24 March 2006

"நாகரிகக்கோமாளிகள்'' -பெரிய தலைங்க ரவுசு!

பெரிய தலைங்க ரவுசு!
அய்யா, எதோ நல்ல நேரம், கூட்டுக் குடும்பமா இருக்குற புண்ணியம், ஊருக்குள்ள நடு சென்டர்ல ( இந்த சொலவடை எப்படி வந்தது? நடு - சென்டர் :- ரெண்டும் ஒண்ணுதானே?) இருக்குறமாதிரி ஒரு ஜாதகம் எனக்கு.ஒரு பக்கம் பிரசாந்த் வீடு, மறுபக்கம் கவுண்டன் வீடு, ஏவிஎம் லேர்ந்து ஆர்.வேலு மந்திரி அய்யா வீடுன்னு வீட்டச் சுத்தி ஒரே பெருசுங்க ஆக்கிரமிப்பு தான் போங்க! சரி, நாமளும் வெரப்பா தல நிமிந்து நடக்கலாம்னு பார்த்தா, அதுதான் இல்ல!
விடி காலைல 5 மணிக்கு எங்க அய்யா,(அப்பா) பக்கத்துல இருக்குற பூத்ல பால் வாங்கப் போயி, ஒரே டென்ஷனா திரும்பி வந்தாரு! என்னன்னு கேட்டேன்; அவரு சாது அப்பிராணி மனுஷன்ல, "ஒண்ணும் இல்லடா" ன்னு சொல்லிட்டு, போயிட்டாரு. இந்த ஊருக்கு வந்து கொஞ்ச நாள்லயே அவர் திடீர்னு மேலோக டிக்கெட் எடுப்பாருன்னு யாரும் நெனக்கல. அவரு செஞ்ச வேலய நாம செய்வோம்னு நான் பால் பையத் தூக்கிகிட்டு கிளம்பினேன். எதிர்ல ஒரு ரெண்டு "அக்கா"மாருங்க (அம்மான்னு சொன்னாலோ, அத்தைன்னு சொன்னாலோ கோவிச்சுக்குவாங்க!) வழிமறிச்சு நின்னாங்க! "என்னா, நீதான் அந்த பெரியவருக்கு பதிலா பால் வாங்கப் போறியா?"
"ஆமா"
" நீ பெரிய வூட்டு ஆளு. நாங்க எதோ பொழக்கிறத ஏன் கெடுக்கற?"
"அக்கா, நான் எங்க.."
"நீ நேரா பால் வாங்கி வந்தேயின்னா, வீடு வீடா பால் போடற எங்க பொழப்பு என்னாறது?"
"இல்லக்கா, நான் என் வீட்டுக்கு தானே வாங்கிப் போறேன்"
"இதப் பார்றா, பின்ன தம்பி எல்லா வீட்டுக்கும் போடுதுன்னா நான் சொன்னேன்?"
பால் காரர் நிலமைய கட்டுக்கு கொண்டுவந்து, "அக்கா, விடுக்கா,ஒரு வீட்டு பால்லயா உனக்கு பொழப்பு கெடுது? விடுக்கா!!" ன்னார்.
அக்கா சமாதானமாகலைன்னு அவங்க விட்ட "லுக்"லயே தெரிஞ்சது!
சரி, களுத விட்டுத் தள்ளுன்னு நான் பால் வாங்கிகிட்டுதான் போனேன். இன்னி வரைக்கும் அய்யா செஞ்ச பால் வாங்கற வேலய நான் செஞ்சுவரேன். அன்னிக்கி அய்யா டென்ஷனா திரும்பி வந்ததுக்கு காரணம், எனக்கு அப்ப தான் புரிஞ்சது! வீட்லயே, ஒரு கடுஞ் சொல் அவரு தாங்க மாட்டாரு. வெளியாளு ஓங்கிப் பேசுனா கேப்பாறா?

முதல்முறையா, எனக்கு அந்த இடம் பிடிக்காம போச்சு.

அம்மாவுக்கு சக்கரைன்னு, நெதமும் நடக்கணும்னு டாக்டர் சொன்னதால, சரி, காலைல வாக்கிங் போகலாம்னு அண்ணன் கூட்டிகிட்டு போவாரு. ஒரு நாள் அவரு வேலயா இருக்க, என்னைப் போகச் சொன்னாரு. போனேன். அதுதான் நான் கடைசியா வாக்கிங் போனது!
காரணம்? கண்ல பட்ட காட்சிங்க!
-----
வயசான அய்யாவும், ஆச்சியும் ஹலோ சொன்னாங்க. அம்மாதான்," டேய், அவருக்கு காரைக்குடி பக்கம்தான்; வாக்கிங் ·பிரண்டு" - அறிமுகப் படுத்தி வெச்சாங்க.
வணக்கம் சொல்லிட்டு நகர்ந்தேன். பத்தடி தூரம் போனதும், அம்மா மெதுவான குரலில், "பாவம்டா அவங்க" ன்னாங்க.
"ஏம்மா?"
"ஒரே பையன், செல்லமா, நல்லா படிக்க வெச்சாங்க. சார், ஊருல இருக்குறதல்லாம் வித்து, பெண்டாட்டி, பையன் மனசு நோகாம, இங்க பெரிய வீடா கட்டி, இங்க செட்டில் ஆனாரு. பையன் பெரியவனானதும், வேற பொண்ண காதலிச்சு, கல்யாணம் பண்ணான். இவுங்களும்,பெரிய மனசு பண்ணி ஒத்துகிட்டாங்க. ஆனா,புது மருமக, இவங்கள திருப்ப ஊருக்கு துரத்துறதுலயே குறியா இருக்கா! தெனம், தண்டச் சோறு பட்டம்! அவரு இன்னும் வேலக்கிப் போறாரு. இன்னும் 2 மாசத்துல ரிடயர்டு ஆறாரு. அதுக்குள்ள ஊர்ல சின்ன இடத்த வாங்கி போயிரலாமான்னு யோசிக்கிறாரு! பாவம் அந்தம்மா, புருஷனையும் விட்டுக்கொடுக்காம, பையனையும் விட்டுக் கொடுக்காம, தவிக்கிறா"
---
கொஞ்ச தூரம் போனோம். வழில ஒரு பெரியவரு தானா பேசிகிட்டு வந்தாரு. கண்ல தண்ணி. நான்,மெதுவா பக்கம் போய், "என்ன பெரியவரே? என்ன?ன்னேன்.பாவம், அழுது தள்ளிட்டார்! "எத்தன காலம் ____ (ஒரு பெரிய மனுஷன் பேரச் சொல்லி) அங்க வேல பார்த்தேன். இன்னிக்கி அடிச்சு துரத்திட்டாங்க; எங்க போறதுன்னு தெரியல."
"ஏன், என்னாச்சு?"
"வீட்ல இருக்குற அத்தன பேரும் என் கிட்ட மரியாதையாதான் இருந்தாங்க. வந்த மருமக வடக்கத்தி. அவுங்க தண்ணி போடுறத நான் பாத்துட்டேன். சரி, ஏதோ, ஒரு நாள், பெரிய மனுஷங்க விருந்து சாப்பிடறாங்கன்னு, இவுங்களும் சாப்டாங்கன்னு விட்டுட்டேன். ஆனா,தெனம் குடிக்க ஆரம்பிச்சாங்க. பெரிய அம்மா போயி ரெண்டு வருஷம் ஆச்சு. அய்யாவும், சின்னய்யாவும், பிசினஸ் பிசினஸ்னு வெளியவே கெடப்பாங்க! சமையல் உட்பட எல்லா வீட்டு வேலையும் நாந்தான் செஞ்சேன்.எதோ உரிமைல, சின்னம்மாவ குடிக்காதீங்கன்னு சொன்னேன். அவுங்க காதுலயே விழாத மாதிரி போயிட்டாங்க! திரும்ப திரும்ப நான் சொல்லவும், ஒரு நாள் கோபமா செவிட்டுல ஒரு அர விட்டாங்க! ரொம்ப கூனிக் குறுகிப்போயிட்டேன். இருந்தாலும், உப்பத்தின்ன விசுவாசம் போகுமா ராசா, அதான், அவங்களோட பேசாம, வேலய மட்டும் கவனிச்சுகிட்டு கடந்தேன்."
அம்மா," ஆரம்பிச்சிட்டாண்டா, இவன் பொதுநலச் சேவய. சரி, நான், நடந்துட்டு வீட்டுக்கு போறேன், நீ வா"ன்னு சொல்லிட்டு நடையக் கட்டிட்டாங்க.

நானும் கிழவரும் மட்டும்.
"சரி, வீட்ட விட்டு அனுப்புறமாதிரி என்ன ஆச்சு?"
"மருமக குடிச்சு, குடிச்சு, உடம்புக்கு ரொம்ப நோவாப் போச்சு. ஆனா, அய்யா யாரும் கவனிக்க நேரமில்ல. நாந்தான்,தெரிஞ்ச டாக்டரை வரவழைச்சு, பாக்கச்சொன்னேன். அந்த பாவி மனுஷன் சின்னய்யாக்கு போன் போட்டுட்டாரு.
"குடல் ரொம்ப பாதிச்சிருக்கிறதயும், இனி ரொம்ப கவனமா, குடிக்காம இருந்தா உடம்பு தேறும்னும், வீட்ல கவனிப்பு சரியில்லைன்னும்" சொல்லிட்டாரு. சின்னய்யா, பெரியய்யா எல்லாரும், அந்தம்மாவக் கேட்டா, நாந்தான் தினம் குடிக்க வாங்கிக் கொண்டாந்ததாகவும், என்னாலதான் அவங்க இப்படி ஆனமாதிரியும் பேசுனாங்க. சின்னய்யாவும் பொண்டாட்டி பேச்ச நம்பிட்டாரு.
அத விடக் கொடும.."ஹ்ம்ம்,ஹ்ம்ம்" பெரியவர் பேசமுடியாம கேவிக்கேவி அழுகுறாரு!

கொஞ்சம் சமாதானப்படுத்தி,என்னன்னு கேட்டேன். கேட்டதும், ஏண்டா கேட்டோம்னு ஆயிருச்சு! அவரு சொன்னது, " இந்தாளு என்ன பார்க்கற பார்வையே சரியில்ல, மேலும்..." ன்னு அநியாயமாகக் கிழவர்மேல் பழி சுமத்தினதுதான்!! சினிமாவில்தான் இப்படி வில்லிங்கள பார்த்துருக்கோம்னா, நிஜத்துலயுமா!! சே!

எப்பவோ, சின்ன வயசுல எங்காத்தா, என்ன ஊர்லயிருந்து இங்க விட்டுட்டுப் போனதுதான்; இன்னி வரக்கும் நாயா உழச்சதுக்கு நல்ல பலன்!"ன்னு மூக்கச் சிந்தினாரு..
"எங்க போறேங்க?"
"தெரியலயே?"
"பெரியய்யா என்ன சொன்னாரு? அவருதான் உங்கள இத்தன வருஷமா பார்க்கறாரே?"
"என் கெட்ட நேரம், அவரு வெளியூரு போயிருக்காரு."
"தாத்தா, உங்க நல்ல நேரம்னு சொல்லுங்க".
தாத்தாவுக்கு நான் என்ன சொல்றென்னு புரியல!
என் வாக்கிங் அதோட அன்னிக்கி முடிஞ்சது. தாத்தாவக் கையோட வீட்டுக்கு கூட்டிகிட்டு போனேன். சாப்பிடக் கொடுத்தேன். "பெரியய்யா போன் நம்பர் தெரியுமா?" பெரியவர் மனப்பாடமா மொபைல் நம்பர் ஒப்பிச்சாரு!நான் அந்த நம்பர்ல பேசி, நடந்த எல்லாத்தயும் சொன்னேன். மறுபக்கம், அவரும், விட்டுக் கொடுக்கல; தனது மகன்,மறுமகள் பக்கம் நியாயம் இருக்குற மாதிரி தான் பேசுனாரு! நான், அப்புறம்,பெரியவர் இத்தன வருஷம் செஞ்சதெல்லாம் வேஸ்டு; அவர ஒரு முதியோர் இல்லத்துலயாச்சும் சேக்கலாம்னு வாதாடினேன். 10 நிமிஷ போராட்டத்துக்குப் பின், அவரு கொஞ்சம் மசிஞ்சாரு. ஆனா, "எனக்கு எந்த இல்லமும் தெரியாதே" ன்னு கழண்டுக்கப் பார்த்தாரு. நானோ, விடாமல், "எனக்கு சில ஆசிரமங்கள் தெரியும்னும், அவரு பண ஏற்பாடு மட்டும் செஞ்சாப் போதும்னும், மல்லுக்கு நின்னேன். என்ன நெனச்சாரோ தெரியல, "சரி"ன்னு ஒப்புகிட்டார். இப்ப அந்த கிழவர் ஒரு முதியோர் இல்லத்துல இருக்காரு.
----------------------

என் கெட்ட நேரமா, தெரியல; வேண்டாதடெல்லாம் என் கண்லயேப் படுது!

மறுநாளும் வாக்கிங் போகவேண்டிய நிர்பந்தம். அடையார் போட் களப் சுத்தி நிறைய பேர் ஓடுறாங்க. எல்லாருக்கும், வயத்தச் சுத்தி நிறைய கொழுப்பு இருக்கு! கோபப்படாதீங்க, நிஜந்தான். ஓடுற மாதிரி, மெதுவா உருண்டுகிட்டு போற ரோட் ரோலர் மாதிரி பலரும், இனி விடுறதுக்கு மூச்சே இல்லாதமாதிரி இழுத்து இழுத்து விட்டுகிட்டு கொஞ்ச பேரும், ரகசிய சந்திப்புக்கு ஏத்தமாதிரி ரன்னிங் போற இளசுங்களும் ஓடுறாங்க. சில அம்மணிங்க, அரக்கை பனியன், மற்றும் தேவை இல்லாத சிலுப்பு காட்ற மாதிரியான உடைகள மாட்டிகிட்டு வந்து டார்சர் பண்றாங்க! ஒரு நடுத்தர வர்க்கம் வாழற ஏரியாவுல, காலைல என்ன பார்ப்போம்? அழகா,குளிச்சு, தல சீவி, பொட்டிட்டு, பொண்ணுங்க, வாசல்ல கோலம் போடுறத பார்ப்போம்; இங்கயோ, அந்த வேலய வீட்ல இருக்கற வேலக்காரம்மாதான் செய்யணும்!

"அம்மா, இந்த சோப்பு விளம்பரம் பனியன் போட்டுகிட்டு நாய இழுத்துகிட்டு ஓடுறாரே, அவரு பையன் வெளிநாட்டுல இருக்கான். பெரிய வீட்டை கட்டிக் கொடுத்து, அப்பா, அம்மாவை வெச்சுட்டு, பையன் அங்கயே செட்டிலாயிட்டான். நாய் இவங்களுக்குக் காவல்,இவன் சொத்துக்கு பெத்தவங்க காவல்; நாளைக்கு அவன் அந்த வயசுல வந்து செட்டிலாகணுல?" ன்னேன்.
அம்மா முறைச்சாங்க! அந்தாளு போட்டிருக்கற பனியன், அங்கே, ஸ்டார் ஹோட்டல்கள்ல,பெரிய 'ஷாப்பிங் மால்'ல இலவசமா கொடுக்குற பனியன். அதப்போய் அப்பனுக்கு பெரிசா கொடுத்துட்டு, நாய்க்கும், வீட்டுக்கும் காவலாளி ஆக்கிட்டானே!'' அப்படீன்னேன்!
"ஒன் எழுத்தாளன் புத்திய ஏண்டா இங்க காட்டுற? கற்பனையப் பேப்பரோட நிப்பாட்டிக்க, அடுத்தவங்கள எட போட உபயோகிக்காத! நேத்து ஒரு வம்பு, இன்னிக்கி வேறயா? வேணாம்டா" னாங்க.
எனக்குத்தான் வாயி சும்மா இருக்காதே?
"அம்மா, நான் வேணாம் அந்த அங்கிள் கிட்ட பேச்சு கொடுக்கவா?"
தகவல் தான் சொன்னேனே ஒழிய, அம்மாகிட்ட அனுமதி கேக்கல!மெதுவாக ரோடை
க்
ரா
ஸ்
பண்ணி, அவர் கூடவே, ஓட ஆரம்பிச்சேன்....

ஹை அங்கிள்!! (நாய் என்னைப்பார்த்து, ஆக்ரோஷமாகக் குரைச்சது! ஒரு வேளை அவர் பேரு அங்கிள் இல்லாம வேற பேரோ என்னமோ?)
அவரு, நாயப் பார்த்து, "உஷ். டாமி; நோ. டோண்ட் பார்க்; கீப் குவைட்" ன்னார்.
பரவாயில்ல அங்கிள் தமிழ்; அவரு வளர்க்கிற நாய் இங்லீஷ்!
"யெஸ்?"
"ஜஸ்ட் லைக் தட். நான் தினமும் உங்களப் பார்க்கறேன், யூ ரன் வெரி ரிதமிக்கலி! அண்ட் யூ ஆர் பன்ச்சுவல் டூ (நீங்க சீரா ஓடறேங்க, தினம் நேரம் தப்பாமலும் வர்றேங்க!- எப்படிப் பட்ட பொய்! நான் எங்க இவர தினமும் பார்த்தேன்?)

"ஓ, தேங்க்ஸ்!"(பெரிசு வாயவே திறக்க மாட்டேங்கறாரே!)
"உங்க வீட்ல யாரும் வரலையா? ஆண்டி, யுவர் சன்.."
"நோ, ஷீ இஸ் பிஸி இன் ஹெர் ஓன் வே.."(அவங்க அவங்க ரூட்ல பிஸி - என் வழித்தனி வழி!! ஹி,ஹி, இரண்டாவது வாக்கியம் நானா சேர்த்துகிட்டது, அவரு சொல்லலை)
"யுவர் சில்ரன்?"
"ஓ, ஹி இஸ் இன் யூ.எஸ்" (மனம் யுரேகா..! என் கும்மாளமிட்டது! என் யூகம் சரி)
"அவர் இங்க வருவாரா?""வெரி ரேர்லி. ஹிஸ் சில்ரன் டோண்ட் லைக் திஸ் அட்மாஸ்பியர்"(எப்பவாவது; அவன் பிள்ளைங்களுக்கு இந்த சூழ்நிலை பிடிக்காது)

எனது அடுத்த ஜோசியம் : " டிட் ஹி ஸ்டடீ இன் I.I.T?"
"யெஸ்!! யூ நோ ஹிம்?"(அட, உனக்கு அவனைத் தெரியுமா?)
"நோ, ஜஸ்ட் அ கஸ்" ( சும்மா ஒரு யூகம்தான்!)
"ஓகே, அப்புறம் பார்க்குறே"ன்னு சொல்லிட்டு, வழக்கம் போல என்னய அம்போன்னு விட்டுட்டு போன் அம்மாவைப் பிடிக்கணும்னு வேகமா ஓடினேன்.
"என்னடா, புது வம்பா?"
"இல்லம்மா, நான் யூகிச்சது சரி."
"சிவனேன்னு கிட; ஆபீசுக்கு நேரத்துல போற வழியப் பாரு! சும்மா அந்தாளு பின்னால அலையாத!"

சிவனேன்னு கிடக்க நம்மால் முடியுமா என்ன?
கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சதுல, மாமாவுக்கும், மாமிக்கும் ஒரே விஷயத்துல ஒத்துமை.
அது- யோகாசனப் பயிர்ச்சி!!கவியோகி சுத்தானந்த பாரதி எழுதின "எல்லோர்க்கும் யோகாசனம்", புத்தகம் கொடுக்குற சாக்குல, அந்த வயசானவங்க பத்தின என் யூகங்கள்லாம் சரின்னு தெரிங்சு, மனசே பாரமாகிபோச்சு.
என் யூகம் சரிங்கறத விட, பையன் இங்க வர்றது அவன் குடும்பத்துல ஒருத்தருக்கும் பிடிக்கலைங்கைறதும், அவர் போனப்புறம், தனக்குக் ஒரு "கோடி" போட்டு மூடீட்டு, அந்த வீடும், இடமும் கிட்டத்தட்ட ஒண்ணறை கோடி பெரும், அத வித்து பணம் பண்ணிருவான்னு சொல்லி அழுதாரு! அந்த வீட்டுக்கார அம்மாவோ, தடாலடியாக, "இந்த பாருப்பா, அப்பா அம்மாவை பக்கத்துல வெச்சு காப்பாத்த நாங்களும் புண்ணியம் செஞ்சிருக்கணும், அவனுக்கும் கொடுப்பினை இருக்கணும்! ஒனக்கு புள்ளயிருந்தான்னா, தயவு செஞ்சு ரொம்ப படிக்க வெச்சிராதே! அவனுங்க ரெக்க மொளச்சா காணாம போயிடுவாங்க!"ன்னாங்க!

Brain Drain - மூளை வரட்சி!! - அதப் பத்தி தனியாவே, முந்திய பதிவுல எழுதியிருக்கேன்.

சரி, வாக்கிங் போறப்ப வேற சில அசிங்கங்களும் நம்ம கண்ல பட்டுத் தொலையுது!அரை டவுசர் போட்ட பணக்காரர்கள்; இல்ல, NRI ங்களும், நாய் ஒண்ணை இழுத்துகிட்டே ஓடுறது. அது அந்தாள இழுத்துகிட்டு ஓடுதா, இல்ல அந்த ஆள் நாய இழுத்துகிட்டு ஓடுறானான்னு, ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்!!

பணக்காரனாக் காண்பிச்சுக்கற அடையாளச்சின்னம்தான் இந்த நாயும், அரை டவுசரும்! (NRIக்கு நான் சொல்ற விளக்கம்- NRI- "நாறி" நெல குலஞ்சு வர்றவன்- அங்க ஆயிரம் சொன்னாலும் நம்ம வேத்து மனுஷங்கதான்! உயர் பதவி எல்லாருக்கும் கிடைக்காது; அதே போல சம்பளமும். அவனளவுக்கு நமக்கு தர மாட்டான்! கலாச்சாரமும் கெடும்..!) இவங்களோட, அவங்க வீட்டுக்கார அம்மையார்! அவுங்களும் அரை டவுசர், லிப்ஸ்டிக், டை (Hair Dye) இத்யாதியோட, மெதுவா கூடவே ஓடி வருவாங்க! சரி, அவங்க ஓடுனா சரி. கூடவே, மொபைல்! அந்தக் கொடுமை பத்தி என் தனிப் பதிவு படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்! எதோ, ஊர்ல இருக்குற அத்தனை பிசினஸ¤ம் அந்த நொடிலயே பேசி முடிக்கிற மாதிரி "அஹ அஹான்னு சிரிப்பு, திடீர்னு சீரியசா முகத்த வெச்சுகிட்டு, குசுகுசுன்னு பேசுறது, அப்புறம் எதுக்கு காலைல வந்தோம்னு ஞாபகம் வந்தமாதிரி, கொஞ்சம் ஓடிட்டு, திடீர்னு சிலை மாதிரி நின்னுடுவாங்க!
என்னன்னா, கூட வந்த ஜிம்மியோ, டாமியோ, நடு ரோடுன்னு பார்க்காம், காலைத் தூக்கி...(நின்றாடும் தெய்வமேன்னு பாட்டு பாடறேன்னு நினச்சிங்களா, அதான் இல்ல!) அங்கயே மூச்சா, நம்பர் டூ, எல்லாம் செய்யும்!! என்ன நாகரீகம்? இவுங்க நாய் வளர்க்கட்டும், ஏன் ஒரு குட்டி டினோசாரே வளர்க்கட்டும்! யாரு வேணான்னாங்க? அதுக்காக இப்படியா, காலைல வெளிய கூட்டி வந்து ரோட அசிங்கம் செய்வாங்க? தோராயமா, எங்க ஏரியாவுலேயே, ஒரு 20 நாய்ங்க காலைல எஜமானருங்கள இழுத்துகிட்டு வரும்! அத்தனையும் காலைக் கடன் முடிச்ச அடையார் க்ளப் ரோட்டையோ, இல்ல செனடாப் ரோடையோ நெனச்சுப்பாருங்க! பாவம், தெருக்கூட்டும் மக்கள்! ஒரு ஏரியாவே, இப்படி கலகலத்துப் போனா, இப்படி பல பெரிய தலைங்க இருக்குற எல்லா ஏரியாவையும் நெனச்சுப் பாருங்க! ஒரு பெரிய.. ஹ¥ம், வெணாம்; நினச்சாலே, குமட்டுது. இவங்கள "நாகரிகக்கோமாளிகள்''னு ஏன் கூப்பிடக்கூடாது?

அதே ஏரியாவுல இருக்குற ஒரு பெரிய போலீஸ் அதிகாரியின் பசங்க, திடீர்னு எங்க காம்பவுண்டுக்குள் வந்து கலாய்ச்சுட்டு போயிருக்காங்க! டிரைவர்ல இருந்து, வாட்ச்மேன் வரைக்கும், வீட்டு பெண்கள் உட்பட எல்லாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணாங்க! சரின்னு ஒரு சனிக் கிழமை, அவனுங்க, யாரு, என்னன்னு விசாரிக்க நேர்லயே பிடிக்கணும்னு, ஒரு முடிவா காத்திருந்தேன். பார்த்தா, திடீர்னு, அஞ்சலி சினிமால வர்ற ரெண்டு பொடிசுங்க 'சர்"னு சைக்கிள்ல உள்ள வந்தாங்க. வீட்டுக்குள்ளயிருந்து குரல், "இவங்கதாங்க, இவங்கதாங்க!" கைலயிருந்த கிரிக்கெட் மட்டைய (சே, ஒரு எலியைப் பிடிக்க குத்தீட்டி கொண்டுபோற மாதிரி.. ) கீழ போட்டுட்டு, வெளில ஓடுனேன், சுத்தி வந்து அதுல ஒருத்தன வளைச்சு பிடிச்சேன். "யார்றா நீ?"பின்னாடியே அடுத்த பொடிசும் வந்தான்..
"ஹலோ, கைய எடு!" - பொடிசு 1.
"நாங்க யார் தெரியுமில்ல?" - பொடிசு 2.
"யாரு?""எங்க அப்பா போலீஸ் ____ . (பெரிய தலைதான்!) ; பக்கத்துல வேடிக்கை பார்த்துகிட்டிருந்த டிரைவர், "ஆமா சார்,____ ன்னாரோட மகனுங்க. ரெண்டும் ரெண்டு வாலு."
"சரி, வாங்க உங்க வீட்டுக்கு போகலாம்!".
"ஓ, அப்பா வீட்லதான் இருக்கார்!"(ரொம்பவே தைரியமான பயலுங்க!)
"வீட்லயா?"
டிரைவர் மெதுவாகக் காதில் ஓதினான் ( சார், அவரு என்க்கொயரில மாட்டிகிட்டு ஹவுஸ் அரெஸ்ட் ஆகி வீட்லயே இருக்காரு!)சரிதான்; நல்ல அப்பா, நல்ல பசங்க! லேசாகக் கண்டித்து அனுப்பி வைத்தேன்!
-------------------
அப்புறம் ரொம்ப மனசப் பாதிக்கிற விஷயம், அக்கம்பக்கத்துக் காரனுங்க கண்டுக்காம போறதுதான்! எல்லாம் பெரிய பணக்காரங்க,ஆனால் பரஸ்பரம் சிரிக்கிறது கூட இல்லை! அதிசயமாக, மேல் ·ப்ளாட்டில் வசிக்கும் ஒரு பெங்காலி, அப்பாவின் கரும காரியங்களிலும், என் மனைவி திடீரென ப்ரசவ வலியால் துடிச்சப்ப ராத்திரி கார்ல கூட்டிகிட்டு போயும் உதவி செய்தார்!
--------------
இதைத் தவிர, இஸ்திரிக்காரன்லேர்ந்து, ஆட்டோக்காரன் வரைக்கும் , நம்ம ஏரியாக்குள்ள கால் வெச்சுட்டான்னாலே, சூடு வெச்ச மீட்டர் மாதிரி அவுங்க கேக்குற ரேட்டே தனி! இந்த கொடுமையிலிருந்து வெளி ஊர்லருந்து நம்ம வீட்டுக்கு வர்றவங்களை மீட்டுகிட்டு வரதுக்காகவே, ஒரு கார் வாங்கி வெச்சுருக்கோம்னா பாருங்களேன்!
அண்ணன் கம்பெனியும், நான் வேல பார்க்குற கம்பெனியுமே வெளிநாட்டுக் கம்பெனிங்க தான். அவங்க வரப்ப வரவேற்கவே, பவிஷ¤ பண்ணவேண்டிய கட்டாயம் அண்ணனுக்கு! வீட்டுல பார்த்தா, நாங்க சாதாரணமாத்தான் இருக்கோம். சிக்கனமா, அளவோட வெளிக்காத்து,கருப்பு படாம!- அதாவது பணக்காரக் காத்து மற்றும் கருப்பு(ப்பணம்) மேலே படாம வாழறோம்! "உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று..ங்கிறீங்களா?" வைத்துப்....பேசலையே? இருக்கோம்.ஊருக்கு பவிஷ¤, வீட்டுக்குள் சிம்பிள்! வேற வழி??

No comments: