்ட் மோட்' ல போடணும்; வெள்ளைங்கள தனியா 'பவர் வாஷ்ல, ப்ளீச்சோட' போடணும்; அப்புறம் மீதி உங்க செளரியம்'' ன்னா!

மீதி? உரைங்க, விரிப்பு, என் துணிங்க! அதெல்லாம் ஒரு ரவுண்டு! இது எப்படியிருக்கு?

அம்மா- ''குழந்தைங்க துணி, எந்துணிங்களத் தொடாத; அத பூப்போல, அலசிப் போடணும்; கொஞ்சம் டெட்டால் துளி விட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான சுடுதண்ணில அலசி, அப்புறம் தொவச்சா, குழந்தைங்களுக்கு இதமா இருக்கும், இன்·பெக்ஷன் வராது''
பையன் - ''அப்பா, என் ராம்பொ ரெமோ விக்ரம் பேண்ட அம்மாவக் கேட்டுதொடுங்கப்பா, அவங்களுக்குத் தான் அதப் பத்தித் தெரியும்; உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் பத்தாதுப்பா'
வேற யாரும் பாக்கியான்னு சுற்றிப் பார்த்தேன்;

நல்ல வேளை- குட்டிப்பொண்ணுக்கு 5 மாசம்தான் ஆகுது; அது கூட என்னப் பார்த்து-'ஆங்' னு ஒரு சவுண்டு விடுது!! எல்லாம் நேரம்! சரின்னு, ஒரு வழியா எல்லாத்தையும் தரம் பிரிச்சு, போட்டாச்சு;

மெஷின் ஓட ஆரம்பிச்ச 10 நிமிஷத்துக்குள், 'கர்'னு சத்தம்; ஓடிப்போய் பார்த்தா, மெஷின் சுத்தி ஒரே தண்ணி!! மனைவி பின்னேயே வந்து - 'சொல்ல மறந்துட்டேன்; பைப் சரியா ட்யூபோட சேர்றது இல்ல. கொஞ்சம், தண்ணி ப்ரெஷர் அதிகமானா, லீக் ஆயிரும்!'' அப்படீன்னா! சரின்னு போயி உட்கார்ந்தா, அம்மா வந்து - `ஏண்டா, வயசானவங்களோ, பிள்ளைங்களோ தடுக்கி விழுந்தா என்னடா பண்றது? போயி அந்த தண்ணியெல்லாம் தொடச்சுடு' ன்னாங்க; சரின்னு போனேன்! குனிஞ்சு, தென்ன வெளக்குமாத்தால தள்ளிவிடுறச்ச, திடீர்னு, முதுகுல ஒரு 'லோடு'. பையன்! "ஹை! அப்பா, உப்பு மூட்ட தூக்குங்கப்பா" "இருடா, தண்ணிய தொடச்சிட்டு வரேன்.'' பையன் காது கொடுத்துக் கேட்டதா தெரியல! மீண்டும் வந்து குதிச்சான்; கடுப்புல, நிமிர்ந்தேன்; பட்டுனு கீழ விழுந்துட்டான். எந்திரிக்கப் போனவன் ஈரம் வழுக்கி விழுந்துறப் போறானேன்னு, தாவிப் பிடிக்கலாம்னு பாய்ஞ்சேன்; பிடிக்கப்போனப்ப, தண்ணி ஹோசைப் பிடிச்சு இழுத்துட்டேன் போல!! பிய்ச்சுகிட்டு வந்திரிச்சு! சர்னு தண்ணி பாய்ஞ்சு, கிச்சனெல்லாம் தண்ணி! அடிச்சதுல நேரா என் மூஞ்சில அடிச்சு, மீதி? தரையெல்லாம் தடாகம்!

ஒரு வழியா முகத்தத் தொடச்சு, எந்திரிக்கலாம்னா, முன்ன இருந்ததை விட அதிகமா தண்ணி தேங்கிருச்சு! பையனையும் தூக்கிகிட்டு அதுல மெதுவா அன்ன நடை நடந்து வெளிய வந்தா, பொண்டாட்டி எதிர்ல நிக்கிறா! ' ஒரு வேல ஒழுங்கா செய்யத் தெரியாதே' ங்கிற மாதிரி ஒரு லுக் விட்டா! சரி, மீண்டும் துடப்பக் கட்டை, துடைத்தல் படலம் ஆச்சு! முடிஞ்சுதா? ஒரு வழியா முடிச்சு மீண்டுறலாம்னு பார்த்தா, திடீர்னு வாஷிங் மெஷின் 'சாமி' ஆடிச்சு! மீண்டும் பொண்டாட்டி முகத்தப் பார்த்தேன்! போங்கப்பா- 'ஆடு திருடின..' ங்கிற பழமொழியெல்லாம் ஞாபகப்படுத்தாதீங்கப்பா! ''கீழ ரோலர் இருக்கு பார்த்தீங்களா? அதோட ஸ்டாப்பரை எடுத்துவிட்டுட்டா, மெஷின் ஆடாது, நிக்கும் ; இதுதெரியலையே'' ன்னு சொல்லிட்டு, அத சரிசெஞ்சா;

மெஷின் ஒரு ஆட்டம் போட்டு முடிஞ்சுது!

பொண்டாட்டி துணிங்க முதல் ரவுண்ட் முடிஞ்சு, அம்மா, குழந்தைகளோடது ஆரம்பிச்சது. கம்பவுண்டர் தோத்தான் போங்க! அப்படி கரெக்டா டெட்டால் அளவெடுத்து, சேர்த்து, துணிங்களை வெந்நீரில் வளாவி, மீண்டும் மெஷினுக்குள்ள போட்டேன். அடுத்த ரவுண்ட் ஓவர்.

''என்ன பாவா, சவுக்கியமா'' ன்னு கேட்டுகிட்டே என் மச்சான் எதிரில் வந்தான்? மனசுல திகில் பரவறதுக்கு முன்னமே, அவனே, '' பாவா, சாயங்காலம் கோவில்ல கச்சேரி கேக்கணும்; போயிடுவேன்! சரி,லீவாச்சே அக்காவையும், உங்களையும் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்!'' ங்கிறான்.

மனைவியோ, ''ஏங்க, அதான் கிச்சாவும் வந்துருக்கான். இந்த தண்ணி பைப் ரிப்பேரை ரெண்டு பேருமா பார்த்து முடிச்சுடுங்களேன்'' ன்னா. மச்சினனும், ஆர்வமாய் குழாயும் ஹோசுமாய் இணையும் இடத்தில் ஒரு பார்வை வீசிவிட்டு, '' சிம்பிள் பாவா. ஜஸ்ட் ப்·யூ மினிட் ஜாப். ஒரு பிலிப்ஸ் ஹெட் ஸ்க்ரூ டிரைவர், கொஞ்சம் எம் சீல், துடைக்கத் துணி இதெல்லாம் எடுங்க!'' ன்னான். என்ன கடையா வெச்சிருக்கேன்? சட்டைய மாட்டிகிட்டு கடைக்குப் போயிட்டு வந்ததுல, அவுட் ஒரு 50 ரூபாய்! மச்சான், கைய வெச்சான்!

" பாவா, தண்ணிய மூடுங்க. இப்ப, மெதுவா, தண்ணியே இல்லாதபடி துடைச்சுடுங்க; அப்புறம் எம் சீல் ஒட்டாது, சொல்லிட்டேன். ஓகே, இப்ப அந்த ஸ்க்ரூ டிரைவரால 4 ஸ்டார் ஸ்க்ரூ இருக்கு பாருங்க, அதுல ஒண்ணொண்ணா டைட் பண்ணுங்க- ஆங், அப்படித்தான், இப்ப லெப்·ட், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்,..." இப்படி, இடுப்புல கைய வெச்சுகிட்டு, சும்மா ரன்னிங் கமண்ட்டெரி கொடுத்துகிட்டே, அவன் வேல வாங்கறானே ஒழிய, ஒரு துரும்பக் கூட அசைக்கல. இதுல நடுவுல அம்மா, பேக்ரவுண்டு மியூசிக் " ரமா தம்பி ரொம்ப சுட்டி!! சரி, மச மசன்னு செய்யாதே, சீக்கிரம். இன்னும் ரெண்டு ரவுண்டு துணிங்க கிடக்கு!" என் காதுல இதெல்லாம் விழலே! கருமமே கண்ணாயினார், வில்லெடுத்த விஜயன் இப்படி என்ன அடைமொழி சொல்லி என்னைக் கூப்பிடலாம்! அத்தனை மும்மூரமா, அந்த 4 ஸ்க்ரூங்களை திருப்பிகிட்டேயிருக்கேன்; அது என்னவோ, டைட் ஆன மாதிரி தெரியல! வட்டமா இருந்த குழாய் வாயிதான், 4 ஸ்க்ரூ நடுல மாட்டிகிட்டு, ஒரு மாதிரி நெளிஞ்சு, 'ஓ' போடுது! கொஞ்சம் ஆர்வக்கோளாறிலே, அதிகமா அழுத்திட்டேன் போல! ஒரு ஸ்க்ரூ டப்னு ஒடிஞ்சு, பாதி மரையோட உள்ளயே உட்கார்ந்திருச்சு! அவ்வளவுதான், வீட்டுக்காரி கண்டு பிடிச்சுட்டா! "ஏன்ங்க, வேல தெரியலன்னா அதான் தம்பிகிட்ட கொடுக்கச்சொன்னேன்ல, ஏன் இப்படி தண்டம் வெக்கிறீங்களோ? அந்த பைப் ஹோஸ் ஜன்க்ஷன் 50 ரூபாய்". தம்பிகிட்டே திரும்பி, " என்னடா பண்றது" ன்னா. அவனும் பெரிய எக்ஸ்பர்ட் அனாலிசிஸ் பண்ற மாதிரி, சற்றே நெருங்கி உற்றுப்பார்த்துட்டு, (பைப்பத்தான், என்னை இல்ல), மேனேஜ் பண்ணீறலாம்கா; மேலயே, அப்படியே எம் சீல பூசச்சொல்லுங்க". " பாவா, மெஷின்ல வேல பார்க்குறச்சே என் கைல கொஞ்சம் அடி பட்டு இன்னும் புண் ஆறல. (ஆமாம், பெரிய ராக்கெட் லான்சர் செஞ்சான்! ஒரு சின்ன லேத் பட்டரைய சொந்தமா ஆரம்பிச்சு, அப்பப்ப என் கிட்டதான், ரா மெடீரியல் வாங்கணும், டூல்ஸ் வாங்கணும்னு சொல்லி என் ஆபீசுக்கே வந்து பணம் வாங்கிகிட்டு போற கொடுமைய எங்க சொல்ல?) நீங்களே கொஞ்சமா, ரெண்டுலயும் 50:50 கலந்து, ஒரே சிமென்ட் கலர் வர வரைக்கும் நல்லா உருட்டி, அந்த இடத்தச் சுத்தி போடுங்க!" ன்னான். சரி, நானும் சின்சியரா சப்பாத்திக்கு எப்படி மாவு பிசைவாங்களோ அந்த மாதிரி அழகா எம் சீல உருட்டி, ஜாயிண்டச் சுத்தி பத்து போடற மாதிரி போட்டுகிட்டிருந்தேன்; பின்னாலயே ரன்னிங் கமெண்டரி திரும்ப ஆரம்பம்! யாரு, திருவாளத்தான் மச்சான் மணிகண்டன் தான்!

"பாவா, கையில துணிய வெச்சு லேசா அழுத்திவிட்டு, பின்ன இன்னொரு ரவுண்டு போடுங்க, அப்பதான் நல்லா பதியும்"னான். துணி கையில, மரு கையில எம் சீல், வேல பண்றச்சயே, திடீர்னு தண்ணி பீச்சி முகரைல அடிச்சது!! நெத்தில ஆக்கர் வெச்ச மாதிரி, அந்த எம் சீல் விளம்பரத்துல வருவானே, போமன் இரானி? (முன்னாபாய் M.B.B.S ல பெரிய டாக்டரா நடிப்பாரே ஞாபகமிருக்கா?) ; [எம் சீல் போடாம, துணியால ஒழுகல மூட ட்ரை பண்ணுவான், முடியாது, உடனே பக்கத்துல இருக்குற துணிய சுத்துவான்; அப்புறம் கர்சீப், அப்புறம் கழுத்து டை; பின்ன கையில கிடைச்ச துணிய எடுத்து சுத்துவான், அது கடைசியில பக்கத்துல தரைய துடைக்கிற வேலக்காரம்மாவின் முந்தானைத் துணின்னு தெரிஞ்ச உடனே, பதறிப்போயி விலகப் போனால், அதற்குள்ளாக பொண்டாட்டி பார்த்துடுவாள், பய நொந்து நூலாயிடுவான்!] - இதே விளம்பரம் போலத்தான் நம்ம கதையும் ஆயிருச்சு!

என்னடா பிச்சுகிடுச்சுன்னு பார்த்தால், நம்ம பையலோட திருவிளையாடல்!! நானும் அப்பா போலத் திருகுறேன்னு ஸ்க்ரூ டிரைவரை எடுத்து 'நல்லா' ஒரே பக்கமா திருப்புனதுல, ஓ போட்ட பைப், ஓட்ட போட்ட பைப் ஆயிருச்சு!! மீண்டும் துடைப்பம், பக்கெட், துடைத்தல் படலம்! வேற யாரு? நான்தான்!

மச்சான், மெதுவா கழண்டுகிட்டான்.. ஒரு வழியா எல்லாத்தையும் சரி பண்ணி கடைசி பாக்கியான என் ரவுண்டு! போட்டு நிமிர்றேன், கரண்ட் போச்சு!! தனியா எடுத்து வெச்ச வெள்ளை (ஆபிசுக்கு போட்டு போற பனியன், சட்டைங்க) சொள்ளை (வீட்டுல உபயோகப்படுத்துற வேட்டி, துண்டு) எல்லாம் வெயிட்டிங்குல நிக்குது! இந்த ஆபிஸ் வெள்ளைக்கும் ஒரு கதையுண்டு!! பாடகர் கே.ஜே. யேசுதாஸ் சொன்னது! அவர் கஷ்டப் பட்ட காலத்துல, ஸ்டுதியோக்களுக்கு படை எடுக்கறப்போ, தினம் போட ஒரு சட்டைக்கு பிரச்னையா இருந்ததாம்; அப்ப நண்பர் சொன்ன யோசனைப்படி, வெள்ளைக்கு மாறிட்டாராம்!! ஒரே சட்டையை ராவோடராவா துவைச்சுப் போட்டாலும், பார்க்கறாதுக்கு, எதோ வெள்ளச் சட்ட போட்ட மதிரியும் தெரியும், பெரிய மனுஷன்னும் நெனைக்க சான்ஸ் இருக்கு! அவர் முன்னாலயே,'' பார்றா, எப்படி இருந்தவன், வெள்ளையும் சொள்ளையுமாப் போறான்'' அப்படீன்னாங்களாம்! அரசியல்வாதிங்க, பெரிய பெரிய மனுஷங்க பார்த்தீங்கன்னா, வைட் அண்ட் வைட்ஸ் தான்! அடியேனும் அப்படியே; பெரிய மனுஷன் மாதிரியும் தெரியும், யேசுதாஸ் மாதிரி நிலமைல இருந்தும் காப்பாத்தும்!! எப்படி? கரண்ட் வந்து, என் துணிங்கள ஒரு வழியா சொர்க்க வாயில் பார்க்க ...ஸாரி, மெஷின் வாயில் திணித்தேன். ரவுண்டு முடிஞ்சு துணிங்கள வெளிய எடுத்த எனக்கு ஷாக்!! எல்லாத் துணிங்களும் 16 வயசினிலே ஜானகியம்மா பாடினாப்ல "மஞ்சக்குளிச்சி அள்ளிமுடிச்சு,.. " வெளியே எட்டிப்பார்த்தன!! எனக்குத்தான் ஒரேடியா தண்ணில நனஞ்சு, காமாலை வந்துருச்சோன்னு, கண்ணக்கசக்கிப் பார்க்கிறேன்! இல்ல சத்தியமா, மஞ்சள் தான்!! எல்லா வெள்ளத்துணியும் மஞ்சளா மாறின 'மாயமென்ன, மாயமென்ன பொன்மானே'. மெதுவா, என் மாமியார் எட்டிப் பார்க்குறாங்க! "நீங்க எப்ப வந்தீங்க? இங்க என்ன எட்டிப்பார்க்கிறீங்க?"
"அதுவா மாப்ளை, பொண்ணையும் குழந்தைங்களையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சா, நான் மணிகண்டனோடையே வந்துட்டேன்; நீங்க பிஸியா இருந்தீங்களா, அதான் தொந்தரவு பண்ணல!"

"பின்ன இங்க இப்ப எதுக்கு வந்தீங்க?" "அதுவா, என் சேலை ஒண்ணு மெஷின் ஓடுதே,போடலாம்னு போட்டேன்!''

"சேலையா..~~~ எப்ப போட்டீங்க??"' பல்ஸ் இறங்கிப் போய் கேட்டேன்!
"உங்க வேல முடிஞ்சுதான்னு பார்க்க வந்தேன், அப்ப பாழாப்போன கரண்ட் வேற போச்சு. மெதுவா தட்டித் தடவி எப்படியோ போட்டேன். ஏன் ஏதும் ப்ராப்ளமா?''

என்னத்தச் சொல்ல, ''அடியே, நீதாண்டி ப்ராப்ளம்; துணியப் போடறேன்னு, ஒரு பொக்ரான் குண்டையே போட்டியேடி பாவி, உன் ரெங்கநாதன் தெருவோர சேலைக்கு என் வெள்ளைங்கதானா பலி???" என்று .... மனசுக்குள் பேசிகிட்டேன்.
( பொண்டாட்டி வந்து பார்த்தாள். நிலமை புரிஞ்சுகிட்டா அழகான ராக்ஷஸி!! அப்படியும் அவங்க அம்மாவை விட்டுக்குடுக்காமல், "ஏம்மா, உனக்கு ஏதும் வேணும்ன என்கிட்ட கேக்கக் கூடாதா? எதுக்கு அவர் கிட்ட பேச்சு?" ன்னு சொல்லி மாமியாரை க்ராஸ் ப·யரிலிருந்து மீட்டு, கூட்டிகிட்டு போயிட்டாள்! )

மெதுவாக அந்த மஞ்சக்குளிச்ச துணிங்களை வெளியில் மீட்டு, காயப்போட்டு, பக்கத்திலிருக்கிற டிரைக்ளீனரிடம் கேட்டால், "இது போகாதுசார்; ஆமா சார், சூப்பரா கலர் ஒரே மாதிரி இறங்கிருக்கே? என்ன சார் போட்டீங்க? நிறைய கஸ்டமருங்க கலர் டை பண்ணக் கேக்குறாங்க!" அப்படீன்னான்! "அதுவா, நான் புதுசா ஒரு மெஷின் வாங்கி, தொழில் தொடங்கிருக்கேன், அனுப்பி வை, கமிஷன் தரேன்!" ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்!! வேற என்ன செய்ய?

வீட்டுலயோ, பொண்டாட்டி, அப்படியே ப்ளேட்டைத் திருப்பிப் போட்டா! "யாரும் ஏதும் உள்ள போட்டாங்களான்னு ஒரு தடவ பார்த்துட்டு, வெள்ளைங்களை போடக்கூடாதா? ஒரு வேலைய எடுத்துகிட்டா சரியா செய்ய துப்பில்ல!!"

நானோ, மறுநாள் ஆபீசுக்கு எதைப்போட்டுகிட்டுப் போறதுன்னு மண்டையை உடச்சுகிட்டு, ஹைதர் காலத்துல கல்யாணத்துல கொடுத்த கலர் சட்டை, யார்யாரோ வெச்சுக் கொடுத்தது, விட்டுப் போனதுன்னு, எலி கணக்கா பெட்டியெல்லாம் குடைஞ்சு, வெளிய எடுத்தேன்!! பட்ஜட்டில் துண்டு விழுந்ததால், இந்த நிலை! அடுத்த மாசம் சம்பளம் வந்தாதான், ஒரு வெள்ளச் சட்டை வாங்க முடியும், அப்புறம் ஒண்ணு, இப்படி இந்தப் பொங்கல் போயி அடுத்த பொங்கல் வரைக்கும் அய்யாவோட வெள்ளை வாங்கும் படலம் இழுத்தால்தான், அதுக்கு அடுத்த வருஷமாவது, மீண்டும் வெள்ளையும் சொள்ளையுமாய் போகமுடியும்!!

சரி, சனியன் ஒரு ஞாயிற்றுக்கிழமையோட முடிஞ்சுதா? அதான் இல்லை! மறுநாள் ஆபிசுல அவனவன் புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறான்! ப்யூன் வேதாசலம் "சார், ஷோக்கா கீரிங்க சார்! இன்னா சார், புதுசா ஏதும் கனெக்ட் பண்றயா" ன்னு என்னப் பார்த்து கண்ணடிக்கிறான் பாவி!

வீட்டுக்கு திரும்பும் சந்து முனையில் உள்ள ஆட்டோ டிரைவர், வருஷா வருஷம் சபரிமலைக்கு போறவன்" சாமி, புது சொக்கால்லாம் போடறேங்க, நாங்க மலைக்கு போறம்னா மட்டும் எதும் டொனேஷன் கேட்டா தரமாட்டீங்கறியே" அப்படீன்னான்.

"எது கொடுத்தாலும் வாங்கிப்பியா?" "ஏன் சாமி, தா சாமி!" நேரா வீட்டுக்குள் போனேன், நேற்று மலர்ந்த (நொந்த) மஞ்சள் சட்டைங்களை, வேட்டிங்களை அவன் கிட்ட கொடுத்து, "இல்லாத சாமிமாருக்கு கொடுத்துடுப்பா" !

"சரி சாமி!" - வாங்கிக்கொண்டான்!!

சனியன் தொலைந்த சந்தோஷத்தில் "சாமியே சரணம் ஐயப்பா!" என்று கூவினதைக் கேட்டு, என்னமோ ஏதோன்னு பயந்து வாசலுக்கு ஓடி வந்தார்கள் என் மாமியாரும், அருமை மனைவி, மக்களும்!!

26 comments:

Deepa said...

Totally hilarious.I was laughing out loud (very silently) in the afternoon while others were sleeping.Sorry for not posting in tamil.I have read your post more tan twice and each time i could not supress my laugher..
Nice anecdote,,narrated well
Deepa

Maraboor J Chandrasekaran said...

Hi deepa,
Thanks for your comments. Actually this appeared in my other blog http://maraboorjc.blogspot.com where I take up social and scientific issues, whereas sirichuvai was started only for tickling the rib bone. When I posted there I got very good response, but I had to remove it due to limitations in beta-blogger :-(
Any s.ware guy can solve the problems in beta? It can't aggregate new articles in Thamizmanan, nor add any replies or feedback, from or to non-beta bloggers. Very sad. I wonder why changed to beta, there is no way back? I have lost also the feedbacks for the last post. Anyway, thanks a lot for your positive feedback. More to come, enjoy reading (and don't wake up those who sleep, then their running around in sleep also will lead for a comic strip :-)
Maraboor Chandrasekaran

Deepa said...

lol
Deepa

Maraboor J Chandrasekaran said...

deepa, neengalum 'lol' padareengalaa? siringa, siringa.

Deepa said...

:-)..amaam.. ellarum etho oru edathula "lol" taan padaroom.Silathu sollamudiyuthu..palathu solla mudiyalai. Neram kidaicha தொடுவானம் pakkam vaanga

Maraboor J Chandrasekaran said...
This comment has been removed by the author.
Maraboor J Chandrasekaran said...

நன்றி. தீபா. தொடுவானம் தொட்டுவிட்டேன் :) பின்னுரைகள் வரும்.

Maraboor J Chandrasekaran said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

பேசாம, அந்த மஞ்சத்துணிகளைப் போட்டுக்கிட்டு ஒரு நடை 'திருப்பதி'
போயிட்டு வந்துருக்கலாம்.

நல்ல ச்சான்ஸ் போச்சு:-)

Maraboor J Chandrasekaran said...

துளசி அக்கா, என்ன செய்யிறது? அதுக்குள்ள ஐயப்ப சாமி முந்திகிட்டாரே?

Deepa said...

As a last trial.. try adding the Pativu toolbar code to this blog..(back up u r template before you start messing around)

Maraboor J Chandrasekaran said...

The Pathivu tool bar is already there, Deepa.

Deepa said...

BEats me...i give up..|:-)|

Maraboor J Chandrasekaran said...

you too Deeeepa!!!

Anonymous said...

சிரிக்க வைக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க... ஜெயிச்சுட்டீங்க :))

Maraboor J Chandrasekaran said...

வருகைக்கு நன்றி, சேவியர். சிரிச்சாச்சரிதான் :-) உங்களுக்கு கல்யாணம் ஆயிறுச்சா? வீட்ல வாஷிங் மெஷினா, இல்ல நீங்கதான் மெஷினா? :-) ஏன் கேக்குறேன்னா, துவச்சுட்டு வந்து பின்ன, சாவகாசமா என் கட்டுரையப் படிக்கலாமேன்னுதான்! :-)

Anonymous said...

Excellent post. I was also laughing so hard.

Thank you for very nice post.

Keep posting.

Santhanam

Maraboor J Chandrasekaran said...

Thanks Santhanam. Will try to write more, when time permits.Did you read the other articles in this blog?

dondu(#11168674346665545885) said...

கடுகு (அகத்தியன்) எழுதிய கதை படிப்பதுபோல் இருந்தது. அங்கு கடுகுக்கு கமலா மற்றும் மச்சினன் தொச்சு, இங்கே உங்களுக்கு கிச்சா. கிச்சாவுக்கு கல்யாணம் ஆச்சா? கடுகு கதையில் தொச்சுவின் மனைவி பெயர் அங்கச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Maraboor J Chandrasekaran said...

டோண்டு சார் (4800161)- கெட்ட வார்த்த ஏதும் பின்னோட்டமா வரலைன்னதுமே, இது ஒரிஜினல்தான்னு தெரிஞ்சுபோச்சு :-) சரி, காதை கொடுங்க, ரகசியம் சொல்றேன். நான் எழுதுனது முழுக்க கற்பனை. மச்சினன் (னர்கள்) எங்கயோ ஐதராபாத்ல இருக்கானுங்க. மனைவி மெஷின ஓட்டுறா. அப்பப்ப நான் கை கொடுக்கும் கை. அம்புட்டுதான். இந்த பதிவு மேட்டர் தெரிஞ்சுது, நெஜம்மாலுமே, வெள்ள சொக்கா, மஞ்சளாயிடும் ஆமாம் :-(

dondu(#11168674346665545885) said...

"நான் எழுதுனது முழுக்க கற்பனை. மச்சினன் (னர்கள்) எங்கயோ ஐதராபாத்ல இருக்கானுங்க. மனைவி மெஷின ஓட்டுறா."

அப்படியா, தொச்சுவும் கற்பனைப் பாத்திரம்தான். கடுகு சாரை தில்லியில் வைத்து என் மனைவியின் அத்திம்பேர் தொச்சு மற்றும் அங்கச்சி நலனை விசாரித்தபோது, கடுகின் மனைவி விழுந்து விழுந்து சிரித்தார்.

ஒரு முறை அவரது கதைகளைப் படித்தால் நான் கூறுவது உங்களுக்கு இன்னும் அதிக வெளிப்படையாகத் தெரியும்.

"டோண்டு சார் (4800161)- கெட்ட வார்த்த ஏதும் பின்னோட்டமா வரலைன்னதுமே, இது ஒரிஜினல்தான்னு தெரிஞ்சுபோச்சு :-)"
நன்றி. :))))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Maraboor J Chandrasekaran said...

ஒரிஜினல் டோண்டு சார், உடன் எக்ஸ்ப்ரஸ் வேக பதிலுக்கு நன்றி. கடுகு எழுத்துக்கள் நிறைய படித்திருக்கிறேன். நீங்கள் சொன்ன பிறகுதான், இரண்டிலுமுள்ள ஒற்றுமை தெரிகிறது. அந்த கடுகு சிறுத்தாலும் காரம் அதிகம். அவர் மிகப் பெரிய நகைச்சுவை எழுத்தாளர். அவருடன் இந்த சிறியவனை ஒப்பிட்டதற்கு, நான் இன்னமும் நண்கு எழுத வேண்டும் எனும் உத்வேகத்தை கொடுக்கிறது. நன்றி.

Kowsalya Subramanian said...

Excellent Post.. Though halfway through, I guessed it is "karpanai". Most facts about the Washing machine is true, sometimes I used to wonder whether I am doing more work with or without the machine :)

Regarding my profile and http://ninaivalai.blogspot.com. That is the first blog I started then when I converted to beta, I couldnot comment on non-beta blogs, So created the new one http://ninaivugalthamizhil.blogspot.com, exclusively for writing in Tamil, but no progress though

Kowsalya

Maraboor J Chandrasekaran said...

கெளசல்யா, இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை. என்னால், இரண்டுக்குமே (பீடா, பீடா அற்றவை)- பின்னூட்ட முடிகிறதே? நான் தமிழ் மணத்துக்கு எழுதினதோடு சரி. எதையுமே பழுது பார்க்கவில்லை. முதலில் தொல்லை குடுத்த பீடா, பின்னர் அடங்கிவிட்டது ;-)

Kowsalya Subramanian said...

என்னைக்கு எல்லாத்தையும் சமாளிக்கறேன்னு திருஷ்டி வெச்சிங்களோ. இப்ப ரொம்ம்ம்ம்ப வேலை பளு :-(. ஆமாம், இப்ப என்னாலையும் பின்னூட்டம் பண்ண முடியுது. பீட்டா ஆடி அடங்கி விட்டது ;)

Maraboor J Chandrasekaran said...

குருவி உட்கார்ந்து பனம்பழம் விழுந்த மாதிரி... நான் திருஷ்டி வெச்சேனா? கவுசல்யா, என்ன கவுக்கறீங்களே! ஒண்ணு பண்ணுங்க, கோவம் வந்தா வெள்ளத்துணியில காமிங்க! நல்லா வெளுக்கும்! மெஷின் வேண்டாம் :)