25 December 2006

பெரியார் 'சிலை' யானார்!'

"எலேய் வெங்காயம், சூரமணி, எந்திரிடா"குர்..ர்....ர்ர்...குறட்டை விட்டுத் தூங்கறான்யா,எலேய், எந்திரி..."உஹ¥ம், கையிலிருந்த கைத்தடியால் ஓங்கி ஒரு போடு!"ஹ, யாரு?""ராமசாமி''சூரமணி கண் விழிக்கிறான். நெஜமாகவே பேந்தப் பேந்த விழிக்கிறான்!கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறான்!"யாரு? ஸாரி, நேத்து கனிமொழியோட மீட்டிங் பேசப் போயிட்டேன்ல? அதான். சரி, யாரு நீங்க? ராமசாமியா? ஓ, ஈ.வே.ராமசாமியா.. அயோ, பெரியாருங்களா!? தமாசு பண்ணாதீங்கண்ணா, சத்தியராஜுன்னு சொல்லுங்க! பரவாயில்லையே/ பெரியாரைத்தான் பார்க்க முடியல,அட்லீஸ்ட் சத்தியராஜ பெரியார் கெட்டப்ல பார்த்துட்டேன். இருங்க, கையும் ஓடல, காலும் ஓடல! படார்னு ஓடிப்போய் என் மச்சினன் கிட்ட போய் காமெரா மொபைல் வாங்கியாறேன். ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்குவோம். அப்புறம் என் ரேஞ்சே வேற!"
மீண்டும் தடியால் ஒரு போடு போடுகிறார்!
"உருப்படாத பயலே, யார்றா அது சத்தியராஜ், ஓ அந்த நடிகரா, எல்லாஞ் சரிதான் ஆனா அவரு என்னவிட ரொம்ப உசரம்; அத வெச்சு கூடவா நான் யாருன்னு கண்டு பிடிக்க முடியல?""தாடி வெச்சவனெல்லாம் பெரியாரா, குறும்பு!" படீரென தாடியை இழுத்துப் பார்க்கிறான்.மீண்டும் அடி! "அந்த சத்தியராஜ் சத்தியமா சோல்றேன், நான் பெரியாரேதான்!"நம்ப முடியாமல் பார்க்கிறான்."தலிவா; அதான் செல வெச்சுட்டோம்ல - அப்புறம் எதுக்கு எந்திரிச்சு வார?""நீங்க பண்ற குளறுபடி தாங்கலடா, அதான் வந்துட்டேன்!"
அதுக்குள் குப்பம் முழுதும் கூட்டம் கூடிவிட்டது!
எல்லாரும்'பெரியாரை'ப் பார்த்து, கட்டாயம் சத்தியராஜ் தான் என்று முடிவு செய்து,முண்டியடித்து, தொடவும், பேசவும் முயல்கிறார்கள்! பலர் பேச முற்படுகிறார்கள்!"தலைவா, என்னம்மா கண்ணு சவுக்கியமா?" அதற்கு அடுத்தவன், "பாத்தியா உங்கிட்டயே சவுக்கியத்த கேக்குறான்,டேய் தலைவர் கைல இருக்குற குச்சியால நிஜமாலுமே ஒரு குத்தாட்டம் ஆடினார்னா, நீ பீஸ் ஆயிடுவே! போடா அந்தாண்ட...! இன்னொருத்தன்," சத்தியராஜ் அண்ணே, நீங்க நெஜம்மாலுமெ பெரியாள்ணே! அந்த பக்கம் நமீதாவ நெம்பி, தொப்புள் க்ளோஸ் அப் பார்க்குறீங்க, இந்த பக்கம் வந்து பெரியாரா ஆக்ட் குடுக்கறீங்க, எப்படி தலைவா முடியுது!"
பெரியாருக்கு 'மண்டை காய'த் தொடங்குமுன், செய்திகேட்டு, நக்கல் கீரன் பத்திரிகை நிருபர் வந்து சேர்ந்துவிட்டார்!"ஹலோ, ஐ ஆம் 'சண்ட்ர ஷேகர்' ரிபோர்ட்டர் ஆ·ப் நக்கல் கீரன், உங்கல் வேட்டி எடுக்கணும், ஸாரி பேட்டி எடுக்கணும்,""ஹ¥ம்? உங்கல் வேட்டி எடுக்கணும், பேட்டி எடுக்கணும்னு, என்னப்பா தமிழ் கொலையா இருக்கு? அதுக்கு உன்னய வெட்டி எடுத்துறலாம்!" அவருக்கேயான பாணியில் சிரிக்கிறார்.பெரியார்," அது சரி, பேரென்ன சொன்ன, சன் ஷேடா? அப்படீன்னா ஜன்னல் நிழற்தட்டின்னுல்ல அர்த்தம்? வந்துட்டாய்ங்க! ஓ, சந்திரசேகரா? அப்ப, தமிழ்ல அழகா 'பிரைசூடன்'ன்னு சொல்லலாமே!""அது சாமி பேராச்சே, தலைவர் அதெல்லாம் சொல்லமாட்டார்" - கோபத்துடன் சூரமணி!"வெங்காயம்; ஒண்ணு சமஸ்க்ருதம், வடமொழி. இன்னொண்ணு தமிழ். எதுல சொன்னாலும், சாமி பேரு வருதே! நம்பிக்கை இருக்கோ இல்லையோ, தமிழக் கொல செய்யாம இருந்தாச் சரி!"சந்திரசேகர்: அப்ப மிஸ்டர்.பெரியார், உங்களுக்கு சாமி மேல வெருப்பெல்லாமில்லையா?""எவண்டா இவன் திருப்பி திருப்பி? சோம்பேறிப்பயலுவ, புளியோதரையும், பொங்கலும் ஓசில சாப்டு, அப்படியே ஓரத்துல சாஞ்சுக்கறான். விழிப்பு வந்தா, கைய நீட்டி பிச்ச கூட எடுக்கறான்! சரி, இப்படி சவுரியமா போச்சு, உக்கார்ந்த மாதிரியே கைல காசு, வாயில தோச கிடைக்குதுன்னு, அப்படியே கோவில்லயே உக்கார்ந்துர்றான்; அந்த மாதிரி பொருப்பத்த தமிழ் பயலுகள சுறுசுறுப்பாக்கணும்னு, கோவில் பக்கம் போகாதன்னு சொன்னேன்; மத்ததெல்லாம் விட்டுட்டான், ஆனா கோவில் எதிர்ப்பு மட்டும் செஞ்சுகிட்டிருக்கான்!"சரி, கோவிக்காதீங்க! வேற ...இடையில் ஒரு பொதுசனம் குறுக்கிட்டு,"அய்யா, நீங்கதான் பெரியாருன்னா, இந்த முல்லை பெரியாரு மேட்டரை வந்த கையோட சரி பண்ணுங்களேன்! ஒரே ரவுசா இருக்கு! அது உங்க இடம்தானா? பட்டா கிட்டா ஏதும் கொண்டாந்தீங்களா?இப்ப உங்க பேரு ரிப்பேரு பண்ற மாதிரி யாருக்கும் நடக்கக் கூடது பாருங்க, அதுக்குத்தான் சொல்றேன்!'
"அடபாவிகளா, எந்த ரெண்டையும் முடிச்சு போடுறதுன்னு விவஸ்தையே இல்லையா? அது தனி விஷயம். பெரிய ஆறுங்கறது, 'பெரியாறு' ன்னு மருவி, அந்த பேரு வந்துச்சு!
"சரி, எவன் என் சிலைய அந்த ஸ்ரீரெங்கம் கோபுரத்துக்கு எதிரே வைக்கச்சொன்னாங்க?"சூரமணி, "அய்யா, அப்ப நீங்க நெஜமாலுமே பெரியாரா? காலில் விழுகிறான்."உங்களுக்கு சேவை செஞ்சே வாழ்ந்திருக்கேன்; இப்ப எதொ தலைவன்னு என்னை சொல்றாங்க. உங்கள் கொள்கைங்க, இந்த சாமி கும்புட போறவங்க மனசுல படணும்னுதானே, நம்ம பயலுக எவனோ சிலை வெச்சான்? கவலை படாதீஇங்க தலைவரே, அவனுங்க கல்லுல வெச்சா உடச்சாங்கல்ல, நான் வெங்கலத்துலயே புது செலை செஞ்சு வெச்சுட்டேன்; இனி எவன் என்ன செய்றான்னு பார்க்கறேன். இதுமட்டுமில்ல, இன்னும்128 கோவில் வாசல்ல வெங்கல சிலை வெக்க ஏற்பாடுங்க நடக்குது!"
பெரியார் கோபமாக,"டேய், சாமி, உருவ வழிபாடு ரெண்டையுமே நான் தீவிரமா எதிர்த்தேன். இப்ப என்னடான்னா, போதாக்குறைக்கு ரொம்ப கனமா, என்னால எழுந்திருக்கவே முடியாதபடி, வெங்கலத்துல செஞ்சு, சாமி இல்லைன்னு சொன்ன எனக்கே,தினமும் அந்த பெருமாள் மூஞ்சீல முழிக்கிற மாதிரி பண்ணிட்டீங்களேடா! பாவி பயலுகளா! சிலை வேணம்னு சொன்னேன், இப்ப கண்ட காக்கா, குருவி எச்சத்த தலைலவாங்கிகிட்டு, நான் வெயில்லயும், மழைலயும் நிக்கணுமாக்கும்? தொண்டருங்கங்கற பேர்ல, கொள்கைக்குப்புறம்பா, எனக்கே சிலை, உருவ வழிபாடு! பாழா போச்சு போ! போதாக்குறைக்கு, மாலை, கற்பூரம், ஊதுபத்தி வேற!"
சூரமணி, "இல்ல தலைவரே, நமக்குன்னு எதாவது ஒரு வேல வேணாமா, அத்தன் அப்பப்ப..."
"அப்பப்ப, ஒத்து ஊதறயாக்கும்? முதல்ல அம்மாவோட கூட்டு, கொஞ்சம் கலெக்ஷன், அப்புறம் ஐயாவோட கூட்டு, சே, ஒரு தனித்தன்Mஆஇ இல்லாமலே போச்சு!"
"இல்லயே, நேத்துகூட, கனிமொழி, பொன்முடி கலந்துகிட்ட விழால, பெண்கள் உரிமை பத்தி பேசுனேனே?""வெங்காயம் உரிமை. நான் கேட்டது, சமுதாயத்துல சம உரிமை. நீ என்னடான்னா, வெவரம் இல்லாம, கோவில் அர்ச்சகர்களாக, மத்த சாதிசெனத்தோட பெண்களுக்கும் பங்கு தரணும்னு அந்த பொண்ணு கனிமொழி சொல்றச்ச, அதுக்கு ஆமோதிச்சு, "ஆமாம், ஆமாம், பொண்ணுங்களும் பூசாரி ஆகணும்,"னு ஓங்கி ஜால்ரா அடிச்சிருக்கே! மடையா, சாமியே இல்லேன்னேன், அப்புறம் பூசாரி எங்கயிருந்து வந்துச்சு? அது பொம்பளயா இருந்தா என்ன, ஆம்பளையா இருந்தென்ன? எதுக்குத் தான் மண்டையாட்டறேன்னு விவஸ்தை இல்லாம போச்சு! உனக்கு, நமக்குன்னு ஒரி கொள்கை வேணும்டா. ஆளுங்கட்சி,திடீர்னு கோவில்ல மணி அடிச்சா, நீ வெளக்கு பிடிப்ப போலருக்கே?"
உடன் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தொண்டன், அவசரமாக, "அதெல்லாம் இல்ல தலைவரே, எங்களுக்கு நீதான் சாமி. உனக்குதான் சிலை வெப்போம். ஏன் வேணும்னா, கோவில் கூடகட்டுவோம், சொல்லு தலைவா, நெஞ்சக் கீறி, "எங்க கடவுள் பெரியார்,"னு சொல்லி நெத்தில பொட்டு வெக்கவா,சொல்லு," என்று உணர்ச்சிவசப்பட்டான்!
"இவனுங்களை திருத்த முடியாது." என்று மீண்டும் பெரியார், வேறு வழியில்லாமல், 'சிலை'யானார்!

(இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள், கற்பவையே! பெயர் ஒற்றுமை, கருத்து ஒற்றுமைக்கு நானும் பெரியாரும் பொறுப்பல்ல!)

08 December 2006

தேன்கூடு போட்டிக்கு- குறும்பு பெற்ற அன்பு!

"சித்த சிவனேன்னு கிடக்கிறேளா? ஊர் வம்பை விலைக்கு வாங்கிண்டு?"
சங்கரன், சும்மா இருப்பாரா?
"சித்த சிவனேன்னா, இல்ல சித்தம் சிவனேன்னா? டீ, மங்களம் நீ தத்துவம்லாம் பேச ஆரம்பிச்சுட்டடீ!"- மாமா மாமியைக் கலாய்த்தார்!
உங்க குறும்பை என்கிட்ட காட்டாதேள். அப்புறம் ராத்திரி சாப்பாடு கூப்பாடுதான்!
மாமா கப்சிப்!
இப்படித்தான். இந்த ஊருக்குள் சங்கரய்யர் வந்ததிலிருந்து, தினம் நாம் கேட்கும் உரையாடல்தான் இது ! அப்படி என்னதான் செய்கிறார் சங்கரன்?
சாய்ந்த ஓடு அடுக்கப்பட்ட வாசல் திண்ணை. அதில் உட்கார்ந்து 'குடும்பப் ஒரு கதம்பம்' விசு போலவே, வருவோர் போவோரை 'ஓட்றது'தான் அவர் செய்யும் முக்கிய வேலை!
அம்மணி மாமி, ஏன் தலைய திருப்பிண்டு போறேள்?
தெரியாதா சங்கரா, நீ ஒத்த ப்ராம்மணன்; கண்ல பட்டுட்டே; நான் பேத்தி ஜாதகத்தை குடுக்க தஞ்சாவூர் வரைக்கும் போயிண்டிருக்கேன்."
அட, நாம்பாட்டுக்கு தேமேன்னு எங்காத்து திண்ணைல உட்கார்ந்துண்டிருக்கேன். நீங்களா பார்த்துட்டு, நான் கண்ல பட்டேன்னு சொல்றேளே? அத விடுங்கோ! நான் ப்ராம்மணன்னு உங்களுக்கு யார் சொன்னது? நான் ஆர்மிலே இருக்கறச்சே......." இப்படி மாமி வாயைக் கிண்டுவார்!
''டேய் கிச்சா, திருட்டு தம் எதுக்குடா? முடிஞ்சா மூஞ்சிக்கு நேரா அடி, இல்ல விடு, அதவிட்டுட்டு.."
"மாமா, என்ன சொல்ல வரேள்? நான் தம் அடிக்கிறேன், விடறேன், உங்களுக்கு என்ன?" என்பான் முகத்திலடித்தார்போல்!
மாமா, முகத்தை வெகுளியாக வைத்துக்கொண்டு, எனக்கென்னப்பா, உன் 'ஆளு' கலா கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பஸ் ஸ்டாண்டுக்கு போயிண்டிருந்தா, அதான் உஷார் பண்ணலாமேன்னு.." என்று கிச்சாவை கலவரப் படுத்துவார்!
போன மார்கழி மாசம். பெருமாள் கோவிலில் விடிகாலையில் அதிசயமாக, குளித்து விபூதிப் பட்டை அடித்துப்போய் நின்றார்! அருகிலிருந்தவர்களுக்கு 'என்னடா இது இப்படி?' என்று சங்கடம்!
அங்கு வந்த சேஷாத்ரி நேராகவே கேட்டுவிட்டார்! "யோவ், சங்கரன், சோழியன் குடுமி சும்மா ஆடாதே? நீர் காலங்கார்த்தால இங்கென்னய்யா பண்றீர்? அதுவும் இப்படி பட்டைய அடிச்சுண்டு?""வாரும் (இரு பொருள்பட) சேஷாத்ரி! சும்மா, திருப்பாவை கேக்கலாம்னு வந்தேன். ஏன் நான் என்ன 'அந்த' பட்டையா அடிச்சுட்டு வந்தேன்? விபூதி பட்டைதானே? கோடை குறுக்கப் போட்டா என்ன? நெடுக்கப் போட்டா என்ன? பக்தியோட போடணும். அவ்வளவுதான். முதல்ல உம்ம நாமத்திலயே ரெண்டு கோஷ்டி! ரவுண்டு கட்டி போட்டா, தென்கலை; சதுரமா போட்டா, வடகலை. அதுலயும் இந்த வாத்திமா, பாத்திமான்னு சப் டிவிஷன் வேறே! என்னகலையா இருந்தாலும் எச்சக்கலையா இருக்கப்படாது! அவ்வளவுதான். ராத்திரி, சிடி க்ளப்புக்குப் போய் 'ரம்'மி (இதுவும் இரு பொருள் பட) ஆடறச்ச ஆசாரம் எங்க போறது? பெருமாளே சுந்தரேஸ்வரரை தம் தங்கைக்கு கல்யாணம் பண்ணி வெச்சார், நீங்க என்னடான்னா, இந்துக்களுக்குள்ளயே பிரிவினை பண்றேளே!'' என்று போட்ட போடில் யாரும் வாயைதிறக்கவில்லை!
அதே சூட்டோடு சூடாக, "யோவ், பட்டரே, குழந்தைகளுக்கெல்லாம் பிரசாதம் குடுத்து அனுப்புய்யா .சாமி சொல்லிச்சா? பூசையப் போட்டு அப்புறமா பிரசாதம் தான்னு? சின்னக் குழந்தைகளெல்லாத்தையும் ஏங்க வெச்சுட்டு என்ன பூசை வேண்டியிருக்கு? " என்று ஒரு பிரச்னையைக் கிளப்ப, மாமாவுக்கு சப்போர்ட்டாய் குழந்தைகளின் தாயார்களும், இளைஞர்களுமாய், மற்ற சைடில் கோவில் பட்டர், சேஷத்ரியும், மற்ற பழம்பெருச்சாளிகளும் சேர, ஒரே அல்லோல கல்லோலமாய் போனது மார்கழி ஆரம்பம். இந்த முறை மாமாவுக்கு, மாமி, பெருமாள் கோவிலுக்கு போக 'தடா' விதித்துவிட்டாள்! மாமியின் பேச்சுக்கு மட்டும் கொஞ்சம் அடங்கும் மாமாவை, ஒரு நாள் கிச்சா கேட்டே விட்டான்!
"என்ன மாமா, எங்கள இந்த ஓட்டு ஓட்றேங்களே, மாமி சொன்னா மட்டும் அப்படியே 'பம்மு'றேங்களே? என்ன விஷயம் என்றதற்கு, மாமா ,
" கொஞ்சம் கிட்ட வாடா, என்று காதில், மெதுவாக, " அது லவ் அட் பர்ஸ்ட் சைட்! அந்த காலத்துலயே நான் பூனா கன்டோன்மென்டுல வேலைக்கு சேர்ந்தப்பவே, தமிழான்னு தெரிஞ்சு, அதுவும் எங்களவாளான்னு தெரிஞ்சு சைட் அடிச்சேன்! அப்ப அவங்க வீட்ல ஒரே எதிர்ப்பு. இவதான் ஒத்தக் கால்ல நின்னு லவ் மாரேஜை அரேஞ்சுடு ஆக்கினா; அதான், காதலுக்கு மரியாதை!" என்றார் கண் சிமிட்டியபடி! அந்தப்பக்கம் வந்த மாமி, "என்ன, காதுல குசுகுசுன்னு? என் கல்யாணத்தைப் பத்திதானே சொல்வார்? அன்னிக்கே இவர் இப்படி குசும்பர்னு தெரிஞ்சிருந்தா, இந்தாளை நான் கல்யாணம் பண்ணிண்டிருக்கவே மாட்டேன்!" என்றாள்!

மாமாவின் எதார்த்தப் பேச்சுகளால், மாலை வேளைகளில் இவர் திண்ணையில் இளசுகளின் பட்டாளம் நாளடைவில் கூடுவது வழக்கமாகிவிட்டது! அதனாலேயே, நிறைய பெரியவர்களின் 'ஆசிர்வாதத்தை' இவர் சம்பாதித்துக் கொண்டார்!

திண்ணையில் உட்கார்ந்தவாறே, ஆங்கில, தமிழ் பேப்பர் அத்தனையும் ஒரு ரவுண்டு முடித்துவிடுவார்! எல்லாருக்கும் தினவேளைகளில் அது லைப்ரரியாய் இருக்கும். ஓசிப் பேப்பருக்காக, மாமாவின் நக்கல்களை எல்லாரும் தாங்கிக் கொள்வார்கள்.
காதலிலிருந்து, கல்லூரி ஜோக் வரை, சங்கராச்சாரியார் அரெஸ்டிலிருந்து, குமுதத்தில் ஏன் நமீதா அட்டை இந்த வாரம் போடவில்லை என்பது வரையிலான எல்லா உலக செய்திகளும் இங்கே அலசப்படும். இதில் மாமிக்குத்தான் வேலை! எல்லாருக்கும் ஏதேனும் திங்கக் குடுக்குமாறு மாமா நிர்பந்திப்பார்! மாமியும் சளைக்காமல், சமாளிப்பார்!
ஆனால், இவர் குறும்புகள் சமயங்களில் சண்டையாகவும் மாறியிருக்கிறது! பாவம், அப்படித்தான், ஒரு முறை இவரது கேலிக்கு அளவில்லாமல் போய் மாமிகளெல்லாரும் வாசலில் சண்டைக்கு வந்து நின்றனர்! என்ன விஷயம்?
கமலம், கலகத்துக்கான காரணத்தை சொன்னாள்: "உங்க மாமாக்கு ரொம்ப கொழுப்பு! நேத்து பிள்ளையார் சதுர்த்தியோன்னோ? என் பொண்ணு ரமா, சும்மா கேட்டிருக்கா. ஏன் மாமா, அஷ்ட விநாயகரை இன்னிக்கு தரிசிச்சா புண்ணியமாமே? கோவில்லயும், மத்த சந்துகள்லயும் வெச்சுருக்கறத பார்க்க வரலியா"ன்னு!
வேணாம்னா போகவேண்டாம்.

அதுக்கு பதிலா, "இல்ல ரமா, ஆத்து வாசல்லயே அஷ்ட விநாயகரை தரிசனம் பாண்ணியாச்சுன்னு சொன்னாராம்!"
"எப்படி?" ன்னு கேட்டதுக்கு, "காலைல கோவிலுக்கு போன கமலம் மாமி, ரம்யா மாமி, சுகுணா மாமி, ரம்பா மாமி, ராவ், கடைக்கு போயிகிட்டிருந்த செட்டியார், பஸ்ஸை பிடிக்க ஓடிண்டு இருந்த சேஷாத்ரி, அவர் சம்சாரம் லெஷ்மி, அப்புறம் அவர் பையன் கோண்டு இப்படி ரெட்ட நாடீ சரீரமா நிறைய பேர் எதிர்லயே வரப்ப, நான் எதுக்கு பிள்ளையாரத் தேடிண்டு கோவிலுக்கு போகணும்?"னு சொன்னாராம்! இவர் நக்கலுக்கு அளவே இல்லையா? நாங்க என்ன உங்காத்துலயா சாப்பிடறோம்?.." என்று பொரிந்து தள்ளிக்கொண்டிருந்த போது, கேட்டுக் கொண்டே அங்கு வந்த சங்கரன், "ரமா மாமி, எதுக்கு உணர்ச்சி வசப்படறேள்? எனக்கு கொழுப்புங்கறேளே, உங்களுக்கெல்லாம் அது அதிகம் ஆனதாலதானே, தூக்க முடியாம இப்படி இங்க வந்து சண்டை போடறேள்? அதைக் குறைக்கிற வழியப் பாரும். அப்புறம், நானும், ரம்பா, திலோத்தமைக்கு அடுத்து நம்ம கமலம்தான்'னு ஊருக்கே தண்டோரா போட்டு சொல்றேன் போதுமா?" என்றார்!

நொடித்துக் கொண்டே போன மாமி கோஷ்டி, ஒரேயடியாக சங்கரன் வீட்டோடு பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டது!
மிலிடெரி பென்ஷன் பெற ஒரு முறை போஸ்ட் ஆபிசில் நீண்ட நேரம் க்யூவில் நின்று கடுப்பாகிப்போன சங்கரன், திடுப்பென உள்ளே நுழைந்து போஸ்ட் மாஸ்டரிடம், "என்ன சார் இது இவ்வளவு நாழி ஆறது? முதல்ல மேலே எழுதிப் போட்டு, கொஞ்சம் ஆம்பளை ஸ்டாfபா போடச்சொல்லுங்க," என்றார்!
"ஏன் என்னாச்சு?" என்றதற்கு, "ஆமாம், பாதி மாசம், மீதி மோசம். எப்படி வேல நடக்கும்?," என்றார்! கடுப்பான போஸ்ட் மாஸ்டரே, இவரது ரைமிங் அண்ட் டைமிங்கை நினைத்து சிரித்துவிட்டார்!
ஒரு கல்யாணத்தின் போது, மாமா, பையனிடம் மெதுவாகப் போய், "அம்பி, உன் கல்யாண போட்டோல நீ போட்டிருக்கிறது, 'ஜாக்கி' ஜட்டிதான்னு எல்லாருக்கும் பெர்மனன்டா காட்டப் போறயா?" என்றார். பையன் அவசரமாக, "என்னாச்சு மாமா?' என்றான்.
இதப்பாரு, முகூர்த்த வேட்டின்னு, லேசா ஒரு 8 முழம் பஞ்சகச்சத்தை உன்ன கட்டிக்க விட்டுட்டா. அது மெலிசா இருக்கறதால உள்ளாடை நன்னா தெரியறது! வயசான மாமான்னா பரவாயில்லை. நீ கல்யாணப்பையன்......xxxx...அமெரிக்கா கேசு, இதுக்கு முன்னால வேட்டி கட்டிருக்க மாட்ட.
அதென்ன பாலச்சந்தர் சினிமா கதாநாயகி மாதிரி இடுப்புத் துண்டை மேலே குறுக்கக் கட்டிண்டு? அத அவுத்து வேட்டிக்கு மேலே இடுப்பைச்சுத்திக் கட்டு, அப்படியே பின்பாகத்தையும் உன் உள் அலங்காரத்தையும் மறைக்கிறாப்பல!," என்றாரே பார்க்கலாம்! கீழெ குனிந்து பார்த்துக் கொண்ட பையன், அவசரமாய் துண்டை கீழே கட்டிக் கொண்டான்!
அடுத்து,மாமா, வீடியோ மற்றும் போட்டோகிராபரையே விரட்டிக்கொண்டிருந்தார். அவனும், எரிச்சலைடைந்து போய், பாதியிலேயே அம்போ என்று போய்விட்டான். அதற்கு அவர்," பின்னே, கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இருக்கா அவனுக்கு? கரெக்டா பொண்ணு மாப்பிள்ளைக்கு முன்னால நின்னுண்டு ரைட் ஆங்கிள் பாக்கறேன்னுட்டு, இவன் பிருஷ்டத்தை சபைல உட்கார்ந்து இருக்கிறவாளுக்கு காமிச்சுண்டு, போட்டோ எடுக்கறானாம் போட்டோ! பெரியவாள்லாம் தாலி கட்டறச்சே போட்ட அட்சதை, பூவெல்லாம், இவன் பின்னாலதான் போய் விழுந்தது!.." என்றதும் ஆமோதிப்பதுபோல், முன் வரிசை பெரியவர்களெல்லாம், தலையாட்டினர்!
அதற்குள் பையனின் அம்மா முன்னால் வந்து,"என்ன வோய் சங்கரய்யர், நீர் மனசுல என்ன நெனச்சுண்டிருக்கீர்? பிள்ளாண்டான் அமெரிக்காலேர்ந்து வரச்சயே,'என்னம்மா, மரபூர்ல கல்யாணமா? சுத்த கிராமமாச்சே, ஒரு நல்ல வீடியோ, போட்டோ கிராபர்கூடகிடைப்பாங்களோ இல்லையோ?''ன்னான். வந்தவனையும் விரட்டிட்டேளே?" என்றார் சத்தமாக.
மாமா, சடாரென பையிலிருந்து ஒரு டிஜிடல் காமிராவை உருவினார்.
"ரிடையராகி வரச்ச, இதுவரைக்கும் உருப்படியா ஆர்மி காண்டீன்ல ஒண்ணும் வாங்கினதில்லன்னு, வாங்கினது! இன்னிக்கிதான் உபயோகப்படறது!
பணம் கொடுத்தா, அவன் இதுவரைக்கும் எடுத்த போட்டோவெல்லாம் கொடுத்திடுவான். நம்மாத்து கல்யாண போட்டோவை வெச்சுண்டு அவன் நாக்கையா வழிக்க முடியும்? பாக்கி fஅன்க்ஷனை நான் போட்டோ எடுக்கறேன்!," என்றார்,கோதாவிலிறங்கி!
பையனின் அம்மாவிடம் போய், அவர் காதில் மட்டும் படும்படியாக, "மாமி, இது மரபூர்லயும் கிடைக்கும்! சரி, அவனை விரட்டின இன்னொரு காரணம் தெரியுமா?இந்தப்பக்கமா நின்னுண்டு, பொம்மனாட்டிகள் குனிஞ்சு ஆரத்தி எடுக்கற கண்ராவிய அவன் போக்கஸ் பண்ணான்; அதெல்லாம் ஆல்பத்துல வந்தா? அதான், மணமக்கள் சைடுல போய் எடுடான்னா, கேக்கலை. அவன் நெகடிவ்ல எல்லாம் வெச்சிருப்பான், அவனும் நெகடிவ் ஆளுதான்! போடான்னு விரட்டியடிச்சேன்; இப்ப நான் எடுக்கறேன் பாருங்கோ, இதுல உங்களை 25 வயசு பொண்ணாட்டம் காட்டப்போறேன்," என்றதும், யதார்த்தம் புரிந்து மாமி, மவுனமானாள்!
ஒருநாள் திடீரென மாமாவைக் காணவில்லை! வீடும் பூட்டியிருந்தது! வெயில் ஏறத்தொடங்கியதும் மெதுவாக செய்தி பரவி, எல்லாரும் திண்ணையில் கூடி விட்டனர்! எங்கு, எதற்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை! திண்ணை காலியாயிருந்ததை விட மாமாவின் பேச்சில்லாமல், ஊரே துக்கப்பட ஆரம்பித்தது!
ஒரு வாரம் முடிந்து, கோவிலில் கூடாரைவல்லி தினம். கோயிலில் "கூடாரைவெல்லும் சீர்கோவிந்தா! உன்னை பாடிப்பறைகொண்டு யாம் பெரும் சம்மானம்..."என பட்டர் ஓங்கிய குரலில் பூசை ஆரம்பிக்கவும், எதிரே திடுதிப்பென வண்டியில் வந்திறங்கிய சங்கரனைப் பார்த்து ஊரே ஆடிப்போய்விட்டது! மாமா கழுத்தைச் சுற்றி பெரிய பாண்டேஜ்! மாமியும் சோர்ந்து போய் தெரிந்தாள்! வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே அவர்கள் நுழையும் முன், நீ நான் என்று ஊரே உள்ளே புகுந்து விட்டது!
அமளி குறைந்ததும். மாமி மெல்லிய குரலில்," எல்லார்க்கும் சிரமம் தந்ததுக்கு மன்னிச்சுக்குங்கோ! அன்னிக்கி ராத்திரி இவர் திண்ணைல தூக்கம் வரலைன்னு உட்கார்ந்திண்டிருந்தப்ப, யாரோ கைல கோணிப்பையும் குத்தீட்டியுமா கோவில் பக்கமா போயிருக்கா! யாருன்னு இவர் சத்தம் போட்டதும், அவா ஓடப்பார்த்திருக்கா! இவர்தான் மிலிடரி ஆச்சே!வீரத்தக் காட்டி அவாள வழிமறிச்சு மல்லுக்கு நின்னுருக்கார்! கலகலப்புல ஒருத்தன் இவர் கழுத்துல ஓங்கி கத்தியால குத்திட்டான்! நல்லா தொண்டக் குழில இறங்கிடுத்து! அப்படியே கைத்துண்டை அதுல பொத்திண்டு மயங்கி விழுந்துட்டார். அதுக்குள்ள விடிஞ்சுபோச்சு! ஏது வம்புன்னு அவா ஓடிப்போய்ட்டா! இவர் யாருக்கும் தொந்தரவு தரவேண்டாம்னு, அப்படியே தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு காலங்கார்த்தாலே அழைச்சுண்டு போகச் சொன்னார். மூச்ச கைல பிடிச்சுண்டு, அங்க சேர்ந்து, உசிர் நின்னதே பெரிசு! இருங்க வரேன்!" என்று போய் உள்ளேயிருந்து ஒரு சாக்குப் பையை இழுத்துக் கொண்டு வந்தாள்!
அதை வாங்கிக் கீழே கொட்டினால், பஞ்சலோக விக்ரஹங்கள்! ராம லெஷ்மண சீதையும், அனுமாரும்!
பூசை முடித்து அப்போதுதான் அங்கு வந்த பட்டர், தயங்கியபடி, "என்ன ஷமிக்கணும். அடியேன் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன். அன்னிக்கி கோவிலுக்குள்ள இருந்த பஞ்சலோகங்கள் காணலைன்ன உடனே, எனக்கு 12 வருஷமா, கவர்மண்ட் தர வேண்டிய அந்த சம்பள பாக்கியும், என் குடும்பமும்தான் கண் முன்னால வந்தது! அதனாலதான், பேசாத மஞ்சளாலயும், சந்தனத்தாலயும் முகங்கள் செஞ்சு, பூவலங்காரதால விவரமா மூடி, விக்ரகங்கள் நிக்கறாப்லயே செஞ்சு வெச்சேன். பாவி, அதுக்கு ஆண்டவன் எனக்குன்னா தண்டனை தரணும்? இந்த சங்கரன் என்ன செஞ்சார்? போன மார்கழி மாசம் தேவையில்லாம அவரைச் சண்டை போட்டு விரட்டியடிச்சோம், அதான் பகவானே அவர் கைக்குப் போயிட்டார்! உசிரப் பணயம் வெச்சு அவர் நம்ம கோவில் திருட்டத் தடுத்திருக்கார்!," என்றபடி, பவ்யமாக கீழ் குனிந்து சிவாமி சிலைகளை வாங்கிக் கொண்டார்!
மாமா, கையால் ஜாடை செய்தார்; மாமி குரல் தழுதழுக்க, பையிலிருந்து ஒரு சிலேட்டுப் பலகையும், குச்சியையும் எடுத்துக் கொடுத்தாள்! மாமா, அதில் எதோ எழுதி ஊருக்கு காட்டினார்.
கிச்சாதான் சத்தமாக படித்தான், "நல்ல வேளை இனி நான் யாரையும் நக்கல் கேலி குறும்பு பண்ணமுடியாது, தொண்டைல இருந்து காத்துதான் வரும். வேணும்னா,ஒரு புல்லாங்குழலை சொறுகி வையுங்கோ! டிசம்பர் சீசனாச்சே? கொஞ்சம் பாட்டாவது வரட்டும்!"
அந்த நிலையிலும் தன்னையே குறும்பு செய்துகொள்ளும் சங்கரனைப் பார்த்து சிரிப்பதா, அல்லது அழுவதா என்று யாருக்கும் தெரியவில்லை! "ஐயோ மாமா" என்று எங்கும் கூக்குரல்கள் அழுகைகள் பிறந்தது!
அதற்கும் அவர் அசராமல், "நல்லா அழறேள், ரிகல்சர் கேட்ட மாதிரியிருக்கு! நான் மண்டையப் போட்டப்புறம் நல்லாவே அழுவேள், நம்பறேன்," என எழுதிக் காட்டினார்!
கிச்சா, ரோஷமாய், "மாமா, போதும் மாமா, வாயத் திறந்து கொஞ்சம் பேசுங்கோ மாமா," என்றி வீரிட, ஏக சமயத்தில் பலர், "மாமா, நீங்க கேலி பேசினாலும் பரவாயில்லை, பேசுங்கோ மாமா, .."
கமலம் மாமி, "நான் குண்டுதான், ஒத்துக்கறேன், பேசாம இருந்தது தப்புதான், நீங்க பாவம் பெருமாள காப்பாத்த போயி தொண்டை அடஞ்சு போயிட்டேளே, பாருங்கோ, இனி உங்க கேலிப் பேச்சக் கேக்கறதுக்கே குண்டாவே இருக்கேன், பேசுங்கோ மாமா," என அழத் தொடங்க, ...
பெற்ற ஒரே மகனை பார்டரில் பறி கொடுத்து, தானும் அதே மிலிடரியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்று, அங்கிருக்கப் பிடிக்காமல்,பூனாவிலிருந்து கண்தெரியாத இந்த மரபூருக்கு வந்த அந்த தம்பதியினர், ஊரின் ஏகோபித்த அன்பை உள்வாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்!